மது என்கிற மூன்றாம் முத்தம்!



மயக்கம் என்ன?

‘‘மது என்பதும் காதலைப் போன்றதே. காதலின் முதல் முத்தம் ஒரு மேஜிக் போல நிகழும். இரண்டாவது முத்தம் மிக நெருக்கமானதாக இருக்கும். மூன்றாவது முத்தம் பழகிப் போனதாகவே இருக்கும். அதற்குப் பிறகெல்லாம் ஆடைகளை அவிழ்ப்பதுதான்!’’- ரேமண்ட் சாண்ட்லியர் (அமெரிக்க எழுத்தாளர்)

சில குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாகவே குடிப்பது ஒரு பழக்கவழக்கமாக இருக்கும். இது பெரும்பாலும் ஒருவிதமரபணு சார்ந்த பிரச்னைதான். ஆனால், சமீப காலங்களில் முதல் தலைமுறை குடிகாரர்கள் அதீதமாகி வருகிறார்களே... இதற்கு என்ன காரணம்? குடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதும்,

‘குடி’ என்பது குறித்தான மக்களின் மனவோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களுமே அடிப்படைக் காரணம். அறிமுகமாகி, ‘பழக்கம்’ என்ற நிலையில் தொடரும் போது அதுவே ‘போதை’ என்ற நிலைக்குள் தள்ளப்பட்டு விடும். இப்போது தினந்தோறும் குடிக்கிறவர்கள் பலரும், ஆரம்பத்தில் தாங்கள் இப்படி குடிக்கு அடிமையாகி விடுவோம் என்று போதையில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்!

மது போன்ற வேதிப்பொருள் கலந்த விஷயங்கள் மட்டுமல்ல... போதையாகத் தோன்றும் எல்லா விஷயங்களுமே - சூதாட்டம், ஷாப்பிங், செக்ஸ் - தொடர்ச்சி காரணமாகவே அடிமை நிலைக்குள்அடைக்கலம் ஆகின்றன.

இப்படி, நம் கண்ணில் படுகிறவர்கள்எல்லோரும் குடிக்குள் கிடந்தாலும், மதுவின் வாசனையைக்கூட முகர்ந்திராத, அந்த மாய வலைக்குள் விட்டில் பூச்சியாக விழுந்து விடாத மனிதர் பலரும் இருக்கத்தானே செய்கிறார்கள். அது எப்படி? மூளைதான் அதற்கும் காரணம். மூளையின் பகுத்துணர்வு மண்டலங்கள், மகிழ் தருணங்களைக் கட்டுப்படுத்துவதோடு, பின்விளைவுகளையும் அதிகம் ஆராய்கிறது. இந்த உண்மையை ‘பிரைன் இமேஜிங்’ முறையில் ஆராய்ச்சி செய்த போது, துல்லியமாக அறிய முடிந்தது.

குடி எப்படியெல்லாம் பாதிப்புகளை உண்டாக்குகிறது என்பதையும், மூளையே சோதனை எலியாக மாறி நமக்குச்சொல்கிறது. உதாரண சம்பவம் இதோ... போதை அடிமைகளாக இருந்த சில நபர்களுக்கு மறுவாழ்வு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகும், ஓராண்டு காலம் வரை, அந்த நபர்களுக்குச் சொல்லப்பட்ட பகுத்து உணரும் இலக்குகளை அவர்களால் சரிவரச் செய்ய முடியவில்லை. புதியவிதிகளுக்கு ஏற்ப அவர்களால் பொருந்திக் கொள்ளவும் இயலவில்லை.

அவர்களின் குடி அங்கே தொட்டு இங்கே தொட்டு, இறுதியில் மூளையின் செயல்பாட்டிலேயே கையை வைத்திருந்ததுதான் காரணம். பகுத்து உணரும் சக்தியை இழந்துவிட்ட பிறகு, வாழ்க்கையில் எந்த முடிவைத்தீர்க்கமாக எடுக்க முடியும்?

