மூன்றாவது மனிதர்கள் 8





தணிகாசலம் திடுக்கிட்டுதான் போனார்.
உடனே அவருக்கு நடராஜனைதான் ஞாபகம் வந்தது. அந்த மனிதன் சொன்னது எத்தனை உண்மை. அபசகுணமாய் ஏதோ உளறுகிறார் என்று எரிச்சல் பட்டோமே. அவர் தங்கை மகளுக்கு நேர்ந்தது போல நடந்துவிடக்கூடாது என்று எச்சரித்தாரே... இப்படியெல்லாம் நடக்கும் என்று அந்த மனிதருக்கு முன்கூட்டி எப்படி தெரியும். கடவுளே இப்போது என்ன செய்வது... என்று திகைத்து நிற்கும் போதே செல்லில் நீலவேணி கதறினாள். “சீக்கிரம் வாங்க சித்தப்பா. என்னை காப்பாத்துங்க. அந்த அயோக்கியன் என்னைக் கொல்றதுக்குள்ள காப்பாத்துங்க. ரூம்ல வச்சு என்னை பூட்டிட்டு போயிருக்கிறான். குடிச்சுட்டு திரும்பி வந்து என்னை என்ன செய்வான்னு தெரியலை சித்தப்பா... சீக்கிரம் வாங்க.”
“தைரியமா இரும்மா. இதோ வந்திடறேன்.” என்றார். படபடப்பில் கை விரல்கள் நடுக்கம் கண்டு விட்டது அவருக்கு. மனைவியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பும்போது மணி ஐந்தரை. அப்போதுதான் ஃபேக்டரியிலிருந்து திரும்பி இருந்தார் அவர். காபி கூட குடித்திருக்கவில்லை.

வள்ளி, “தனியா போகாதிங்க. துணைக்கு நடராஜன் சாரை கூட்டிக்குங்க” என்றாள்.

நடராஜன் வீட்டுக்குப் போனபோது அவர் இல்லை. யாரோ கெஸ்ட்டை அழைத்து வர சென்ட்ரலுக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். அங்கிருந்து தானே பரத் வீட்டை அடைந்து பரபரப்பாக உள்ளே நுழைந்தார்.
ஹாலில் பரத்தின் அப்பாவும் அம்மாவும் டி.வி பார்த்துக் கொண்டிருந்தது வியப்பை அளித்தது.

“நீலவேணியை வெளியில் கூப்பிடுங்க. என்னய்யா மனுஷங்க நீங்க. ரொம்ப நல்லவங்கனு நம்பிதானே பொண்ணைக் கொடுத்தோம். ஒரு வாரத்துக்குள்ளேயே... அறைக்குள் அடைச்சு சித்ரவதை பண்றிங்க. என்னய்யா குறை வச்சோம் உங்களுக்கு. கேட்டதுக்கும் மேலாக கொட்டிக் கொடுத்தோம். நல்ல பையன் நல்ல குடும்பம்னுதானேயா கொடுத்தோம். கூப்பிடுய்யா வேணியை” என்று சத்தம் போட்டார்.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“நீங்கள் என்ன சொல்றிங்கன்னு புரியலை...” என்றனர்.

“இப்படி பேசினிங்கன்னா நான் போலீசோடு வரவேண்டியிருக்கும்” என்று எச்சரித்தார், “மரியாதையா எங்க பொண்ணை வெளியில விடுங்க.”

“கோபப்படாதிங்க. உங்க பொண்ணோ எங்க பையனோ இப்ப இங்க இல்லை”

“நம்பணுமா. இப்பதான் பொண்ணுகிட்டருந்து போன் வந்திச்சு. ஓன்னு கதறி அழறா.. காப்பாத்தச் சொல்லி வேண்டினாள். மரியாதையா எங்கிட்ட ஒப்படைக்கிறிங்களா... இல்லையா.”
“நீங்க சொல்றதை பார்க்க எங்களுக்கும் பயமும் பதட்டமுமாய் இருக்கு. கல்யாணத்துக்கு முன்பே பரத் தனி வீடு பார்த்துகிட்டு போய்ட்டான். எங்களுக்கும் அவனுக்கும் டெர்ம்ஸ் சரியில்லை. கல்யாணத்துக்கு வேண்டி கொஞ்சம் நாள் இங்கிருந்தான்.”

“என்ன உளர்றிங்க. உங்களுக்குள்ள டெர்ம்ஸ் சரியில்லைனு இப்ப சொல்றிங்க.”

