மாற்றம் ஒன்றே மாறாதது!



பனிப்பிரதேசத்தில் வாழும் கரடி, அது வாழும் தட்பவெப்ப  சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறது. ஐந்தறிவு கொண்ட ஜீவன்களேதன்னைத் தானே மாற்றிக் கொள்ளும் போது,ஆறறிவு படைத்த நம்மால் நம்மை சூழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொள்ள முடியாதா என்ன? இயற்கையிலேயே மனிதனுக்கு அந்த சக்தி உள்ளது!

‘மாற்றம் மட்டுமே நிரந்தரம்’ என்பதை உணர்ந்து, வேலையின் தன்மைக்கேற்ப தன்னிடமும் சில மாற்றங்கள் தேவை என்பதை புரிந்து கொண்டு, அவற்றைச் செயல்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். மனம் உவந்து தன்னைத்தானே சூழ்நிலைக்கேற்ப செதுக்கி கொள்ளத் தெரிந்தவரேமகிழ்ச்சியாகவும் திறம்படவும் செயல்பட முடியும். மாற்ற முடிந்த விஷயங்களைத்தான் மாற்ற முடியும்.

அதனால், நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பனிக்கரடி ‘குளிருதே குளிருதே... என்ன வாழ்க்கை இது’ என மனம் உடைந்து போகாமல், அச்சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறதே... அதே போல நிறுவனத்தின் சில கொள்கைகளை மாற்றவேமுடியாது எனத் தெரிந்தும் நம்மில் பலர்புலம்பியும், குறை சொல்லியுமே மனக்கசப்புடன் தினம் தினம் வேலையைத் தொடர்கிறோம்.

ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், ‘வி.ஐ.பி. வருவதற்கு முன்னரே நம்மை இவ்வளவு நேரமாக நிறுத்தி வைத்துள்ளார்களே...’ என புலம்பினால் மன அழுத்தம் நிச்சயம். அதை விடுத்து, மாற்ற முடியாத இச்சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, ‘மேலதிகாரி ஏதோ ஒரு காரணத்தால் நம்மை நிற்க வைத்துள்ளார்’ என உணர்ந்து,

‘நாம் நம் கடமையைத்தானே செய்கிறோம்’ என்ற உணர்வுடன், அந்த வேலையை ஏற்றுக்கொண்டாலே (Acceptance) மன அழுத்தம் விலகி விடும். இப்படி தங்களுடைய (திறன்கள், தேவைகள், எதிர்பார்ப்புகள்) சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொண்டால் மன அழுத்தம்அவர்களைத் தாக்காது.

இவர்களுக்கான மந்திரம் இதோ...‘மாற்ற முடிந்ததை மாற்ற முயற்சி செய்யலாம்மாற்றவே முடியாத விஷயங்களை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வோம்!’பணம் என்பது அனைவருக்குமே அடிப்படைத் தேவைதான்...

இதை மறுக்க முடியாது. ஆனால், பணம் தவிரவும் ஒருவரின் உத்தியோகத்தில் பல்வேறு மகிழ்ச்சி தரும் விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை எப்படி அறுவடை செய்யலாம்? வேலை நம்மை அறியாமலேயே நம்முடைய பல தேவைகளை பூர்த்தி செய்கிறது. ஒருமனிதனுக்கு பல அடிப்படைத் தேவைகள் மற்றும் வேறு பல உளவியல் தேவைகள்உள்ளன.

இது எல்லோருக்கும் ஒன்று போல இருக்காது. ஒருவருக்கு பதவி, புகழ் வேண்டியிருக்கும்... வேறு சிலருக்கோ நல்ல மனித உறவுகள் தேவையிருக்கும்... இன்னும் சிலருக்கோ மரியாதை தேவையிருக்கலாம். அவரவரின் தேவை எப்படி அந்த வேலையில் பூர்த்தியடைகிறதோ, அந்தளவுக்கு அவர் வேலையில் திருப்தியாக இருப்பார்.

இதனால்தான் ஒரே வேலையிலிருக்கும் ஒருவருக்கு அது மிகவும் பிடித்திருக்கிறது... மற்றொருவருக்கு அது வெறுப்பை ஏற்படுத்துகிறது. பணம் கொடுப்பதால் மட்டும் ஒருவரை வேலையில் திருப்திப்படுத்த இயலாது. மேலாளர்கள்தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களின் தேவையை உணர்ந்து, அதற்கேற்றவாறுஊக்கமளித்தால், ஊழியர்களின் வேலைத்திறனும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

எந்த ஒரு வேலையை எடுத்துக்கொண்டாலும், அதில் தனித்தன்மையும் மகத்துவமும் உள்ளது என்பதை உணர வேண்டும். உதாரணமாக... கழிப்பிடம் சுத்தம் செய்யும் தொழிலாளி அதை சரிவர செய்யவில்லை எனில், சுகாதாரக் கேடினால் பலரும் பாதிக்கப்படுவார்கள். எல்லாத் தொழிலுமேதெய்வத்துக்கு சமம்.

