வங்கித் தேர்வில் வந்துவிட்டது மாற்றம்!



அகில இந்திய அளவில் ஆண்டுதோறும் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதும் வங்கிப் பணியாளர் தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல்முறையாக மெயின் தேர்வு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உட்பட 20 பொதுத்துறை வங்கிகளுக்குத் தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (ஐ.பீ.பி.எஸ்) நிறுவனம் நடத்தும் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். (பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பணியாளர்களைத் தேர்வு செய்ய தனியாக தேர்வு நடத்துகிறது). ஐ.பீ.பி.எஸ் நிறுவனம் ஆண்டுக்கு ஒருமுறை வங்கிப் பணியாளர் தகுதித் தேர்வுகளை (அதிகாரி, எழுத்தர் பணிகளுக்கு தனித்தனி தேர்வு) நடத்துகிறது. முதலில் எழுத்துத் தேர்வும் அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். இவற்றில் விண்ணப்பதாரர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் தகுதிச் சான்று வழங்கப்படும். பொதுத்துறை வங்கிகள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை இந்தத் தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் தேர்வு செய்கின்றன.

இந்நிலையில், வங்கிப் பணியாளர் தேர்வு முறையில் ஐ.பீ.பி.எஸ் சில அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, முதலில் முதல்நிலைத் தேர்வு நடக்கும். அதில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தகட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். மெயின் தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் தகுதி (ரேங்க்) அளிக்கப்படும். முதல்நிலைத் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இந்த ஆண்டு அக்டோபரில் நடத்தப்பட உள்ள வங்கி அதிகாரி தகுதித் தேர்விலும், டிசம்பரில் நடக்கவுள்ள எழுத்தர் தகுதித் தேர்விலும் புதிய முறையை அறிமுகப்படுத்த ஐ.பீ.பி.எஸ் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விளக்கமளிக்கிறார் வங்கிப் பணிகளுக்கான பயிற்சிகளை வழங்கி வரும் டேலன்ட் ஸ்பிரின்ட் நிறுவனத்தின் சவுத் ரீஜன் ஹெட் சபிதா.

‘‘ஐ.பீ.பி.எஸ். அமைப்பு நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், 20 பொதுத்துறை வங்கிகள் நிர்ணயிக்கும் ‘கட் ஆஃப்’ மதிப்பெண் அடிப்படையில், நேர்காணலில் கலந்துகொள்ளலாம். அந்த நேர்காணலிலும் தேர்ச்சி பெற்றவர்கள் பணிக்குதேர்ந் தெடுக் கப்படுவார்கள்.

ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்தத் தேர்வில் ரீசனிங், ஆங்கில மொழி, க்வான்டிடேடிவ் ஆப்டிடியூட், ஜெனரல் நாலேட்ஜ் (வங்கித் தொழில் பற்றிய பொது அறிவு), கம்ப்யூட்டர் அறிவு ஆகியவை குறித்த மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். மதிப்பெண்கள் முறையே 50, 40, 50, 40, 20 என்று வழங்கப்படும். இந்தத் தேர்வு எழுதுவதற்கு இரண்டு மணி நேரம் வழங்கப்படும். ஆங்கில மொழிக்கான கேள்விகள் தவிர, மற்ற பிரிவுகளுக்கான கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் கேட்கப்படும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.

வங்கிப் பணிகளில் சேர மிகவும் சிரமப்படத் தேவையில்லை. ஆனால், ஒரு பட்டப்படிப்பும் ஆங்கில மொழித் திறனும் மிக மிக அவசியம். ஐ.பீ.பி.எஸ்., தேர்வில் வெற்றிபெற்று அடுத்தகட்டமாக நேர்முகத் தேர்வில் வெற்றிபெற்றால் போதும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் ஐ.பீ.பி.எஸ்., தேர்வில் ‘தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்கள் எவ்வளவு?‘ என்று உங்களுக்கு கேட்கத் தோன்றும். ஆனால், இந்தத் தேர்வில் அப்படி வரைமுறை ஏதும் கிடையாது.

வங்கிப் பணியில் ஐ.பீ.பி.எஸ்ஸின் பங்கு, தேர்வு நடத்தி மதிப்பெண்கள் அடிப்படையில் வரிசைப்படுத்துவது மட்டும்தான். அதாவது, வங்கிகளுக்கு அடுத்த ஒரு வருடத்தில் எத்தனை பணியாளர்கள் தேவைப்படுகிறார்களோ, அந்த எண்ணிக்கையை விட பத்து மடங்கு அதிக நபர்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதுதான் ஐ.பீ.பி.எஸ்ஸின் வேலை. 5000 பேர் தேவை என்றால் 50,000 பேரை இவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்காக, தேர்வெழுதிய அனைவரையுமே மதிப்பெண் அடிப்படையில் வரிசைப்படுத்துவார்கள்.

அதன் பின்பு, அந்த வருடத்துக்கு தேர்ந்தெடுக்க வேண்டிய நபர்கள் எத்தனை பேர் என்று பார்ப்பார்கள். 25,000 பேர் தேவை என்றால், மதிப்பெண் அடிப்படையில் முதல் 25,000 இடத்தைப் பிடித்தவர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கிறார்கள். குத்துமதிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், ஐ.பீ.பி.எஸ்., தேர்வில் மொத்த மதிப்பெண்ணான 200ல் குறைந்தது 170 மார்க் எடுத்தே தீர வேண்டும். ஆங்கில மொழித்திறன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அறிவோடு, சரியான வழிகாட்டுதலை கடைபிடித்தால் அது ஒன்றும் கஷ்டம் இல்லை. முறையாக பயிற்சி மேற்கொண்டு தேர்வில் வெற்றி பெற்று குழு கலந்தாய்வு, நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்றுவிட்டால் மூன்றாவது மாதமே பணி நியமனத்துக்கான கடிதம் வீடு தேடி வந்துவிடும்.

ஆனால், வங்கிப் பணி என்பது மிகவும் பொறுப்பு மிக்கது என்பதால் அதற்கான நபர்கள் திறன்மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று ஐ.பீ.பி.எஸ். முடிவு செய்துள்ளது. மேலும் வங்கிப் பணிகளுக்கான ஆள்தேர்வு எண்ணிக்கை பெரிய அளவில் இருக்கும். ஆகவே, தேர்வு முறையில் சிறிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இந்த புதிய தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், திறமையானவர்களை தேர்ந்தெடுப்பதற்காக யு.பி.எஸ்.சிக்கு நிகராக தேர்வு முறையை அமைக்கவேண்டும் என்ற ஐ.பீ.பி.எஸ்ஸின் நோக்கம் வரவேற்கத்தக்கதுதான்’’ என்கிறார் சபிதா.

- எம்.நாகமணி