ரயில்வே வேலையில் சேருவது செம ஈஸி !



உலகிலேயே அதிக பணியாளர்களைக் கொண்டு இயங்கும் பொதுத்துறை நிறுவனம் என்ற பெருமை இந்திய ரயில்வேக்கு உண்டு. பல லட்சம் ஊழியர்களைக் கொண்ட பெருமைக்குரியது இந்திய ரயில்வே. தினமும் பல கோடி பேர் ரயில்வே சேவையைப் பயன்படுத்துகிறார்கள். இத்துறையில் பணியாற்றுவது என்பது பெரும்பாலானோருக்கு நீண்ட நாள் கனவு. இவ்வளவு பெருமைகளைக் கொண்ட ரயில்வே துறையின் தேர்வு முறை, கல்வித் தகுதி போன்ற விவரங்களை அளிக்கிறார், போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிகளை வழங்கிவரும் ‘யுனைடெட் அகாடமி’யின் இயக்குநர் க்ஷி.அருள்கார்த்தி.

‘‘இந்தியாவில் உள்ள அனைத்து மண்டல ரயில்வே தேர்வு வாரியங்களும் ரயில்வே பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே நடத்திவந்தன. இந்தி தெரியாத, ஆங்கிலத்தில் போதிய தேர்ச்சியை பெற்றிராத மாநில மொழி மாணவ-மாணவிகளுக்கு இது மிகவும் சிரமமாக இருந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டிலிருந்து இந்தி, ஆங்கிலம் மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்பட இந்திய அரசியல் சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் ரயில்வே தேர்வுகளை நடத்திக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பேசப்படும் மொழிகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட மொழிகளில் வினாத்தாள்களை வழங்கவும் அனுமதி கிடைத்தது.

இதன்படி, தமிழ்நாட்டை உள்ளடக்கிய தென் மண்டல ரயில்வே தேர்வு வாரியத்திற்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்வுகளை நடத்த ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. ரயில்வே துறையில் குரூப்-சி, குரூப்-டி பணிகளுக்கான ஊழியர்களைத் தேர்வு செய்வதற்காக சென்னை ரயில்வே தேர்வு வாரியம் உட்பட நாடு முழுவதும் 21 ரயில்வே தேர்வு வாரியங்கள் இயங்கி வருகின்றன. அலுவலக எழுத்தர், கணக்கு எழுத்தர், டிக்கெட் கலெக்டர், கமர்ஷியல் எழுத்தர், ரயில் எழுத்தர், நூலக எழுத்தர் உள்ளிட்ட பதவிகள் குரூப்-சி பதவிகளாக கருதப்படுகின்றன.

கேங்மேன், கலாசி, தூய்மை ஊழியர்கள் உள்ளிட்ட பணிகள் குரூப்-டி பதவிகளாக கருதப்படுகின்றன. குரூப்-சி ரயில்வே பணிகளுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சியிலிருந்து +2வாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்குமுன் குரூப்-சி பணிகளுக்கான தகுதி, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு மட்டும் மதிப்பெண் வரையறை கிடையாது. இந்நிலையில், மேற்கண்ட குரூப்-சி பணிகளுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை +2வாக உயர்த்தி ரயில்வே தேர்வு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறைந்தபட்ச மதிப்பெண் விதிமுறையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அடிப்படைச் சம்பளம் ரூ.5,200, தர ஊதியம் ரூ.1900 மற்றும் ரூ.2,000 கொண்ட குரூப்-சி பதவிகளுக்கான கல்வித் தகுதி தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால் குரூப்-டி பதவிகளுக்கான கல்வித் தகுதியில் மாற்றம் ஏதுமில்லை. குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள் முதல் அனைவரும் இந்தத் தேர்வில் பங்கேற்கலாம். குரூப்-டி தேர்வில் பங்கேற்று முயற்சித்தால் வெற்றி பெற்று ரயில்வே வேலையில் சேர்ந்துவிடலாம்.அதே சமயம் வெற்றி என்பது எளிதாக கிடைக்கப் பெறும் பொருள் அல்ல, வெற்றியை அடைய கடுமையான முயற்சியும் வேண்டும். இந்தத் தேர்வில் வெற்றிபெற சில அன்றாட நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 

நாள்தோறும் செய்தித்தாள் படிக்க வேண்டும், தேவையானவற்றை குறிப்பு எடுக்க வேண்டும். நாள்தோறும் குறைந்தது பத்து மணி நேரம் படிக்க வேண்டும். படித்த பாடத்தையே மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். குரூப்-டி தேர்வைப் பொறுத்தவரை வினாத்தாள் அப்ஜெக்டிவ் டைப்பில்தான் இருக்கும். பொது அறிவுப் பகுதியில் கணிதம், புவியியல், நடப்பு நிகழ்வுகள், அறிவியல், அரசியல், வரலாறு ஆகியவை அடங்கும்.

கணிதம் 30%, புவியியல் 17%, நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது 20%, அறிவியல் 14%, அரசியல் 8%, வரலாறு 12% கேள்விகள் என பொதுவாக குரூப்-டி தேர்வில் கேட்கப்படுகிறது. விடைத்தாளைக் கொடுத்ததும் ஓ.எம்.ஆர். ஷீட்டை நிரப்புவதற்குமுன் அனைத்து வழிகாட்டுதல்களையும் கூர்ந்து படிக்க வேண்டும்.

வினாத்தாளைத் திறக்கச் சொன்ன பிறகே வினாத்தாளை திறக்க வேண்டும். 100 அப்ஜெக்டிவ் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இந்தி, உருது, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இருக்கும். ஒரே ஒரு சரியான விடைதான் இருக்கும். தவறான விடையைத் தேர்வு செய்தால் மதிப்பெண் குறைக்கப்படும். மூன்று தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். ஆகவே, மிகச் சரியாக தெரிந்த வினாக்களுக்கு மட்டும் விடையளிப்பது நல்லது. தேர்வு நேரம், ஒன்றரை மணி நேரம்.

இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்து உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். ஆண்களுக்கு 1000 மீட்டர் ஓட்டம், 4 நிமிடம் 15 வினாடிகளுக்குள் ஓடி முடிக்க வேண்டும்; பெண்களுக்கு 400 மீட்டர் ஓட்டம். 3 நிமிடம் 10 வினாடிகளுக்குள் ஓடி முடிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள். முயற்சியும் பயிற்சியும் இருந்தால் இந்தியா முழுவதும் ரயிலில் பயணம் செய்வது உள்பட பல்வேறு சலுகைகளை உள்ளடக்கிய ரயில்வே துறையில் பணியில் சேர்வது சுலபம்’’ என்கிறார், அருள் கார்த்தி.

அருள்கார்த்தி வழங்கியிருக்கும் ரயில்வே தேர்வு மாதிரி வினா - விடை அடுத்த பக்கங்களில்...

- எம்.நாகமணி