அதற்கு ஒரு அர்த்தம் உள்ளது. வேலை என்பது பணம் கொடுப்பதோடு, ஒருவரின் வாழ்க்கையையே அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. இதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், ஒரு நிமிடம் கண்களை மூடி, இந்தக் கேள்விக்காக விடையைச் சிந்தியுங்கள்.

1. நான் என் வேலையை சரிவர செய்யவில்லையென்றால்/பலநாள் விடுப்பு எடுத்தால்/ அதை வேறு யாரும் செய்யாவிட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

2. எத்தனை பேரை இது பாதிப்புக்குள்ளாக்கும்?

3. நான் எத்தனை பேர் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படுத்தி, ஊன்றுகோலாகவும் இருக்கிறேன்?

எல்லோரும் கருதுவது போல மருத்துவர் தொழில் மட்டுமே மகத்துவம் வாய்ந்தது இல்லை. எல்லாத் தொழிலுக்கும் வேலைக்கும் மகத்துவம் உண்டு. இதை இந்தக் கேள்வியின் மூலம் உணர்ந்திருப்பீர்கள். ஆகவே, ஒருவரின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வேலையை தெய்வம் போல வழிபட வேண்டும். இப்படிச் செய்தால் மன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக பல சாதனைகளைப் புரிந்து வாழ்வில் வெற்றி அடையலாம்.

வாழ்க்கையில், ஏதோ சில காரணிகள்/ சூழ்நிலைகளால் தவிர்க்க முடியாமல் தினந்தோறும் மன அழுத்தம் ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கும். அதை ஒரு பிரச்னையாக அணுகாமல், ‘சவாலாக’ எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம். சூழ்நிலை உருவாக்கும் தேவைகளை/சவால்களை (திருமணம், தேர்வு, விவாகரத்து, மரணம் போன்றவை) சமாளிக்கக்கூடிய அளவுக்கு தன்னிடம் திறன்/சக்தி இல்லை என ஒருவர் கருதினாலோ, அதற்கு தயார் நிலையில் இல்லை என்றாலோதான் மன அழுத்தம் ஏற்படுகிறது. உதாரணமாக...

ஒரு மாணவன் தேர்வு வருவதைக் கணித்து நன்றாக தயார் செய்து கொண்டாலோ / தேர்வை திறன்பட எதிர்கொள்ள முடியும் என தன்னம்பிக்கையோடு இருந்தாலோ, அவனுக்கு, தேர்வு என்பது அச்சுறுத்தும் விஷயமாகத் தெரியாது. சரியாக படிக்காத / தன் திறமையில் நம்பிக்கை இல்லாத மாணவனுக்கோ தேர்வானது பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மன அழுத்தத்தை சரிவர சமாளிக்கத் தெரிந்ததால்தான் டோனி, ‘கூல் கேப்டன்’ எனசெல்லமாக அழைக்கப்படுகிறார்.

மன அழுத்தம் எல்லோரையும் ஒரே மாதிரி பாதிக்காத காரணத்தினால், இது ஆற்றல் வாய்ந்த அற்புதப் படைப்பான ‘மனிதனால்’ சமாளிக்க முடிந்த ஒன்றே என்பதை உணர முடிகிறது. ஒருவர் தன் பலம், பலவீனம், ஆற்றல், திறன்பாடுகள், தேவைகள், லட்சியம் போன்றவற்றை உணர்ந்திருத்தல் மிகவும் அவசியம்.

மனிதன் தன் எண்ணங்களை ஆக்கப்பூர்வமாக முன் வைத்து, வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை நல்ல முறையில் வளர்த்துக்கொண்டு, தன்னம்பிக்கையுடன், எல்லா சூழ்நிலைகளுமே தன் கட்டுப்பாட்டில் இருப்பதாக நம்பினால், பல நேரங்களில் உளவியல்சார் மன அழுத்தம் பாதிக்காமலேயே தவிர்த்துவிடலாம்.

தவிர்க்க முடியாத சில தருணங்களில் மன அழுத்தம் ஏற்பட்டால், அதை ஆரோக்கியமான வழியில் சமாளித்து, நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் திகழலாம்.சிறியவர் முதல் பெரியவர் வரைசகலருக்கும் ஏற்படக்கூடும் பல்வேறு மனநலப் பிரச்னைகள் பற்றி வரும் இதழில் பார்ப்போம்.மன அழுத்தத்தை சரிவர சமாளிக்கத் தெரிந்ததால்தான் டோனி, ‘கூல் கேப்டன்’ என செல்லமாக அழைக்கப்படுகிறார்!

