ஆவி நல்லது



ஆராய்ச்சி

நீங்கள் உண்மையாக நேசிக்கிற யாருக்காவது பரிசளிக்க விரும்புகிறீர்களா? ஸ்டீமர் வாங்கி கொடுங்கள். அது அவர்களது ஆரோக்கியத்துக்கு நல்லது. உங்கள் நட்புக்கும் நல்லது. அப்படி என்ன விசேஷம்... ஸ்டீமிங்கில்?

ஸ்டீமிங் என்பது வேறொன்றுமில்லை... நமது பாரம்பரிய சமைக்கும் வழிமுறையான அவித்தல் எனப்படும் நீராவியில் உணவுகளை வேகவைக்கும் முறைதான். பாரம்பரிய சமையல் முறையான அவித்தல் சமீப காலமாக விஞ்ஞானிகளிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பல பல்கலைக்கழகங்கள் அதன் பெருமையை பேசுகின்றன. அவித்தலின் அவசியம் குறித்து அவை கூறியிருப்பவற்றை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா?

இல்லினாயிஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஆவியில் வேகவைக்கும் உணவுகளின் பெருமைகளை இதோ இப்படி அடுக்கியிருக்கிறது. பிராக்கோலியில் இருக்கும் ஒரு வகை என்சைம் கேன்சரை தடுக்கும் தன்மை வாய்ந்தது. பிராக்கோலியை வறுத்தோ, வேக வைத்தோ சாப்பிடும் போது அது அழிந்து போய்விடுவதாகவும், ஆவியில் வேக வைக்கும் போதுதான் அதன் முழு பலன்களை நாம் அனுபவிக்க முடியும் என்றும் சொல்கிறது.

ஆவியில் வேக வைக்கும் போது, அதிலிருக்கும் குளுக்கோசினோலேட்ஸ், சல்பரோபேனாக மாறுகிறது. இதுதான் கேன்சர் வராமல் தடுக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பச்சையாக இருக்கும் பிராக்கோலியை விட, ஆவிகாட்டும் போது குளுக்கோசினோலேட்ஸ் 30 சதவிகிதம் அதிகரிக்கிறது. பசலைக்கீரை மற்றும் பிராக்கோலியை அவிக்கும் போது வைட்டமின் பி பாதுகாக்கப்படுகிறது. வேக வைத்தாலோ பாதி வைட்டமின்கள் அழிந்துவிடுகின்றன என்கிறது அந்த ஆய்வு.

சீன ஆய்வுகளும் அவிக்கப்பட்ட பிராக்கோலியில் வைட்டமின் சி மற்றும் குளோரபைல் போன்ற சத்துகள் பாதுகாக்கப்படுவதாக தெரிவிக்கின்றன. மீனைக் கூட அவித்து சாப்பிடும் முறை நல்லது என்கிறார்கள். மத்தி மீனில் கொத்தமல்லி சட்னி வைத்து தடவி அதை வாழை இலையில் வைத்து அவித்து சாப்பிடுவது நமது முன்னோர் பயன்படுத்திய முறை என்பதை இங்கே நினைவில் கொள்க. இந்த முறையில் நத்தை, இறால் போன்றவற்றையும் சமைக்கலாம் என்கிறார்கள்.

கேரட், பசலை, காளான், முட்டைகோஸ் போன்ற பல காய்கறிகளை பச்சையாக சாப்பிடு வதைவிடவும் அவிக்கும்போது அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், ஃபெருலிக் ஆசிட், கரோட்டினாயிட்ஸ் பாதுகாக்கப்படுகின்றன என்கிறது கார்னல் பல்கலைக்கழக ஆய்வு. வைட்டமின் சியும் வைட்டமின் பியும் நீரில் கரையக் கூடியவை. அதனால் கொதிக்க வைக்கும் போது சத்து இழப்பு ஏற்படுதல் சகஜம். அதீத வெப்பத்தினாலும் வைட்டமின் சி போய்விடும்.  