போதை அடிமைகளின் மூளையை ஸ்கேன் செய்த போது, ப்ரீஃப்ரென்டல் கார்டெக்ஸ் பகுதியின் செயல்பாடு மந்தமாகவே காணப்பட்டது. இந்தப் பகுதியில்தான்அறிவார்ந்த செயல்கள் தூண்டப்பட்டு,அவசியமற்ற செயல்கள் கட்டுப்படுத்தப்படும். இப்படிப்பட்ட மூளையின் செயல்பாடே முடக்கப்படும் அளவுக்கு வீரியம் பெற்றதாக இருக்கிறது போதை எனும் மாயை!

இந்த அளவு பாதிப்புக்கு உள்ளானோர் ‘திருந்தி வாழும்’ வாய்ப்பு, துரதிர்ஷ்டவசமாக 90 சதவிகிதம் இல்லை என்பதே, இது பற்றி ஆராய்ந்த விஞ்ஞானி பாலுஸ் எடுத்துரைக்கும் உண்மை. அவருடைய ஆராய்ச்சியின் போது, இப்படிப்பட்ட ஆசாமிகள் மறுவாழ்வு சிகிச்சை எடுத்துக்கொண்ட ஓராண்டு காலத்துக்குள்ளாகவே, மீண்டும் புதைகுழிக்குள் ஆசையாக ஓடிப்போய்விழுந்தார்களாம்!

தொடர்ந்து நிகழும் போதை ஆராய்ச்சியில், ரிவார்ட் சிஸ்டத்தை பயன்படுத்தி, இதுபோன்ற நபர்களை மீட்க முடியுமா என யோசித்து வருகிறார்கள். மகிழ் தருண எண்ணங்கள் மூளையில் உருவாகும் போதே, அவற்றைக் கட்டுப்படுத்த முடிந்தால், போதையின் இரும்புப் பிடியையும் விட்டு விட முடியுமே என்பதுதான் ஆராய்ச்சியின் அடுத்த கட்டம்.விரைந்து செல்லும் ஒரு காரை நிறுத்த இரண்டே வழிகள்தான் உண்டு. அதற்கான எரிபொருளை நிறுத்துவது அல்லது பிரேக் போடுவது.

இதை அடிப்படையாகக்கொண்டும் ஓர் ஆராய்ச்சி நடக்கிறது. போதையை விரும்பும் காரணிகளை அளிக்கும் ரிவார்ட் சிஸ்டத்திலுள்ள டோபமைனை தடுப்பது அல்லது குறைப்பது. இது வண்டிக்கான எரிபொருளை நிறுத்துவது என எடுத்துக் கொள்வோம்.

மற்றொன்று இயல்பாகவே மூளையில் உள்ள போதைக்கு எதிரான தடுப்பான்களை ஊக்குவிப்பது. இதை வண்டிக்கு டிஸ்க் பிரேக் போடுவது போல கற்பனை செய்வோம். இப்படி இருவிதங்களில் செயல்பாட்டுத்திறனை மேம்படுத்துவதன் மூலம், போதைக்குள் போகாமல் அடுத்த தலைமுறையையாவது காக்க முடியுமா? காலம் என்ன சொல்ல காத்திருக்கிறதோ? மூளையின் பகுத்துணர்வு மண்டலங்கள், மகிழ் தருணங்களைக் கட்டுப்படுத்துவதோடு, பின்விளைவுகளையும் அதிகம் ஆராய்கிறது.

அதிர்ச்சி டேட்டா

* சிர்ரோசிஸ் எனும் கல்லீரல் பிரச்னை காரணமாக உயிர் இழப்போரில் பாதிக்கும் மேற்பட்டோர் மதுவினால்தான் அந்த நிலைக்குத் தள்ளப் படுகின்றனர்.

* இவர்களில் 35-44 வயதுக்கு உட்பட்டோரே மிக அதிகம்.

(தகவல்களைப் பருகுவோம்!)