புதுப்பணக்காரர்களின் காலம்






கலி கலி என்பது வேறேதுமல்ல
விளைநிலங்களை பிளாட் போட்டு
வீடும் கட்டாமல்
விவசாயமும் செய்யாமல்
விலை ஏறும் என்று காத்திருப்பது
என்று குமுறினார்
பாரத கோயிலில் பதினெட்டு நாள்
அர்ஜுனன் தவசு சொற்பொழிவு
நிகழ்த்த வந்த பிரசங்கி
அவர் பிரசங்கம் நடத்த வேண்டிய
பனந்தோப்பு பிளாட் போடப்
பட்டுவிட்ட மனக்குறையில்!

பழைய பணக்காரர்கள்
தரும கைங்கரியத்திற்காக
ஒதுக்கியிருந்த நிலம் அது.
பிளாட் போட்டு விற்று
குறுக்குவழியில் கோடீஸ்வரனாகும்
உத்தி கண்டுபிடித்து
வெற்றி பெற்ற புதுபணக்காரர்களிடம்
கைமாறியிருந்தது.

மழை இல்லாத கிராமத்தில்
அர்ஜுனன் தவசு சொற்பொழிவுக்காவது
மழை கொட்டும் ஐதீகம் கூறி
ஊர் கூடி மன்றாடியது.

இது புதுப்பணக்காரர்களின் காலம்
மழைக்கும் அது தெரியும்.
அர்ஜுனனும் அதை அறிவான்.
விட்டுவிட்டு வேறு வேலை பாரும்
என்று வந்தது பதில்.
அர்ஜுனன் தவசின்றியே வந்தது அந்த வருட மழை.

- வையவன்