பதற வைக்குது பறவைக் காயச்சல் பாலிடிக்ஸ்!



பின்னணி

‘அவ்வப்போது நடப்பதுதானே’ என நினைத்து நம்மில் பலரும் கடந்து போய்விடுகிற செய்திதான் அது. ‘பறவைக் காய்ச்சல்: கேரளாவில் வாத்து, கோழிகள் அழிப்பு’ என்கிற செய்தியும் அந்த ரகமே! பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குத் தொற்றினால் லட்சக்கணக்கில் மரணம் நேரும் அபாயம் உண்டு. அதனால்தான் அரசால் அதிரடி நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன...

 கோழிகளும் வாத்துகளும் கொல்லப்படுகின்றன. ‘உண்மையில், இந்தப் பறவைக் காய்ச்சலுக்கு மூல காரணமே கோழி வளர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ள 5 அமெரிக்க நிறுவனங்கள்... பின்னணியில் இருப்பது அமெரிக்க அரசு’ என்று அதிர்ச்சி ஊட்டுகிறார்கள் சில சமூகநல ஆர்வலர்கள்.

நம் வளர்ப்புப் பறவைகளையே பறவைக் காய்ச்சல் தாக்குகிறது... காரணம், பி5ழி1 என்கிற வைரஸ். இது மனிதர்களையும் எளிதாகத் தாக்கும் வாய்ப்பு உண்டு. இது பற்றி விரிவாகப் பேசுகிறார் மருத்துவர் புகழேந்தி... ‘‘அறிவியல் ஆய்வு முடிவுகளை ஒளிவு மறைவற்ற தன்மையுடன் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமா என்ற விவாதத்தை எழுப்பிய பெருமை பறவைக் காய்ச்சல் வைரஸையே சாரும்.

இந்த வைரஸை உயிரி போர் ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்கின்றன 2013ல் நடந்த இரு ஆய்வுகள். ஒன்று, அமெரிக்காவில் பேராசிரியர் Yoshihiro Kawaoka செய்த ஆய்வு. மற்றொன்று, Ron Fouchier என்ற டென்மார்க் ஆய்வாளரின் ஆராய்ச்சி. ‘மக்கள் அச்சத்துக்கு ஆளாவார்கள்... தீவிரவாதிகள் தவறாகப் பயன்படுத்தலாம்’ என காரணம் கூறி அந்த ஆய்வு முடிவுகளை அமெரிக்க அரசு மூடி மறைத்தது. அது 2013ல் பெரும் விவாதமாகவே மாறியது.

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு நாளொன் றுக்கு 5 லட்சம் கறிக்கோழிகளும் 10 லட்சம் முட்டைகளும் செல்கின்றன. சமீபத்தில் கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம், பதனம்திட்டா ஆகிய 3 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கோழிகள் எடுத்துச் செல்லப்படுவது தடை செய்யப்பட்டது.

இதனால், தமிழகத்தில் கோழிப் பண்ணையை நம்பி வாழும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இந்தப் பிரச்னைக்கு இன்னொரு பக்கமும் உண்டு. பறவைக் காய்ச்சலைக் காரணம் காட்டி தமிழகத்தி லிருந்து கேரளாவுக்கு கோழிகளும் வாத்துகளும் கொண்டு செல்லப்படுவது தடை செய்யப்பட்டதல்லவா? அதைப் போல இந்தியா, 2007ல் அமெரிக்காவுக்கு தடை விதித்தது.

இந்தியா, கோழி விற்பனைக்கு மிகப்பெரிய சந்தை உள்ள நாடு. இங்கு கோழி உணவு சாப்பிடுவது 2010ல் இருந்ததை விட 2014ல், 40 சதவிகிதம் அதிகரித்து, 37 கோடி டன்னாக இருக்கிறது. அப்படிப்பட்ட சந்தைக்கு அமெரிக்காவில் இருந்து கோழிகள் இறக்குமதி ஆகிக் கொண்டிருந்தன. இறக்குமதி செய்தவை அமெரிக்க நிறுவனங்கள். 2007ல், அந்தக் கோழிகளில் பறவைக் காய்ச்சலுக்குக் காரணமான H5N1 வைரஸ் இருப்பதைக் கண்டுபிடித்த இந்தியா, இறக்குமதிக்குத் தடை விதித்தது.