“அதைப்பத்தி அப்புறம் பேசுவோம். வாங்க முதல்ல அவங்க இருக்கிற இடத்துக்கு போவோம்” என்றபடி சட்டையை மாட்டிக் கொண்டு வந்தார் பரத்தின் அப்பா. வண்டியில் தொற்றிக் கொண்டு வழிகாட்டினார். இரண்டு தெரு தள்ளி தனியாக இருந்த வீட்டை சுட்டிக்காட்ட... பைக்கை நிறுத்தி இறங்கினர்.
வீடு பூட்டியிருந்தது. உள்ளே இருட்டாக இருந்தது.

தணிகாசலம் செல்போன் ரிங் டோனை வெளிப்படுத்தியது. எடுத்தார். நீலவேணிதான்.

“பயப்படாதம்மா... நான் வந்துட்டேன். வீட்டு வாசல்ல நிக்கறேன். வீடு பூட்டியிருக்கு... உடைச்சுகிட்டு உள்ளே வர்ரேன். பயப்படாதேம்மா” என்றார். பைக்கிலிருந்த டூல் பாக்சிலிருந்து கருவிகளைக் கொண்டு போய் பூட்டை அடித்து திறந்து கொண்டு உள்ளே விரைந்தார். சுவிட்சுகளைத் தேடி விளக்குகளை உயிர்ப்பித்தார்.

“வேணி... வீட்டுக்குள்ள வந்துட்டேன். எந்த அறையில் இருக்கே” என்று குரல் கொடுத்தார்.

“பெட் ரூம்ல சித்தப்பா” என்று குரல் கொடுத்தாள்.

பெட்ரூம் வெளியில் தாழிடப்பட்டிருந்தது. தாழியை விலக்கி கதவை திறக்க.. கட்டிலில் துவண்டுபோய் உட்கார்ந்திருந்த நீலவேணி, சித்தப்பா” என்று அலறிக் கொண்டு வந்து அவர் மார்பில் சாய்ந்தாள்.

அவள் கன்னத்தில் நகக்கீறல் பார்த்து அதிர்ந்து போனார், தணிகாசலம்.

“இனிமே அவனோடு வாழ மாட்டம்மா. அவன்முரடன். குடிகாரன். முதராத்திரியிலிருந்தே நகைகளைக் கேட்டு டார்ச்சர் பண்ணினான். இரண்டு நகைகளைக் கொண்டு போய்ட்டான். மீதியையும் கேட்டு அடிச்சான்மா. அவனோடு வாழ மாட்டேன்மா” என்று அழுதாள் நீலவேணி.

“ஐய்யோ மோசம் போனோமே... நல்ல இடம்னு நினைச்சோமே. கடைசியில இது பாழுங்கிணறா இருக்கே” என்று ஒப்பாரி வைத்தாள் செந்தாமரை. கண்ணப்பனோ “ஏண்டா, தம்பி. நீயாவது விசாரிச்சிருக்கக்கூடாது” என்றார். தணிகாசலத்துக்கு பொசுக்கென்று கோபம் வந்தது.

“என்னை எங்கே விசாரிக்க விட்டிங்க. எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு கடைசியால்ல தகவல் சொன்னிங்க. நான் பார்த்து பேசின வரைக்கும் நல்ல பையனா தெரிஞ்சுது. இப்ப சொல்றாங்க. அவங்க அப்பா... எங்களுக்கும் அவனுக்கும் தொடர்பில்லை. அவன் தனியா இருக்கான். கல்யாணத்துக்காக வேண்டிதான் பத்து நாள் எங்கள் கூட இருந்தான்னு, முதல்லயே சொல்லியிருந்தால் நான் அலசி ஆராய்ந்து இருப்பேன்” என்றார் சூடாக.

“இப்பயும் ஒண்ணும் கெட்டுப் போகலை. வேணி நம்ம வீட்ல இருக்கட்டும். இங்கிருந்து வேலைக்கு போய் வரட்டும். அந்த பையனை சமாச்சாரம் என்ன ஏதுனு ஆராய்ந்து சிக்கல் இருந்தால் அதை என்னால் முடிஞ்ச வரை சரி பண்ணி அவனைக் கூட்டி வந்து ஒண்ணு சேர்க்கிறேன். என் வீட்டிலேயே புருஷனும் மனைவியும் இருக்கட்டும். மத்தத பிறகு பேசிக்கலாம்” என்றார்.
அந்த நேரம் பரத் வந்தான்.

அவனை அடிக்கப் பாய்ந்தார் கண்ணப்பன்.
அவரைப் பாய்ந்து தடுத்தார் தணிகாசலம்.
“ஓடி ஒளியாம தேடி வந்திருக்கிறான். எடுத்த எடுப்பில் கை ஓங்குவது சரியில்லை. அவனைக் கொஞ்சம் பேசவிடுவோம்.” என்றார்.

பரத்தோ... “வேணியை வரச்சொல்லுங்க”  என்றான் வாசலில் இருந்தபடி.