மன அழுத்தத்தை சமாளிக்கும் ஆரோக்கிய வழிகள்

மன அழுத்தத்தை சமாளிக்க/ குறைக்க சில வழிமுறைகளை பிற்பற்றுவது வழக்கம். அப்படிப் பின்பற்றும் வழிமுறைகளுக்
கேற்பவே ஒருவரின் உடல்/மனஆரோக்கியம் நிர்ணயிக்கப்படுகிறது.
1.நண்பர்களிடம் மனம் விட்டு பேசுதல்
2.ஆதரவான உறவுகளை / நட்பை ஏற்படுத்திக் கொள்ளுதல்
3.உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்துதல் (Managing emotions)
4.நல்ல சிந்தனைகளை உருவாக்கிக் கொள்ளுதல் (Positive thinking)
5.நேரத்தை சரியாகக் கையாளுதல் (Time Management)
6.பிரச்னை வரும் முன்பே அதைக் கணித்து, தயாராக இருத்தல்
7.சரியாக திட்டமிடுதல்
8.தன்னைப் பற்றி உயர்வாக கருதுதல்
9.இறுக்கமான விஷயத்தையும் நகைச்சுவையுடன் அணுகுதல்
10.ஆரோக்கிய உணவு உட்கொள்ளுதல்... உடற்பயிற்சி / ஏதேனும் விளையாட்டில் ஈடுபடுதல்... 6 - 8 மணி நேரம்தூங்குதல்
11.பிரச்னை ஏற்பட்டால் அதைக் கண்டு விலகாமல் எதிர்கொண்டு, அதன் காரணியை ஆராய்ந்து அதை சரி செய்யும்/  சமாளிக்கும் வழியை தேடிப்பிடித்தல்
12.தசைகளை தளர்வாக வைத்திருத்தல் (Relaxing Muscles)... தசைகளை ரிலாக்ஸ் செய்யும் செயல்பாட்டில் ஈடுபடுதல்.

மன அழுத்தத்தை சமாளிக்கும் ஆரோக்கியமற்ற வழிகள்

தங்களுக்கு மன அழுத்தம் உள்ளது என அறியாமலே அதைச் சமாளிக்க பலர் பின்வரும் வழிமுறைகளை கையாள்வார்கள். இப்பழக்கவழக்கங்கள் ஒருவரிடம் அதிகமாக காணப்பட்டால் அவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதையும் புரிந்து கொள்ளலாம். எப்போது மன அழுத்தம்ஏற்பட்டாலும், அதை குறுக்கு வழியில் சரி செய்ய (எளிதில் தப்பிக்க / தன்னையே மறக்க) தனக்குப் பழக்கப்பட்ட வழிமுறைகளையே மனம் பெரும்பாலும் கையாளும்.

இதுபோன்ற பழக்கத்துக்கு அடிமையாகி விடுவதும் வழக்கம். உதாரணமாக... பிரச்னை எப்போது வந்தாலும், தங்களை அறியாமலேயே சிலர் அதைச் சமாளிக்க மது அருந்துதல் / தீவிரமாக கணினி பயன்படுத்துதல் (Facebook, computer, games) போன்ற செயல்பாடுகளில் முனைவார்கள்.

இப்படி, பிரச்னையை நேரடியாக அணுகாமல், அதைத் தவிர்க்கும் பழக்கத்தினால், மன அழுத்தத்தை ஏற்படுத்திய உண்மையான பிரச்னை சரி செய்யப்படாமல் அப்படியே இருக்கும். அதைச் சமாளிக்க ஏற்படுத்திக் கொண்ட பழக்கங்களால் பல பக்க விளைவுகளும் ஏற்பட்டு, வாழ்க்கை மேலும் சிக்கலாகும்.

1.அதிகரிக்கும் சிகரெட் பழக்கம்/ குடிப்பழக்கம் / போதைப் பழக்கம்.
2.டென்ஷனைக் குறைக்க ஏற்கனவே கொடுக்கப்பட்ட மருந்தை அதிகமாக பயன்படுத்துதல்.
3.பிரச்னையிலிருந்து தப்பிக்க தூங்குவது/ தொலைக்காட்சி பார்ப்பது / கணினி உபயோகித்தல்.
4.அதிகமாக காபி, டீ, சாக்லெட் அல்லது குளிர்பானங்கள் பருகுதல்.
5.தூக்கத்துக்கு மருந்து வாங்கி சாப்பிடுதல்.
6.டென்ஷன் சம்பந்தப்பட்ட ஆரோக்கிய பிரச்னைகளுக்காக மருத்துவரை அணுகுதல்.
7.காரணமே இன்றி அதிக செலவு செய்தல்.

(மனம் மலரட்டும்!)