அமெரிக்க கோழி நிறுவனங்களின் இந்திய சந்தை மதிப்பு சாதாரணமானது அல்ல...ஆண்டுக்கு 3,000 கோடி டாலர். உடனே அமெரிக்கா, இந்தத் தடைக்கு எதிராக, உலக வர்த்தக மைய (WTO) நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. நீதிமன்றம் அமெரிக்க அரசுக்கு ஆதரவாக, ‘தடை செல்லாது’ என தீர்ப்பும் வழங்கியது.

இந்திய அரசு இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யவும் தீர்மானித்திருக்கிறது. இந்தச் சூழலில்தான் பறவைக் காய்ச்சல் இங்கே பரவுகிறது...’’ ஒரு தனிநபரோ, நிறுவனமோ, நாடோ பறவைக் காய்ச்சலைப் பரப்ப முடியுமா? முடியும் என்கிறார் மருத்துவர் புகழேந்தி. ‘‘இந்த வைரஸை செயற்கை முறையில் உருவாக்கி, ‘கல்ச்சர்’ செய்து ஒரு செல்லில் பாதுகாக்க முடியும்.

அதை ஒரு பறவைக்குச் செலுத்தவும் முடியும். அந்தப் பறவையை திறந்த கூண்டில் அடைத்து விட்டால், அதிலிருந்து மற்றொரு பறவைக்கு காற்று வழியாகவே இந்த வைரஸ் பரவிவிடும். கோழிப் பண்ணைகள் இருக்கும் இடத்தில் போய் தெளித்தால் கூட போதும். பறவைக் காய்ச்சலைத் தீர்மானிக்கும் சக்திகளாக Tyson Foods Inc, Gold Kist Inc, Pilgrims Pride, ConAgra Poultry, Perdue farms ஆகிய 5 அமெரிக்க கோழி உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றன. பறவைக் காய்ச்சலை ஏற்படுத்துவதற்காகவே சுகாதாரமற்ற முறையில் கோழிகளை வளர்ப்பது... உயிரி போர் ஆயுதமாக வளர்த்து மொத்தமாக பறவைகளைக் கொல்ல வைப்பது... இவை எல்லாமே இந்நிறுவனங்களின் வேலைதான்!

ஆசியாவில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதற்கு மூல காரணம் இந்த நிறுவனங்களிடமிருந்து இறக்குமதியான கோழிகள்தான். அமெரிக்காவின் வடமேற்கு அர்கான்சாஸ் மாகாணத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான 15 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன.

அவை Tyson Foods Inc நிறுவனத்தைச் சேர்ந்தவை என்பது ‘அசோசியேட்டட் பிரஸ்’ செய்தி நிறுவனம் மூலம் வெளியே தெரிந்தது. கோழிப் பண்ணைகளுக்கு இடையேயான வணிக ரீதியான போட்டியின் விளைவே பறவைக் காய்ச்சல் ஏற்பட முக்கிய காரணம்’’ எனப் பதற வைக்கிறார் புகழேந்தி.

‘‘1918ல் உலகையே உலுக்கிய ஜுரம் ‘ஸ்பானிஷ் ஃப்ளூ.’ 3 கோடி மக்களின் உயிரைக் காவு வாங்கிய இந்த ஜுரம் பரவக் காரணம் பி1ழி1 வைரஸ். இதற்கு ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் என பல தேசங்களைச் சேர்ந்தவர்கள் பலியானார்கள். அதுபோன்ற பாதிப்பை பறவைக் காய்ச்சலாலும் ஏற்படுத்த முடியும். ‘ஸ்பானிஷ் ஃப்ளூ அமெரிக்க ராணுவத்தின் மூலம் கான்சாஸ் என்னும் இடத்தில் உருவாக்கப்பட்டது... இளம் ராணுவ வீரர்களுக்கு வலுக்கட்டாயமாக செலுத்தப்பட்டது.

