மூன்றாவது மனிதர்கள் 4





 மாலையில் வீடு திரும்பும்போது தணிகாசலத்தை எதிர்பார்த்து விருந்தாளி காத்திருந்தான். அவனை அடையாளம் தெரியவில்லை.
“என்ன மாமா பார்க்கிறிங்க. நாந்தான் மாரிமுத்து. செந்தாமரை அக்காவோட தம்பி”
“அட, அடையாளமே தெரியல.”
“சின்ன வயசுல பார்த்திருப்பிங்க”
“வளர்ந்துட்டே. என்ன பண்றே?”
“ஊர்ல மாமாவுக்கு விவசாயத்துல உதவி பண்ணி கிட்டிருக்கேன். அந்தக் குடும்பத்துக்கு நான் முதுகெலும்பு மாதிரி”
“நல்லது. இப்ப என்ன விஷயமா வந்திருக்க. அண்ணன் அனுப்பிச்சாரா”
“அவருக்கு தெரியாம வந்திருக்கேன் மாமா. உங்களால எனக்கொரு உதவியாகணும்.”
“என்ன உதவி”
“கேள்வி பட்டிருப் பிங்க. நீலவேணிக்கு கல்யாணம் வச்சிருக்காங்க.”
“ஆமாம்.”
“மாப்பிள்ளை நான் இல்லை”
“அதுவும் தெரியும்.”
“இது என்ன நியாயம் மாமா. சின்னவயசுலருந்தே அந்தப் பெண் எனக்குதான்னு நினைச்சுகிட்டிருந்தேன். காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தட்டிகிட்டு போன கதையாகிபோச்சு. கண் எதிரில் இருக்கிற உரிமையுள்ளவனை விட்டுட்டு முன்ன பின்ன தெரியாத ஒருத்தனுக்கு கொடுக்கறாங்க.”
“நீ என்ன படிச்சிருக்க”
“பத்தாவது”
“நீலவேணி பட்டம் படிச்சு வேலைல இருக்காள். உனக்கெப்படி தருவாங்க.”
“பெரிய மாமாவுக்கு உங்க பேர்ல பிரியம். நீங்க ஒரு வார்த்தை சொன்னால் அவர் கேட்பார்.”
“சரியா போச்சி. அங்கே கல்யாணமே நிச்சயமாயிடுச்சி. இந்த நேரம் சிபாரிசுக்கு வந்திருக்க பாரு. மாரி உனக்கும் நீலுவுக்கும் பொருத்தமில்லை. வேற பெண்ணைப் பார்த்து கட்டிக்க.”
“இல்லை மாமா. நீங்க சொன்னால் நடக்கும்.”
“மன்னிச்சுடுப்பா. நீ புரியாம பேசாத. உனக்கு உரிமையிருக்கலாம். ஆனால் தகுதி இல்லை. நீலு என் மகளா இருந்தாலே உனக்கு கட்டிக் கொடுக்க யோசிப்பேன். அண்ணனுக்கு சிபாரிசு பண்ணச் சொல்லி வந்துட்டியே. கிளம்பு” என்றார்.
அந்த வாரமே அண்ணன் கண்ணப்பன் தன் மகளுடன் வந்து சேர்ந்தார்.

“கல்யாணத்துக்குப் பிறகு சென்னைலதான வசிக்கணும். அதனால சென்னை பிராஞ்ச்சுக்கு மாற்றல் கேட்டிருந்தோம். இப்பவே கிடைச்சுட்டுது. ஊர்ல இந்த மாரிப் பய அலம்பல் வேற. மஞ்சள் கயிறை வச்சிகிட்டு சுத்தி வந்துகிட்டிருக்கான். கல்யாணம் முடியற வரை நீலவேணி இங்கே இருக்கட்டும்” என்றார்.
“தாராளமாய்” என்றார் தணிகாசலம். ஊரில் தலைக்கு மேல் வேலையிருப்பதாகச் சொல்லி அப்போதே கிளம்பிவிட்டார், கண்ணப்பன்.
நீலவேணிக்கு மகன் அறையை ஒதுக்கி சுத்தம் பண்ணிக் கொடுத்தார் தணிகாசலம். நீலவேணியை பார்த்ததில் மிக சந்தோஷமாக இருந்தது. பாவாடை சட்டை போட்டுக் கொண்டு ஸ்கூலுக்குப் போகும் பிராயத்தில் பார்த்தது. என்னமாய் வளர்ந்து விட்டாள்.
“காலம்தான் எத்தனை வேகமாய் ஓடுது. பாவாடை சட்டை போட்டுகிட்டு திரிஞ்சுகிட்டிருந்த சிறுமி கீரைத்தண்டாட்டம் வளர்ந்து ஆளாயிட்டியே. உன்னைப் பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா. இங்க உனக்கு ஒரு குறையும் இருக்காது. உனக்கு என்ன வேணுமின்னாலும் கேளு, நானும் சித்தியும் செய்து தர்ரோம்” என்றார்.
“ஆபீஸ் சைதாப்பேட்டை. இங்கிருந்து பஸ் வசதி இருக்கு. நான் வேணும்னாலும் ட்ராப் பண்றேன். எனக்கு பேக்டரில ஷிப்ட் டியூட்டிதான்”
“சிரமப்படாதிங்க சித்தப்பா. எல்லாம் பரத் பார்த்துக்குவான்” என்றாள் நீலவேணி, பெட்டியைத் திறந்து உன் உடமைகளை எடுத்து வைத்தபடி.