வைட்டமின் ஏ, இ, டி போன்றவை கொழுப் பில் கரையக்கூடியவை. அவற்றையும் ஆவியில் வேக விடுங்கள். அப்போது ஒரு சொட்டு நல்லெண்ணெய், கடலெண்ணெய் அல்லது கடுகெண்ணெய் பயன்படுத்துவது அந்த ஊட்டச்சத்துகளை நம் உடல் எடுத்துக்கொள்வதற்கு வசதியாக இருக்கும்! வறுத்தோ, வேக வைத்தோ சாப்பிடும் போது நிறைய சத்துகள் அழிந்து போய் விடுகின்றன. ஆவியில் வேக வைக்கும் போதுதான் முழு பலன்களை நாம் அனுபவிக்க முடியும்!

அவித்த உணவுகளே அருமை!


ஊட்டச்சத்து நிபுணர் ஷீலா சுவர்ணகுமாரி சொல்கிறார்... ‘‘நம் முந்தைய தலைமுறையோடு இந்தத் தலைமுறையை ஒப்பிட்டுப் பார்த்தால் நம் உணவுப்பழக்கம் ரொம்பவே மாறிவிட்டது. மாறிவரும் இந்த உணவுப்பழக்கத்தால் பருமன், நீரிழிவு, இதய நோய்கள் போன்ற லைஃப் ஸ்டைல் பிரச்னைகள் அதிகரித்து விட்டன. இது போன்ற பிரச்னையோடு வருபவர்களுக்கு, ‘இதை சாப்பிடலாம்... இதை சாப்பிடக்கூடாது’ என்று சொல்வதோடு, ‘இப்படி இப்படி சமைத்து சாப்பிடுங்கள்’ என்றும் சொல்கிறோம்.

பொதுவாக உடல்நிலை சரியில்லாதவர்களை எண்ணெய், காரம் தவிர்த்த உணவுகளை சாப்பிட சொல்வோம். அதிலும் அவிக்கப்பட்ட உணவுகளை பரிந்துரை செய்கிறோம். அவித்தல், பேக்கிங், கிரில்லிங் போன்ற எண்ணெய் இல்லாத உணவுமுறைகள் சிறந்தவை என்றாலும் நடுத்தர குடும்ப மக்களுக்கு பேக்கிங், கிரில்லிங் முறைகள் தெரிவதில்லை. அல்லது அந்த முறையை பெரும்பாலும் அவர்கள் பயன்படுத்துவதில்லை. அதனாலே இங்கே அவிக்கப்பட்ட உணவுமுறைகளை கையாள்கிறோம்.

அவிக்கப்பட்ட உணவுகள், கொழுப்பு குறைவாகவோ, கொழுப்பில்லாமலோ இருப்பதால் ஆரோக்கியமான உணவாகிறது. வேறு முறைகளில் உணவு தயாரிக்கும் போது அதீத வெப்பம் காரணமாகவும் சத்து இழப்புகள் ஏற்படும். அந்த நிலை அவித்தலில் தவிர்க்கப்படுகிறது.இப்போதைய தலைமுறையினர் காலை உணவு களை பெரும்பாலும் தவிர்க்கின்றனர். அல்லது சாண்ட்விச், கார்ன்ஃப்ளேக்ஸ் போன்றவற்றையே காலை உணவாக்கிக் கொள்கின்றனர்.

துரித உணவுகள் எவையும் அவித்தல் முறையில் செய்யப்படுவதில்லை. நமது பாரம்பரிய உணவுகளான இட்லி, இடியாப்பம், புட்டு ஆகியவற்றை இளம் தலைமுறை விரும்புவதில்லை. அவற்றின் மகிமையை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ஆவியில் வேக வைக்கும் உணவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

 வெளியே செல்லும் போது ஆவியில் வேக வைத்த மக்காச்சோளம் ஆகியவற்றை சிறு தீனியாக சாப்பிடுவது நல்லது. நீங்கள் ஆரோக்கியமானவராக இருக்க விரும்பினால் வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்த்து, அவித்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்!’’

- ஸ்ரீதேவி மோகன்