அவர்கள் மூலமாகவே பரவியது’ என்பதை ஆதாரப்பூர்வமாக வரலாற்றியலாளர் வில்லியம் இங்டாஹி பதிவு செய்திருக்கிறார். அவருடைய ‘தி பென்டகன்’ஸ் அலார்மிங் ப்ராஜக்ட் - ஏவியன் ஃப்ளூ பயோவார் வேக்ஸின்’ கட்டுரை, பறவைக் காய்ச்சலுக்கான பி5ழி1 வைரஸை அமெரிக்க அரசு உயிரி போர் ஆயுதமாக மாற்றி தயார் நிலையில் வைத்திருப்பதையும் தெளிவுபடுத்துகிறது. அப்படி இருக்கையில் அமெரிக்கா இந்த வைரஸை ஏன் உயிரி போர் ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது?

இவ்வளவு ஏன்... 2013ல் தமிழகத்தில், கால்நடைகளுக்கு ஏற்பட்ட ‘கோமாரி’ நோயே கூட உயிரி போர்முறை தந்திரமாக இருக்கலாம் என்று செய்தி வெளியிட்டிருக்கிறது ‘கார்டியன்’ பத்திரிகை. இந்தச் செய்தி, நம் நாட்டில் ஏற்படும் டெங்கு, சிக்குன்குன்யா, பன்றிக் காய்ச்சல், பிற வைரஸ் பாதிப்புகள் அனைத்திலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையே உணர்த்துகிறது.

இன்னொரு பக்கம், கடந்த 5 ஆண்டுகளில் 100க்கும் அதிக வைரஸ் கிருமி தப்பிப்புச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இவையும் தனிமனிதத் தவறாக, நிறுவனங்களின் விதிமுறை மீறலாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், இந்தச் சம்பவங்கள் திட்டமிட்டு ஏன் நடந்திருக்கக் கூடாது?’’ என சரமாரியாக கேள்விகளை அடுக்குகிறார் புகழேந்தி.

வியாபாரத்துக்காக உயிர்களைப் பற்றிக் கவலைப்படாத அளவுக்கு வணிக நிறுவனங்கள் கீழிறங்கிச் செயல்படுகின்றன என்பது உறைய வைக்கும் செய்தி. அதன் பின்னணியில்
உலகின் முக்கியமான அரசாங்கம் இருப்பதாகச் சொல்லப்படுவதும் நம்மை கதிகலங்க வைக்கிறது. எபோலா, சிக்குன்குன்யா, டெங்கு போன்ற தொற்றால் பரவும் நோய்கள் முன்பு எப்போதைக் காட்டிலும் அதிகமாக வலம் வருகின்றன.

வர்த்தகப் பின்னணியில் அந்த நோய்களையும் பறவைக் காய்ச்சலையும் வைத்துப் பார்த்தால் பகீரென்கிறது. சில வைரஸ் நோய்களுக்கு வெளிநாடுகளில் இருந்தே மருந்துகளை வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்தச் சூழலில் கேரளாவில் இருந்து பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவிவிடக் கூடாது என்பது மட்டுமே நம் பிரார்த்தனை. ‘கேரளாவில் ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் மனிதர்களையும் தாக்கும் திறன் கொண்டது’ - இப்படிச் சொல்லி யிருப்பவர் சாதாரணரில்லை... ‘வேர்ல்ட் ஆர்கனைசேஷன் ஃபார் அனிமல் ஹெல்த்’ அமைப்பின் இயக்குநர் பெர்னார்டு வால்லட்.

மேகலா