அபாயம் இங்கே ஆரம்பம்?



கவனம்

எக்ஸ்ரே, இ.சி.ஜி. என்பதெல்லாம் மருத்துவர்கள் பயன்படுத்துகிற வினோத வார்த்தைகள் என்கிற காலம் மாறி, செல்போன், டி.வி. என்பதுபோல தவிர்க்க முடியாதவையாகி வருகின்றன. உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை ஊடுருவிப் பார்க்கும் இந்த நவீன சோதனைகளால்பலவிதத்திலும் நமக்கு நன்மைதான்.

ஆனால், ‘நல்லது மட்டுமே நடக்கணும்னு நினைச்சா எப்படி பிரதர்?’ என்று வாழ்க்கை அவ்வப்போது நம் தலையில் தட்டுவதைப்போல, சக்திவாய்ந்த கதிர்வீச்சுகளால் செயல்படும் இக்கருவிகளால் புற்றுநோய் கூட உருவாகும் அபாயம் உண்டு என்று சில தகவல்கள் மிரட்டுகின்றன.

மருத்துவப் பரிசோதனைகள் தவிர்க்க முடியாத இன்றைய சூழலில், கதிரியக்க சிகிச்சை நிபுணரான அய்யப்பன் பொன்னுசாமியிடம் நம் சந்தேகங்களை முன்வைத்தோம்...‘‘இயற்கையாகவே நம்மைச் சுற்றி ஒரு கதிர்வீச்சு (Background radiation) இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஆகாயத்திலிருந்து காஸ்மிக் கதிர்கள் நம் மேல் விழுகின்றன. இதுபோன்ற கதிர்வீச்சுகளே எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், அல்ட்ராசவுண்ட், எம்.ஆர்.ஐ., மேமோகிராம் போன்ற மருத்துவப் பரிசோதனைகளிலும் வெளிப்படுகின்றன.

கதிர்வீச்சுகளின் அளவை சீவெர்ட் (Sievert) என்று கணக்கிடுவோம். இந்த அளவு, பரிசோதனை முறைக்கு ஏற்ப மாறுபடும். எக்ஸ்ரே பரிசோதனையில் கூட மார்புப் பகுதிக்கு எடுக்கப்படும் எக்ஸ்ரேயின் கதிர்வீச்சு குறைவாகவும் முதுகுக்கு எடுக்கிற எக்ஸ்ரேயின் கதிர்வீச்சு அதிகமாகவும் இருக்கும்...’’

எந்தப் பரிசோதனையில் கதிர்வீச்சு அதிகம்?‘‘சி.டி. ஸ்கேன், ஆஞ்சியோ - இரண்டிலும் கதிர்வீச்சின் அளவு அதிகம். எக்ஸ்ரே 2டி முறை பரிசோதனை என்பதால், 2 முறை வெவ்வேறு கோணங்களில் எடுக்க வேண்டியிருப்பதாலும் கதிர்வீச்சுகளின் அளவு அதிகமாகும். அல்ட்ரா
சவுண்ட் பரிசோதனையில் கதிர்வீச்சே கிடையாது.

எம்.ஆர்.ஐ. பரிசோதனை காந்தசக்தியின் மூலம் செயல்படுவதால் கதிர்வீச்சு பாதிப்பு இல்லை. மேமோகிராம்பரிசோதனையிலும் பாதிப்பு ஏற்படுத்தும்அளவுக்கு கதிர்வீச்சுகள் கிடையாது...’’
கதிர்வீச்சு அபாயங்களைத் தவிர்ப்பது எப்படி?‘‘தலையில் அடிபட்டால் ரத்தக்கசிவின்அளவைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். புற்றுநோய் ஏற்பட்டிருப்பவர்களுக்கு புற்றுநோய்க் கட்டி என்ன நிலையில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அடிக்கடிபரிசோதனை செய்ய வேண்டும்.

பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து, மருத்துவர்கள்சிகிச்சையில் மாற்றம் செய்வார்கள். இதுபோல அடிக்கடி சிகிச்சை செய்துகொள்ள வேண்டியவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தால் அடிக்கடி எக்ஸ்ரே எடுப்பார்கள். இது மார்புப்பகுதிக்கு எடுக்கப்படும் கதிர்வீச்சின் அளவைவிட பலமடங்கு அதிகம். இந்தக் கதிர்வீச்சின் அபாயத்தைத் தவிர்க்க அல்ட்ரா லோ டோஸ் சி.டி. ஸ்கேன் செய்து கொள்ளலாம்...’’மருத்துவர்கள் தற்காத்துக் கொள்கிறார்களா?‘‘பரிசோதனை செய்யும் அறைக்குள்செல்லும் மருத்துவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஈயத்தால் (Lead) ஆன உடையை அணிந்து கொள்வார்கள். இந்த உடையின் எடை 10 கிலோ இருக்கும்.

கதிர்வீச்சின்அளவைப் பதிவு செய்யும் TLD radiation monitor பேட்ச் போல் இருக்கும் கருவியை சட்டையில் அணிந்திருப்பார்கள். இந்த மானிட்டரை3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்தால், சம்பந்தப்பட்ட டாக்டர் அல்லதுடெக்னீஷியன் எந்த அளவுக்கு கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

ஆனால், இதுவரையாருக்கும் அளவுகடந்த கதிர்வீச்சு அபாயம் இருந்ததில்லை...’’பரிசோதனைகள் பாதுகாப்பானவைதானா?‘‘மருத்துவ கண்டுபிடிப்புகள் தீவிரமான ஆய்வுகளுக்குப் பிறகுதான் மக்களின் பயன்பாட்டுக்கு வருகின்றன.

அணுசக்திகட்டுப்பாட்டு வாரியம் இதில் கண்டிப்பான விதிமுறைகளைக் கையாள்கிறது. பரிசோதனை செய்யும் அறை எப்படி இருக்க வேண்டும் என்பது உள்பட பல விதிமுறைகள் இதற்கு உள்ளன. அதனால், மருத்துவப் பரிசோதனைகளின் கதிர்வீச்சால் இதுவரை யாருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டதில்லை...

’’கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டால் முன்னரே கண்டுகொள்ள முடியுமா?‘‘கதிர்வீச்சால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும்சிரமம். மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களும் பல ஆண்டுகள் கழித்தே ஏற்படலாம். அதனால், உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாது. புற்றுநோய் கூட இந்தக் கதிர்வீச்சால்தான் ஏற்பட்டது என்பதை உறுதியாக சொல்ல முடியாது!’’

கதிர்வீச்சால் புற்றுநோய் வருமா?

புற்றுநோய் சிறப்பு மருத்துவர் பெல்லாரமைன்...‘‘1945ம் ஆண்டு,ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகள் வீசப்பட்டபோது லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். அந்த கொடூர சம்பவம் நடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகும் ஜப்பானிய மக்களுக்கு உடல் உறுப்புகளில் பாதிப்பு, கருச்சிதைவு, புற்றுநோய் என்றுபல்வேறு மோசமான விளைவுகள் ஏற்பட்டன. இதனால்தான் கதிர்வீச்சுகள் பற்றிய பயம் எல்லோருக்கும் அதிகமானது.

அதனால், கதிர்வீச்சு என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மருத்துவர்களின் ஆலோசனையின்படி பாதுகாப்பான பரிசோதனைகளை எடுத்துக் கொள்வது நல்லது. இன்னொரு முக்கியமான விஷயம், தரமான பரிசோதனை நிலையங்களில்தான் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவசியம் இருந்தால் ஒழிய பரிசோதனை செய்யக் கூடாது!’’

ஞானதேசிகன்
படம்: ஆர்.கோபால்