தொழிலுக்கும் கடன்... படிக்கவும் கடன்...



தாட்கோ தரும் நிதியுதவித் திட்டங்கள்!

தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகவே செயல்பட்டு வருவதுதான், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் எனப்படும் தாட்கோ. இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும் நலத்திட்டங்களும் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று. அவற்றில் சில அத்தியாவசிய கடனுதவி, நிதியுதவித் திட்டங்களைப் பார்ப்போம்!

தொழில்முனைவோர் திட்டம்

ஆதிதிராவிட மக்கள் சொந்தமாகத் தொழில் துவங்க முதலீட்டை இந்தத் திட்டம் மூலம் தாட்கோ வழங்குகிறது. கடைகள் தொடங்க, மினி லாரிகள், டிராக்டர்கள், டூரிஸ்ட் கார்கள் வாங்க என அனைத்துக்கும் கடனுதவியை இதன்மூலம் பெறமுடியும். திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சத்தை மானியமாக தாட்கோ அளிக்கும்.

தகுதிகள்: விண்ணப்பதாரர் ஆதிதிராவிடராக இருக்க வேண்டும். 18-55 வயது மிகாமலும், கடன் கோரும் தொழிலில் முன் அனுபவம் உள்ளவராகவும் இருத்தல் அவசியம். குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இதுவரை அவரோ, அவர் குடும்ப உறுப்பினர்களோ தாட்கோ திட்டத்தின் கீழ் மானியம் பெறாதவராகவும் இருக்க வேண்டும்.

நிபந்தனைகள்: விண்ணப்பதாரர் கடன் மற்றும் மானியம் பெறப்பட்ட மாவட்டத்திலேயே தொழில் புரிய வேண்டும். இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் சொத்துகள் விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். 

விண்ணப்பம்: விண்ணப்பங்களை மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது, www.tahdco.tn.qov.in என்ற இணைய முகவரியில் டவுன்லோடும் செய்துகொள்ளலாம். புகைப்படம் ஒட்டி, பூர்த்தி செய்யப்பட்ட இரண்டு விண்ணப்ப நகல்களோடு, சாதிச் சான்று, வருமானச் சான்று, ரேஷன் கார்டு, விலைப்புள்ளி டின் நம்பர், முன் அனுபவச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் (வாகனக் கடனுக்கு மட்டும்) இவை தவிர வங்கிகள் கேட்கும் அனைத்து சான்றுகளையும் இணைத்து மாவட்ட மேலாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.  

வழங்கப்படும் முறை: தாட்கோ மாவட்ட மேலாளரைத் தலைவராகக் கொண்ட குழுவே விண்ணப்பங்களைத் தேர்வு செய்யும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பங்கள் தாட்கோ மானியத் தொகைக்கான பரிந்துரையுடன் வங்கிக்கு அனுப்பப்படும். பிறகு, வங்கி மேலாளர் அவற்றைச் சரிபார்த்து தொழிலுக்குத் தேவையான பொருட்கள் வாங்க நேரடியாக நிதி வழங்குவார்.

சுய வேலைவாய்ப்புத் திட்டம் இதே போல், 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்புத் திட்டம் என்கிற வகையில் சொந்தத் தொழில் செய்ய மானியம் மற்றும் கடனுதவி அளிக்கிறது தாட்கோ. அதனைப் பெறவும் மேற்சொன்ன முறைகளையே கையாள வேண்டும்.

மருத்துவர்களுக்கு கடனுதவி

எம்.பி.பி.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பி.டி.எஸ், பி.பார்ம், பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகள் முடித்த ஆதிதிராவிட இளைஞர்கள் மருத்துவமனை, மருந்துக்கடை, ரத்தப் பரிசோதனை நிலையம், முடநீக்கு மையம் போன்றவை அமைக்கவும் கடனுதவி வழங்குகிறது தாட்கோ. அதற்கும் மேற்சொன்ன வழிமுறைகள்தான். தகுதிகள் மட்டுமே வேறுபடும்.

ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு நிதியுதவி

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வு எழுதும் ஆதிதிராவிட இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி தாட்கோ மூலம் அளிக்கப்படுகிறது.

நிபந்தனைகள்: இந்த நிதியுதவியை புத்தகங்கள் வாங்குதல், நகலெடுத்தல் மற்றும் பயிற்சி மையக் கட்டணம் செலுத்துதல் போன்றவற்றிற்கு மட்டுமே செலவழிக்க வேண்டும். மேலும், பெறப்பட்ட தொகைக்கான அசல் ரசீது மற்றும் செலவழித்த விவரங்கள் ஆகியவற்றை தாட்கோவின் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.

தகுதிகள்: இந்த நிதியைப் பெற விண்ணப்பதாரர் ஆதி திராவிடராக இருக்க வேண்டும். இந்திய குடிமைப் பணியில் முதல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அடுத்து, முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். மேலும், மத்திய, மாநில அரசில் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ பணி செய்பவராக இருக்கக்கூடாது.

குரூப் 1 தேர்வுக்கு நிதியுதவி

தமிழ்நாடு குரூப் 1 தேர்வில் முதல்நிலை தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வு எழுத காத்திருக்கும் ஆதிதிராவிட இளைஞர்களுக்கும் 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது. சட்டப் பட்டதாரிகளுக்கு தொழில் தொடங்க நிதியுதவி... சட்டம் பயின்ற இளம் பட்டதாரிகள் தங்கள் வக்கீல் தொழிலைத் தொடங்க 50 ஆயிரம் ரூபாய் நிதிவுதவி வழங்குகிறது தாட்கோ. இந்த நிதியை, புதிய அலுவலகம் அமைக்க முன்பணம் கொடுக்கவும், மேசை, நாற்காலிகள், சட்டப் புத்தகங்கள் போன்றவை வாங்கவும் பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள் அதிகாரிகள்.

விண்ணப்பம்: மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலகத்தில் இவற்றுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கின்றன. அதனைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் மற்றும் காஸ்ட் அக்கவுன்டன்ட் தொழில் தொடங்க நிதியுதவிபட்டய கணக்கர் அல்லது செலவு கணக்கர் முடித்த இளைஞர்களில் 25 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் புதியதாக தங்கள் வேலையைத் தொடங்க 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கிறது தாட்கோ. இதுவும் அலுவலகம் அமைக்கும் செலவுகளுக்குத்தான்.

விண்ணப்பம்: இதற்கு தாட்கோ இணையதளம் வழியாகவே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் தொழில் செய்வதற்கான பதிவுச் சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவற்றோடு, பெட்ரோல், சிலிண்டர் நிலையங்கள் அமைக்க கடனுதவி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி திட்டம், பொருளாதார கடனுதவித் திட்டம், மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதித் திட்டம், மேலாண்மை இயக்குநர் நிதித் திட்டம் எனப் பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. அவற்றையும் ஆதிதிராவிட மக்கள் பெற்று பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, www.tahdco.com

- பேராச்சி கண்ணன்