பல்கலைப் பார்வை



தமிழகத்தின் பெருமை

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978ல் சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது.

1978ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி, சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராசு தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாக பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

பின்னர் 1982ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்னும் பெயரிலிருந்து ‘பேரறிஞர்’ மற்றும் ‘தொழில்நுட்ப’ ஆகிய சொற்கள் நீக்கப்பட்டு ‘அண்ணா பல்கலைக்கழகம்’ என்று பெயர் மாற்றப்பட்டது. 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டன. நிர்வாக வசதிகளுக்காக 2007ம் ஆண்டு ஜனவரி முதல் அண்ணா பல்கலைக்கழகம் கீழ்க்கண்டவாறு 6 பல்கலைக்கழகங்களாகச் செயல்பட்டு வந்தது.

அண்ணா பல்கலைக்கழகம்,  சென்னை
- கிண்டி வளாகம்

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
 - தரமணி வளாகம்

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
 - மண்டல அலுவலகம், திருச்சிராப்பள்ளி

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
 - மண்டல அலுவலகம், திருநெல்வேலி

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
- மண்டல அலுவலகம், மதுரை

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
- மண்டல அலுவலகம், கோயம்புத்தூர்.

2007ம் ஆண்டு அனைத்து அண்ணா பல்கலைக்கழகங்களையும் ஒருங்கிணைக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் அனைத்து அண்ணா பல்கலைக்கழகங்கள் மற்றும் வளாகங்களும், அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டன. சென்னை அண்ணா
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக எம்.ராஜாராம் செயலாற்றிவருகிறார்.

உள்கட்டமைப்பு வசதிகள்: நிர்வாகக் கட்டிடம், நூலகம், டென்னிஸ் விளையாட்டு அரங்கம், ஆராய்ச்சி மையம், தொழில்முனைவோர் தொழிற்பயிற்சிக் கூடம், உயிரி வேதியியல், உயிரி தாவரவியல் போன்ற ஆய்வு மையங்கள் என அடுக்கடுக்காக பல்வேறு வசதிகளைக் கொண்ட விசாலமான வளாகத்தில் அண்ணா பல்கலைக்கழக முதன்மை வளாகம் அமைந்துள்ளது.

பல்கலைக்கழக வளாகங்கள்

அண்ணா பல்கலைக்கழகத்தின் அனைத்து மண்டல வளாகங்களும் மாணவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான எல்லா வித வசதிகளோடும் உள்ளன.
பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகம், தென்சென்னை பகுதியில் 100 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. அடையாறும் தமிழக கவர்னர் மாளிகையான ராஜ்பவனும் இவ்வளாகத்தை ஒட்டி அமைந்துள்ளன. முதன்மை வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி ஆகியவை அமைந்துள்ளன. இங்கு அந்தந்த துறை சார்ந்த பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இரண்டாவது வளாகமான மெட்ராசு தொழில்நுட்பக் கழகம், 20 ஹெக்டேர் பரப்பளவில் சென்னை, குரோம்பேட்டையில் அமைந்துள்ளது. மூன்றாவது வளாகம், தரமணியில் 80 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியின் சில ஆய்வுக்கூடங்கள் தரமணி வளாகத்தில் அமைந்துள்ளன.

நூலகம்

முதன்மை வளாகத்தின் கிழக்குப் பகுதியில் நூலகம் அமைந்துள்ளது. இது மூன்று அடுக்குகளாக அமைந்துள்ளது. இந்த நூலகம் 1978ம் ஆண்டு துவங்கப்பட்டு 2000ம் ஆண்டு முதல் தன்னாளுமையுடன் செயல்பட்டு வருகிறது. எல்லா துறைகளுக்குமான நூல்கள் ஒரு லட்சத்து  முப்பத்தைந்து ஆயிரத்துக்கு மேல் உள்ளன.

வளர் தமிழ் மன்றம் அறிவியல் தமிழின் வளர்ச்சியை முதன்மை நோக்கமாகக் கொண்டு முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்களால் 1986ம் ஆண்டு இப்பல்கலைக்கழகத்தில் துவங்கப் பெற்றதுதான் ‘வளர் தமிழ் மன்றம்’. இம்மன்றத்தின் மூலம் ‘களஞ்சியம்’ எனும் அறிவியல் இதழ் வெளியிடப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, பொறியியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழை நடைமுறைப்படுத்துவது, தமிழ் இலக்கிய விழாக்களை நடத்தி அவற்றின் மூலம் வாழ்வியல் ஒழுக்கநெறிகளை மாணவர்களுக்கு உணர்த்துவது, மாணவர்களுக்கிடையில் பல்வேறு தமிழ் இலக்கியப் போட்டிகளை நடத்தி அவற்றின் மூலம் அவர்களின் தமிழ் அறிவின் பார்வையை விசாலப்படுத்துவது, பொறியியல் தொழில்நுட்பத் துறைகளின் ஆய்வுக் கட்டுரைகளையும் முனைவர் ஆய்வுகளையும் தமிழில் வெளியிடுதல் போன்ற பல்வேறு தமிழ் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு தமிழுக்குத் தொண்டாற்றி வருகிறது அண்ணா பல்கலைக்கழகத்தின் வளர் தமிழ் மன்றம்.

ராமானுஜன் கணினி மையம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ராமானுஜன் கணினி மையத்தில் குறுகிய கால கணினிப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளியில் +1, +2 படிக்கும் மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கிக்கொள்ள இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ‘சி புரோகிராமிங்’ தொடர்பான இந்த ஒரு வார கால பயிற்சியில், 10, 11, 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல, கல்லூரி மாணவர்களுக்கு ஆரக்கிள் பில்/எஸ்க்யூஎல் புரோகிராமிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் அண்ணா பல்கலையில் பயிலும் மாணவர்களும், இதர மாணவர்களும் சேர்ந்து கொள்ளலாம். பகுதி நேரமாக இப்பயிற்சி அளிக்கப்படுவதால் இதில் சேர்ந்து மாணவர்கள் பயன் பெறலாம்.

செயல்பாடுகள்


தமிழ்நாட்டில் அரசு எஞ்சினியரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் எஞ்சினியரிங் கல்லூரிகள், சுயநிதி எஞ்சினியரிங் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 620 எஞ்சினியரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை 2 விதமாக நடைபெறுகிறது. அதாவது, மாணவர் சேர்க்கை இடங்களில் அரசு இட ஒதுக்கீட்டு இடங்கள் என்றும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கல்லூரியில் உள்ள இடங்களில் 65 சதவீதத்தை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் (அரசு ஒதுக்கீட்டுக்கு) கலந்தாய்வுக்கு கொடுக்க வேண்டும். ஆனால், சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளாக இருந்தால் அவர்கள் 50 சதவீத இடங்களைக் கொடுத்தால் போதும்.

பொதுவான கல்லூரிகள் மீதம் உள்ள 35 சதவீத இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக அழைக்கப்படுகிறது. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கையை அந்தந்த கல்லூரிகளே நிரப்பிக்கொள்ளலாம். அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் மாணவர் சேர்க்கைதான் பெரிய அளவிலானதாகும்.

- எம்.நாகமணி