மலச்சிக்கல் மருந்துகள்



குடல் அசையாமல் இருப்பதால், மலம் இறுகுவதால் வருவது மலச்சிக்கல். மலச்சிக்கலுக்காக கொடுக்கப்படும் மருந்துகளும் பேதியை நிறுத்துவதற்காக கொடுக்கப்படும் மருந்துகளும்
ஒன்றுக்கொன்று எதிர்வினை புரிபவை.

மலச்சிக்கல் என்பது திடீர் என ஏற்படும் குடல் அசைவு சம்பந்தப்பட்ட (Partial Intestinal Obstruction),   குடல் அசைவே இல்லாத (Atonia) மற்றும் குடலில் அடைப்பு (Complete Intestinal Obstruction)  ஏற்படுவதால் உருவாகலாம். ஹைப்போ தைராய்டி சம் நோயிலும் குடல் அசைவு குறைவதால் மலச்சிக்கல் வரக்கூடும்.

மருத்துவர்கள் நோய்களுக்கான காரணங்களை பரிசோதனைகள் மூலம் அறிவார்கள். சில வேளைகளில் அறுவை சிகிச்சை அல்லது மருத்துவமனையில் அனுமதித்து மருந்து மற்றும் நீராகாரம் மூலம் குணப்படுத்த வேண்டி வரலாம்.

90 சதவிகித மலச்சிக்கல் வாழ்க்கை நடைமுறைகள் மற்றும் உணவால்தான் ஏற்படுகிறது. உணவில் சரியான அளவில் தினசரி தண்ணீர், காய்கறி, பழம் எடுப்பவர்களுக்கு மலச்சிக்கல் என்பது தெரியாத ஒரு விஷயமே. மலம் இறுகாமல் இருக்க நார்ச்சத்து மிகவும் அவசியம். காய் கனிகளில் நார்ச்சத்து சிறப்பாக உள்ளது.

உணவுடன், உணவுக்கு நடுவில் பச்சையாக காய் கனி சாலட் உண்டு பழகி மகிழும் குடும்பங்களில் இந்தப் பிரச்னை வரவே வராது. காய் கனி நிறைந்த உணவுகள் பருமனையும் குறைக்கும். 6 முதல்7 மீட்டர் (பெருங்குடல் ஒன்றரை மீட்டர் வரை, சிறுகுடல் 6 மீட்டர் வரை) நீளத்துக்கு உணவுக்குழாயில் உணவுபிரயாணம் செய்ய நீர் மிக அவசியம்.

உடலில் குடல் அசைவதற்கு நடப்பது மிகமிக அவசியம். காலையில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மலச்சிக்கல் வராது. படுத்திருக்கும் நோயாளிக்கோ, வயதான முதியவர்களுக்கோ மலச்சிக்கல் வர வாய்ப்புகள் அதிகம். உணவுக்குழாய் மேலேயிருந்து தொங்கும் ஓர் உறுப்பாக இருப்பதால் உடல் அசைவு குடல் அசைவைத் தூண்டும். சரியான அளவில் உண்ணாத நோயாளிகளுக்கோ, வயோதிகர்களுக்கோ மலச்சிக்கல் வரலாம்.

வளரும் குழந்தைகளுக்கு Toilet Training மிக முக்கியம். முகம் கழுவுவதுபோல, பல் துலக்குவதுபோல, மலம் கழிப்பதும் ஓர் அவசியமான அன்றாட செயல் என்பதை குழந்தைகள் மனதில் பதிய வைக்க வேண்டும். கழிவறையை உபயோகிக்க அருவெறுப்போ, வெட்கமோ, தயக்கமோ, ‘மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்’ என்ற எண்ணமோ தேவையில்லை.

இதை குழந்தைகளும் உணரச் செய்ய வேண்டும். ஒருவேளை கழிக்கும் உணர்வை அடக்கி வைத்தால், மீண்டும் அந்த உணர்வு ஏற்படாமல் மலச்சிக்கலாக மாறிவிட வாய்ப்புண்டு. மலச்சிக்கல் மருந்துகள் குடலிலிருந்து நீரை வெளியேற்றி மலத்தை மிருதுவாக்கி வெளியே வரச்செய்யும்.