“ஏன் அடிச்சு புடுங்கினது போதாதா...” என்று சீறினாள் செந்தாமரை.

“கணவன் மனைவிக்குள் ஆயிரம் இருக்கும்” என்றான் பரத். “கட்டி வச்ச ஒரு வாரத்திலேயே தெரியுது நீ குடும்பம் நடத்திய லட்சணம். இனி எந்த தைரியத்தில் என் மகளை உன் கூட அனுப்புவோம்னு கேட்கற. இந்த நேரத்துக்கு புடிச்சு உள்ள வைக்காம இருக்கோமே. அதை சொல்லணும்.”

“தாராளமா செய்யுங்க. அதுக்காக பயந்து ஒளியற ஆள் நானில்லை. எனக்கு கேசும், போலீசும் புதுசில்லை. புகார் கொடுக்கிற அளவுக்கு நான் ஒண்ணும் குற்றம் பண்ணலை. எக்ஸ்ட்ராவா... வரதட்சணை கேட்டேனா.. சித்ரவதை செய்தனா. கொஞ்சம் கடன் தொல்லை. நகைகளைக் கேட்டேன். தரமறுத்தாள் கொஞ்சம் பிரச்சினையாயிடுச்சு. கணவனுக்கு ஒரு கஷ்டம்னால் மனைவி உதவக்கூடாதா. கோபத்துல ஒரு அடி அடிச்சிட்டேன். அதுக்கு சாரி கேட்டுக்கறேன்” என்றான்.

“உனக்கு அவ்வளவு கடன் பிரச்சின்னா கல்யாணத்துக்கு முன்பே சொல்லியிருக்க வேண்டாமா. உனக்கும் உங்க அப்பா அம்மாவுக்குமிடையே பிரச்சினை. நீ தனியாதான் இருக்கேங்கற விஷயத்தை ஏன் மறைச்சே... வேற என்னவெல்லாம் மறைச்சி ஏமாத்தியிருக்கே...”

“ஹலோ... என்னை ஏமாத்துக்காரன்னு மட்டும் சொல்லாதிங்க. எனக்கும் எங்க குடும்பத்துக்கும் இருக்கிறது என் பர்சனல் மேட்டர். அதையெல்லாம் வெளியில சொல்லணும்னு அவசியமில்லை. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. ஆஃப்ட்டரால் நான் ஒரு பொய்தான் சொன்னேன். வீண் பேச்சு எதுக்கு. நான் நீலுவை சமாதானப்படுத்திக்கறேன். அனுப்புங்க. ஆளில்லாத போது வந்து கதவை உடைச்சு களேபரம் பண்ணியிருக்கிங்க. எல்லாரும் என்னை ஒரு குற்றவாளி மாதிரி பார்க்கிறாங்க.”

“மனைவியை வீட்ல வச்சு பூட்டிட்டு போற அயோக்கியத்தை பண்ணினது நீ. மீட்டுகிட்டு வந்த எங்களை குறை சொல்றியா”
“ஏரியாவுல திருட்டு பயம். ஒரு சேஃப்டிக்காக பூட்டினேன்.”

“விட்டால் காதுல பூ சுத்திகிட்டே போவியே. இவ்வளவு நடந்த பிறகு பெண்ணை உன் பின்னால் அனுப்ப நாங்க ஒண்ணும் கேனைங்க  இல்லை. இதுக்கு ஒரு முடிவு கட்டணும்”
“என்ன பண்ணப் போறிங்க. என்னை அடிக்கப் போறிங்களா. போலீசுக்குப் போகப் போறிங்களா. வாங்க போவம்.”

“உன் பேச்சிலிருந்தே நீ நிதானத்தில் இல்லைனு புரியுது. போய்ட்டு காலைல தெளிஞ்ச பிறகு வா. பேசுவோம்.”

“நான் எப்பவும் குடிக்கிறவன் இல்லை. எப்பவாவது குடிக்கிறவன். உங்ககிட்ட பேச எனக்கும் நேரமில்லை. என் மனைவியைக் கூப்பிடுங்க. போகணும். நீலும்மா. உன்னை அடிக்க மாட்டேன் கண்ணூ. தப்பு தப்பு... பண்ணிட்டேன். எனக்கு ரொம்ப பசிக்குது. வா. வந்து சமைச்சு குடு... நீலூ” என்று குழறினான்.

நீலவேணி ஜன்னல் வழியாக பார்த்து, “போடா ராஸ்கல் நல்லவன் மாதிரி விழுந்து விழுந்து பழகிட்டு, கடைசியில் உன் கோர முகத்தைக் காட்டிட்டியே. இனி உன் முகத்திலேயே விழிக்க மாட்டேன். போயிடு.” என்று ஜன்னல் கதவை அடித்து சாத்தினாள்.