வழக்கு எண்: 18/9





வழக்கு எண்: 18/9 - படம் பெரும் வெற்றிபெற்றிருப்பதில் மகிழ்ந்து போயிருப்பது தயாரிப்பாளர் லிங்குசாமி மட்டுமல்ல; ஒட்டு மொத்த யூனிட்டும் அளவற்ற மகிழ்வடைந்துள்ளனர். அத்தனை நடிக நடிகையரும் புதுமுகங்களாக இருந்தும் படம் இவ்வளவு பெரிய வெற்றியை எட்டியிருப்பதில் கோடம்பாக்கமே குதூகலப்பட்டுக் கொண்டிருப்பது உண்மை. எந்தப் படத்திற்கும் இல்லாத நிகழ்வாக இப்படத்தின் 'பிரிவியூ' பார்த்த பத்திரிகையாளர் அனைவரும் கிளைமேக்ஸ் காட்சி முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டியது, படம் திரையிடப்பட்ட ஒவ்வொரு தியேட்டரிலும் எதிரொலிக்கிறதாம். சொல்லிச் சொல்லி நெகிழ்ந்து போன இயக்குநர் பாலாஜி சக்திவேல், பத்திரிகை யாளர்களைக் கூட்டி, அத்தனைபேர் முன்பும் கிழே விழுந்து வணங்கித் தன் நன் றியைத் தெரிவித்தார். வித்தியாசமானவர் தான்.

உயிரெழுத்து - பரமேஸ்வர் இயக்கும் படம். இவர் அர்ஜுன் நடித்த 'சூர்யபார்வை', ரம்பா - ஜோதிகா - லைலா நடித்த 'திரிரோசஸ்', சத்யராஜின் 'வணக்கம் தலைவா', 'லூட்டி' போன்ற படங்களை இயக்கியவர். மெட்ராஸ் பிலிம் அகாடமி தயாரிக்கும் உயிரெழுத்து, தீவிரவாதிகள் சப்ஜெக்ட், மூன்று பெண்கள் தங்கியிருக்கும் ஒரு வீட்டில் நான்கு தீவிரவாதிகள் மிரட்டலுடன் புகுந்து பதுங்கி, நகரை வெடிகுண்டு மூலம் நாசம் செய்யத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் முயற்சி வென்றதா? இல்லையா? என்பதை படு திரில்லுடன்  விவரிக்குமாம் படம். வர்ஷா, பிராச்சி, சூரியகிரண் ஆகிய மூன்று நடிகைகள்  மற்றும் முக்கிய தீவிரவாதியாக மகேஷ்ராஜா ஆகியோர் நடிக்கிறார்கள்.

சொல்லித்தர நானிருக்கேன் - .. ராமமூர்த்தி இயக்கும் 60-வது படம். இவர் கன்னடத்தில் ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கியவர். தமிழில் இதுவே முதற் படம். தனீஷ்பாபு நாயகனாக நடிக்க, ஜோடியாக வித்யா. முக்கிய வேடத்தில் ஊர்வசி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி, சிங்கமுத்து, மயில்சாமி, காதல் சுகுமார்  நடிக்கும் நகைச்சுவைப் படம் என்கிறார்கள்.

புல்லு - வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள். அதனால்தானோ என்னவோ 'புல்லு' என்றே ஒரு படத்திற்கு பெயரிட்டுள்ளர். திருத்தணி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் முற்றிலும் புதுமுகங்களே நடிக்கிறார்களாம். கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குவதுடன் இப்படத்தைத் தயாரிப்பவர் என்.ராஜசேகர். இசை சி.ஆர்.ரவிகிரண். படித்து, பட்டம் பெற்ற கிராமப்புற இளைஞன் ஒருவன் நகருக்கு வந்து அரும்பாடு பட்டு எப்படி முன்னேறுகிறான் என்பதுதான் கதை. இடையில் காதல் வந்து கலகலப்பூட்டுகிறது. நம்பிக்கையும் சமூக அக்கறையும் கொண்ட ஓர் இளைஞனின் கதை இது என்கிறார் இயக்குநர்.

சிக்கிமுக்கி - நார்வே இயக்குநர் ஸ்ரீகந்தராஜா இயக்கும் படம். இவர் என்னவோ பிடிச்சிருக்கு, எழுதியது யாரடி? ஆகிய படங்களைத் தயாரித்தவர். சிக்கிமுக்கியை இவர் இயக்குவதால், ஆர்.செந்தில்குமார் நார்விண்ட் பிலிம்ஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். ரித்தேஷ் கதாநாயகன். இவர்  'தலக்கோணம்' படத்தில் நடித்தவர். நாயகி திஷாபாண்டே. இவர் வெற்றிப்படமான 'தமிழ்ப்படம்' மூலம் முன்பே நன்கு அறிமுகமானவர். கஞ்சாகருப்பு, சூரி, மும்பை பூஜா, நர்மதா, நார்வே நகுலன், ரோமன் ஆகியோர் நடிக்கிறார்கள். பணத்தாசை, பாசம் இவற்றிற்கு நடுவே நடைபெறும் போராட்டமே கதைக் கருவாம். குடும்ப வாழ்வின் சிறப்பை இப்படம் பேசும் என்கிறார் இயக்குநர்.

- கௌதமநீலாம்பரன்