டியர் டாக்டர்



ஆபாசம் கலவாத பாசம் கலந்த கட்டிப்பிடி கட்டுரை - பொங்கல் நேரத்தில் வெளிவந்து கற்கண்டுச்சுவையை தந்தது!
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தில் ‘கட்டிப்பிடி வைத்தியம்’ என ஒரு காட்சி வரும். அது சினிமாவுக்காக எடுத்தது என நினைத்தேன்.  குங்குமம் டாக்டரில் கட்டுரை படித்தபின்தான் அதன் அவசியம் தெரிந்துகொண்டேன். அடேங்கப்பா... புட்டிப்பால் அருந்துவதால் என்னென்ன பிரச்னைகள்... தாய்மார்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை...
‘ஃபீடிங் பாட்டில்’ பயங்கரம்.
 எஸ்.துரைசிங் செல்லப்பா, உருமாண்டம்பாளையம்.

சாக்லெட், ஐஸ்க்ரீம், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகளை கண்ணாலும் பார்த்ததில்லை என சோனம் கபூர் கூறியது ஆச்சரியம்தான். நடிகையாக இருந்துகொண்டு நாகரிக உணவு உண்ணாமல் இருப்பதுதான் அவரது ஆரோக்கியத்துக்கு வழி. இனி நானும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறேன்.
- ஜெனோவா சந்தோஷ், கோவை.

கொசுவர்த்தி புகையை சுவாசிப்பது, 100 சிகரெட்டுகளின் புகைக்குச் சமம் என்பது அதிர்ச்சியின் உச்சம். ‘கொசுவிரட்டிகளும் சில பல கோளாறுகளும்’ கட்டுரையில் டாக்டர் வினோத்குமார், கொசுவிரட்டிகள் குறித்து அறிவுப்பூர்வமாகவும் விஞ்ஞானப்பூர்வமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தார். குங்குமம் டாக்டரின் தலையாய விழிப்புணர்வுப் பணி தொடர்ந்திட வேண்டுகிறேன்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி மற்றும் ஓ.எஸ்.பாலகிருஷ்ணன், கோவில்பட்டி.

அட்டைப்படம் பயமுறுத்தி அலற வைக்க அதை ‘அலட்சி யம்’ செய்யாமல் மடமடவென பக்கங்களை புரட்டி படித்தபோது நாக்கே பயத்தால் வறண்டு போனது. குடல்வால் நோய் பற்றி இதுவரை இப்படி யாருமே அலசி ஆராய்ந்து நல்வழிப்படுத்தியது இல்லை... நல்ல மருத்துவ தகவல் இது. பெண்கள் சம்பந்தப்பட்ட பல பிரச்னைகளை இம்முறை அலசி இருப்பது மிகவும் கவர்ந்தது. கடந்து வந்த 10 இதழ்களாக நல்ல மருத்துவ விஷயங்களை அள்ளி வழங்கும் குங்குமம் டாக்டரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!
- சுகந்தி நாராயணன், வியாசர்பாடி, சென்னை-39.

கூந்தல் பிரச்னைகளுக்கான காரணங்களை மருத்துவ ரீதியாக அலசியதோடு, எளிய முறையிலான வீட்டுச் சிகிச்சைகளையும் இதழ்தோறும் சொல்வது பார்லர் போக முடியாத என்னைப் போன்ற பெண்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது.
- சி.யமுனா, சென்னை-111.

‘பெண்களுக்கு இதயமே இல்லை... அதனால்தான் அவர்களுக்கு இதய நோய்கள் வருவதில்லை’ எனக் கிண்டலடிக்கும் ஆண்களுக்கும் இதயத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பெண்களுக்கும் அறிவுறுத்தியிருக்கிறது ‘கார்டியாக் அரித்மியா’ கட்டுரை.
- ஆர்.மாதவன், திருநெல்வேலி.