பல்கலைப் பார்வை



மீன்க(லை)ளைப் படிக்க ஒரு பல்கலைக்கழகம்!

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் 2012ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தருவைக்குளத்திலுள்ள கடல்சார் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், பொன்னேரி மற்றும் நாகப்பட்டினத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மீன்வளத் தொழில்நுட்ப நிலையங்கள், சென்னையிலுள்ள மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், தஞ்சாவூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் பறக்கையிலுள்ள மீன்வளப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் தமிழ்நாடு மீன்துறையின் மீன்வளத் தொழில்நுட்ப பயிற்சி நிலையம் மற்றும் அலுவலர் பயிற்சி நிலையம் ஆகியவை புதிதாக தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

துவங்கப்பட்டதின் நோக்கம்

தமிழ்நாடு அரசின் மீன்வளத் துறைக்குத் தேவையான மீன்வளப் பட்டதாரிகளை உருவாக்குவது. மீன்வளர்ப்பு மற்றும் கடல் மீன் பதனிடும் நிறுவனங்களில் பணிபுரிவதற்குத் தேவையான தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவது. உயர் மீன்வளக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான நிபுணர்களைப் போதிய எண்ணிக்கையில் தயார் செய்வது. தமிழ்நாட்டின் கடல் மற்றும் நன்னீர் நிலைகளில் மீன்பிடிப்பு மற்றும் மீன் வளர்ப்பு மூலமாக மீன் உற்பத்தியைப் பெருக்கிட பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்வது. வேலையற்ற இளைஞர்கள், மீனவ மகளிர் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது. மீன்வளம் சார்ந்த பல்வேறு பயிற்சித் திட்டங்களை செயல்படுத்துவது இந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்றது. இதன் துணைவேந்தராக பாஸ்கரன் மணிமாறன் செயலாற்றி வருகிறார்.

உள்கட்டமைப்பு

இப்பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன. மீன் பண்ணைகளுக்கு பயிற்சிக்காக மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்ல கல்லூரி மற்றும் மீன்வளத் தொழில்நுட்ப நிலையங்களிலும் பேருந்து வசதிகள் உண்டு. மாணவர்களுக்கு ஆய்வரங்கம், வகுப்பறைகள், விளையாட்டு மைதானம் மற்றும் கலையரங்கம் போன்ற வசதிகள் உள்ளன. மேலும், மீன்வளத்தைப் பற்றிய அனைத்து புத்தகங்களும் சஞ்சிகைகளும் கொண்ட மிகப்பெரிய நூலகம் ஒன்றும் மீன்வளக் கல்லூரியில் உள்ளது. மீன்வள நுட்பங்களை விளக்கமாக எடுத்துரைக்கும் விரிவாக்க நூல்கள் தமிழ் மொழியிலேயே தொடர்ந்து எழுதி வெளியிடப்பட்டு ‘மீன்வளச்சுடர்’ என்ற காலாண்டு மலராக வெளிவருகிறது.

பாடத் திட்டம்

இப்பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பி.எஃப்.எஸ்ஸி (B.F.Sc) என்ற நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்பும், எம்.எஃப்.எஸ்ஸி (M.F.Sc) என்ற இரண் டாண்டு முதுகலை பட்டப்படிப்பும், முனைவர் (Ph.D) பட்டத்திற்கான மூன்றாண்டு ஆராய்ச்சிக் கல்வியும் இக்கல்லூரியில் வழங்கப் படுகின்றன. இளங்கலை மீன்வளக்கல்வியில் ஆண்டிற்கு 40 மாணவர்களும் முதுகலை மீன்வளக் கல்வியில் ஆண்டிற்கு 28 மாணவர்களும் முனைவர் பட்டப் படிப்பிற்கு ஆண்டிற்கு 13 மாணவர்களும் சேர்க்கப்படுகின்றனர்.