“யாரு... பரத்.”
வள்ளி குறுக்கிட்டு, “கல்யாணத்துக்கு முன்பு, வரப்போற கணவனா இருந்தாலும் ஜோடியாக எங்கும் போகக்கூடாது” என்றாள். “தனியா போ. அல்லது சித்தப்பா கூட்டிகிட்டு போய் விடட்டும்.”
“இன்னும் பத்து நாள்ள மேரேஜ். பரத் எத்தனையோ முறை ஊருக்கு வந்து போயாச்சு. நானும் அவரும் கோயில் குளம் தியேட்டர்னு சுத்தியாச்சு. நீங்க என்ன புதுசா பயப்படறீங்க.”
“என்ன சொல்ற, உங்க அப்பா அம்மா எப்படி சம்மதிச்சாங்க”
“கிராமத்துல இருந்தாலும் அவங்க விசால மனம் படைச்ச நாகரீகமானவர்களா இருக்காங்க. நீங்க என்ன சிடியில இருந்துகிட்டு இப்படி பத்தாம் பசலியா இருக்கிங்க”
“எது எப்படியாவது இருந்துட்டு போகட்டும். எங்க வீட்ல இருக்கிற வரை நாங்கள் சொல்றதுக்கு கட்டுப்பட்டுதான் நடக்கணும். எங்களை நம்பிதான் ஒப்படைச் சுட்டுப் போயிருக்காங்க. ஏதாவது தப்புத் தண்டா ஆயிடுச்சின்னா பதில் சொல்ல முடியாது.”
“உங்களுக்கு அந்த சங்கடம் வேண்டாம். நான் இப்பவே கிளம்பறேன்” என்று சூட்கேஸை எடுத்துக் கொண்டாள் நீலவேணி.
தணிகாசலம் பதறினார்.
“சித்தி உன் நன்மைக்கு தானே சொல்றாள். பிடிச்சால் எடுத்துக்க. இல்லைனா விடு. அதுக்கு ஏன் பெட்டியை தூக்கற. வைம்மா” என்று சமாதானப்படுத்தினார். அன்றிரவு நீலவேணி செல்லில் அந்த பரத்துடன் பேசிக் கொண்டே இருந்தாள். தணிகாசலமும், வள்ளியும் தூக்கத்தை தொலைத்தனர்.
காலையில் அந்த பரத் பைக்கில் வந்தான். இருபத்தைந்து வயது. வண்டி புதிது. லோனில் வாங்கியிருக்க வேண்டும். ஜீன்சும் எக்ஸ், எல் சைஸ் முழுக்கை சட்டையும் போட்டு இன் பண்ணியிருந்தான். கூலிங் கிளாஸ்.. சிகரெட் பழக்கம் உண்டு என்று உதடு சொன்னது.
“ஹாய்...” என்று கையசைத்தாள் நீல வேணி.
“உள்ளே வா” என்று அழைத்தாள்.
அவன் வண்டியை சாய்த்து நிறுத்தி சாவியை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தான்.
தணிகாலசத்தையும் வள்ளியையும் வணங் கினான்.

அடுத்த கணம் பரத்தை  இழுத்துக் கொண்டு வெளியேறினாள் நீலவேணி, “இன்னைக்கு டியூட்டியில் ஜாய்ன் பண்ணனும். லேட்டாகக் கூடாது” என்று.
பரத்திடம் பேச வேண்டும் என்று நினைத்திருந்த தணிகாசலத்துக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான்.
காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் வள்ளி பொருமினாள். “என்ன பொண்ணுங்க. ஒரு நிமிஷம் கூட ஓயாம அப்படி என்னத்தைதான் பேசுவாளோ அவன்கிட்ட. வந்ததிலிருந்து பேசிட்டே இருக்காள். இப்ப நம்மை ஒரு பொருட்டாகவே நினைக்காம இழுத்துகிட்டு ஓடறாள். கொஞ்சமாவது அச்சம் வேணாமா. கிராமத்ல வளர்ந்த பெண்ணா இவ...”
“டெக்னாலஜி வளர்ந்து போச்சு... சிட்டியில் கிடைக்கிற எல்லா நவீனங்களும் கிராமத்திலும் கிடைக்குது. மேற்கத்திய கலாசாரம் எங்கும் வேகமாய் பரவிகிட்டிருக்கு. இதில் கிராமம் என்ன நகரமென்ன. எல்லாம் ஒண்ணுதான்.”
“எது மாறினாலும் அடிப்படை மாறலாமோ”
“என்ன உன் ஆதங்கம்.”
“பத்துநாளோ பத்து நிமிஷமோ.. நம்ம பாதுகாப்பில் இருக்கிறவரை நம் சொல்படிதான் அவள் இருக்கணும். இல்லைனா பிடிக்காது”
“எனக்கும் ஒரு மாதிரியாதான் இருக்கு. வந்தவனை நமக்கு அறிமுகப்படுத்துவாள்னுதான் எதிர்பார்த்தேன். அவனிடம் பேசி சில விபரங்கள் தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன். அதுக்கு இடம் கொடுக்காமல் இழுத்துகிட்டு ஓடறாள். அவள் அவசரம் அவளுக்கு. ஆனால் ஒண்ணு. அவள் என் அண்ணன் பொண்ணு. தப்பா நடந்துக்க மாட்டாள். மத்த எதையும் நீ கண்டுக்க வேண்டாம். ஒரு பத்து நாள். அதுவும் ஜாயின் பண்ணதும் லீவு கல்யாணத்துக்கு லீவு போடப் போறாள். ரெண்டொரு நாள்ள லீவு கிடைச்சுட்டால். அவளுக்கு இங்கே என்ன வேலை. ஊருக்கு போயிடுவாள். அது வரைக்கும் நீ பொறுமையாதான் இருக்கணும்” என்றார்.
அன்று இரவு எட்டாகியும் நீலவேணி வீடு திரும்பவில்லை.