நான் பிராமணன் அல்ல





நான் பிராமணன் அல்ல
பிராமணத் துவேஷியும் அல்ல
நான் தலித் அல்ல
தலித் எதிரியும் அல்ல
மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும்
எந்த இட ஒதுக்கீட்டிற்கும் அருகதையற்ற
எவர் எந்த ஒதுக்கீடு பெற்றாலும்
அதைப் பற்றிய ஆட்சேபணையற்ற
சாதாரண மனிதன்
எந்தச் சாதிக்குழுவும் எந்தக் கட்சிப் பிரிவும்
உட்பிரிவும் சீந்திக் கூடப் பார்க்க லாயக்கற்ற
சாமான்யத் தமிழன்
தமிழனல்லாத தமிழனானவன் அல்ல
வீட்டிலும் வெளியிலும் கூடப்
பிறந்ததிலிருந்து தமிழ் பேசுகின்ற
ஐயோ பாவப் பச்சைத் தமிழன்
வேர்க்க வேர்க்க வெற்றுடம்புடன்
மூன்று சக்கர வண்டி ஓட்டி
மூட்டை சுமந்து கூலி செய்து
வேய்த்த வேர்க்கடலை தின்று
வயிறு கழுவும் தமிழ்ப்
பாட்டாளிகளைப் பார்க்கும்போதெல்லாம்
சத்தியமாய் பரிதவித்து உருகுபவன்
அதை  வைத்து அரசியலோ
ஏன் இலக்கியமோ கூடச்
செய்யத் தெரியாத அப்பாவி
என் உயிர் வாழும் உரிமைக்கு
ஓர் உத்தரவாதமும் இல்லை என அறிந்தவன்.
எனக்காக என்பொருட்டு
எந்த ஒரு வார்த்தை சொல்லவும்
எவருமற்ற இந்த ஸ்திதியில்
என்ன ஒரு நிம்மதி... என்ன ஒரு சுகம்!
அநாதைகளே அறிவர் அந்த சுகம்
- வையவன்