ஆராய்ச்சிகள்

மீன்வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன் நோயியல், மீன்பதனிடுதல், மீன்வளச்சூழலியல், மீன்வளப் பொருளியல், மீன்வள விரிவாக்கம், மீன்வள தரநிர்ணயம், மீன்பிடிப்பு, மீன்வளத் தகவல்தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இப்பல்கலைக்கழகம் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. தமிழ்நாடு அரசின் நிதி உதவியோடும் மற்றும் இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் போன்றவற்றின் நிதி உதவியோடும் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சித் திட்டங்களின் முக்கிய கண்டுபிடிப்புகள் பல்வேறு விரிவாக்க முறைகள் மூலம் மக்களுக்கு விளக்கப்பட்டு வருகிறது. மேலும், மீனவ மகளிருக்கு சுய வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் பொருட்டு மீன்வளத்தில் பல்வேறு பயிற்சிகளை வழங்கிவருகிறது.

பயிற்சி முகாம்கள்

கூட்டு மீன்வளர்ப்பு, அலங்கார மீன்வளர்ப்பு, விறால் வளர்ப்பு, நன்னீர் இறால் வளர்ப்பு, சுகாதார முறையில் மீன்களைக் கையாளுதல், மதிப்பூட்டிய மீன் பொருட்கள் தயாரிப்பு போன்ற முக்கிய தொழில்நுட்பங்களில், மீனவ மகளிரும், படித்த இளைஞர்களும், வேலைவாய்ப்பினைப் பெறும் பொருட்டு இப்பல்கலைக்கழகம் மீனவர் கிராமங்களிலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இதுவரை 400க்கும் மேற்பட்ட பயிற்சி முகாம்கள் நடத்தியுள்ளது. இதில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்.

இப்பல்கலைக்கழகம் மீன்வளத்தில் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தி வருகின்றது. கடல் வளம் குன்றாமல் காக்கவும், மீன்வளத்தைப் பெருக்கவும், மீன் உற்பத்தியை மேம்படுத்தவும், மீன் வணிகத்தை உயர்த்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், கடலோர மக்களின் பொருளாதாரம் மேம்படவும் இப்பல்கலைக்கழகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டுவருகிறது.

வேலைவாய்ப்பு மையம்

மீன்வளக் கல்வி பயின்றோருக்கு பணி வாய்ப்பினை பெற்றுத்தர, பிளேஸ்மென்ட் செல் என்னும் ‘பணிவாய்ப்பு வழங்கும் அமைப்பு’ வாயிலாகவும், மீன்வள பெரு நிறுவனங்கள் மீன்வளக் கல்லூரிக்கு வந்து நடத்தும் வளாக நேர்முகத் தேர்வு வாயிலாகவும் பணி வாய்ப்பினை மாணவர்கள் பெறுகிறார்கள். பல்கலைக்கழகத்தில், மாணவர்களுக்கென ஆலோசனை மற்றும் வேலைவாய்ப்புப் பெருக்க மையம் உள்ளது. இப்பிரிவு, இளநிலை பட்டதாரிகள் அவர்தம் படிப்புக்கேற்ப வேலைவாய்ப்புகளைப் பற்றி அறிந்துகொண்டு, பயனடைய உதவுகிறது.

மீன்வளம் பயின்றோர், மீன்வளக் கல்லூரிகளில் ஆசிரியர்களாகவும், மீன்துறைகளில் ஆராய்ச்சியாளர்களாகவும், மீன்வள ஆய்வாளர்களாகவும், விரிவாக்க அலுவலர்களாகவும், உதவி இயக்குநர்களாகவும், வங்கிகளில் அதிகாரிகளாகவும், மைய அரசின் மீன்வளத்துறைகளில் ஆராய்ச்சியாளராகவும், மீன் பண்ணைகளில் ஆராய்ச்சி மற்றும் நிர்வாகிகளாகவும், மீன் பதனிடும் தொழிற்சாலைகளில் தர நிர்ணய அதிகாரிகளாகவும், மீன்பதப்படுத்தும் நுட்ப அதிகாரிகளாகவும் மீன்வள ஆலோசகர்களாகவும் பணிபுரிய வாய்ப்புகள் உள்ளன. இது தொழிற்கல்வியாதலால், சுயமாகத் தொழில் தொடங்கவும் மீன்வளக் கல்வி பயன்படுகிறது.

- எம்.நாகமணி
 படம்: ராஜா