குடல் அசைவைத் தூண்டும் மருந்துகளும் உள்ளன. Bran, Liquid Paraffin, Bisacodyl, Lactulose ஆகிய மருந்துகள் பல்வேறு பெயர்களில் கிடைக்கின்றன. பிரயாணத்தின் போது, நோய்வாய்ப்படும் போது, மோசமான, திடீரென ஏற்படும் மலச்சிக்கலுக்கு அந்தந்த நாட்களுக்கு, அந்த வேளைக்கு மட்டும் மருந்துகள் உண்டால் போதும். வயோதிகர்களுக்கும், உடல் நோய்களினால் வரும் தொடர்ச்சியான மலச்சிக்கலுக்கும் ஞிவீமீtணீக்ஷீஹ் யீவீதீக்ஷீமீ- ஙிக்ஷீணீஸீ மருந்துகள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எளிதாகும்.

தமிழ்நாட்டிலே நாட்டு வைத்தியத்தில் மலம் நன்றாகக் கழிக்க வேண்டுமென பேதி மருந்துகளை உண்ணும் பழக்கம் உண்டு. இதற்காக மலச்சிக்கலை போக்கும் மருந்து களை சாப்பிட்டு, ‘பேதி போனால் குடல் சுத்தமாகிவிடும், உணவுக்குழாய்க்கு அது நல்லது’ என, 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை வீட்டை ஒட்டடை அடித்துகழுவிப் பெருக்கி சுத்தம் பண்ணுவது போல, இந்த மருந்துகளைச் சாப்பிடுவது அபத்தமானதாகும்.

மற்ற பாலூட்டிகளைப் போலவே, மனிதனுடைய உணவுக்குழாயை சுத்தமாக வைத்திருக்க எல்லா சாத்தியக்கூறுகளையும் இயற்கை உள்ளடக்கி உள்ளது. இதைத் தாண்டி கிருமிகளினால் நோய் ஏற்படுமானால் கிருமி மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கும் நாட்களிலே எடுத்தால் உணவுப்பாதை சுத்தமாகிவிடும்.

உணவுக்குழாயில் உறையும் புழுக்களுக்கு புழு மருந்துகள் அவரவர் நோயின் தன்மையைப் பொறுத்து தருவதன் மூலம் முழுமையாக குணமாகி விடும். அதனால், வயிற்றை, உணவுப் பாதையை சுத்தம் செய்வதாக நினைத்து மலச்சிக்கல் மருந்துகளை மருந்துக் கடைகளில் வாங்கி உண்ணும் பழக்கம் தேவையற்றது.மலச்சிக்கல் மருந்துகளை காரணம் தெரிந்து எடுத்துக் கொள்வதே நல்லது. மலச்சிக்கல் மருந்துகளுக்கு மனரீதியாக, உடல் ரீதியாக பழகிவிடும் வாய்ப்புகள் உள்ளது.

மலச்சிக்கல் வராமல் தடுக்க தண்ணீர், காய், பழம் என உணவை மருந்தாக உட்கொள்ளலாம். மலச்சிக்கல் நோயாக இருக்கும் போதோ, வேறு நோயாக இருந்தாலோ, மருத்துவரை நாடி மருந்து எடுத்துக் கொள்வதே நல்லது. கையில் புண் என நோய் வந்தபிறகு எலுமிச்சைப் பழத்தை விரலில் செருகுவது, மஞ்சள் பூசுவது, நீரிழிவுக்கு வெண்டைக்காய் உண்பது என இப்போது பத்திரிகைகளில் வருகிற எல்லாம், நோய் வருவதற்கு முன் வராமல் தடுப்பதற்கு மட்டுமே.

நோய் என்று வந்தபின் ‘நோய் - மருத்துவர் - மருந்துகள்’ என்ற முக்கோணத்துக்குள் மக்கள் வந்துவிட வேண்டும். உணவால் மட்டுமே அல்ல... மருந்துகளுடன் மருத்துவர் உதவியுடன் நோயை வெல்வது எளிது! 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை வீட்டை ஒட்டடை அடித்து கழுவிப் பெருக்கி சுத்தம் பண்ணுவதுபோல பேதி மருந்து களை வாங்கி சாப்பிடுவது அபத்தமானதாகும்.

டாக்டர் மு.அருணாச்சலம்