வெட்டு ஒண்ணு...துண்டு ரெண்டு அல்ல!



ஹெல்த்தி கிச்சன்

காய்கறிகள் நறுக்க கட்டிங் போர்டு பயன்படுத்துபவரா நீங்கள்? அது மரமோ, பிளாஸ்டிக்கோ - நீங்கள் பயன்படுத்தும் கட்டிங் போர்டினாலும் உங்கள் வயிற்றுக்கு ஆபத்து வரலாம் என்கிறது சமீபத்திய ஆய்வு.

சரியாக பராமரிக்கப்படாத மர கட்டிங் போர்டில் சமைத்த சிக்கனை வெட்டும் போது, லிஸ்டீரியா எனும் பாக்டீரியா கிருமி எளிதாக பரவிவிடுகிறதாம். மர கட்டிங் போர்டில் உள்ள நுண்துளைகள் பாக்டீரியாக்கள் வாழ்வதற்கு உகந்த இடமாக இருக்கிறதாம். அதனால் சிக்கனை பிளாஸ்டிக்கால் ஆன கட்டிங் போர்டில் வைத்து வெட்டுவதே நல்லது என அந்த ஆய்வில் சொல்கிறார்கள்.

2011ல் ‘அப்ளைய்ட் மைக்ரோபயாலஜி’ ஆய்விதழ் நடத்திய ஆய்வில் மர போர்டு, பிளாஸ்டிக் போர்டு இரண்டிலும் சமைத்த சிக்கனை வெட்டும் போது பாக்டீரியாக்கள் பரவி சிக்கன் சீக்கிரமாக கெட்டுப்போய்விடுவது கண்ட றியப்பட்டுள்ளது. மர போர்டு, பிளாஸ்டிக் போர்டு இரண்டிலும் எளிதாக தொற்றக்கூடிய ‘கேம்பைலோபாக்டர் ஜெஜுனி’ எனும் பாக்டீரியா, அசைவ உணவுகளை வெட்டும்போது அதில் பரவி சாப்பிடுபவர்களின் வயிற்றுக்கும் வஞ்சனை செய்கிறதாம்.

சிக்கன் போன்ற உணவுப் பொருட்களைக் கண்டால் குதியாட்டம் போட்டுப் பரவுமாம் இந்த பாக்டீரியா! சுத்தமாகவும் நல்ல கண்டிஷனிலும் கட்டிங் போர்டு இருந்தால் மட்டுமே இவ்வகை பாக்டீரியாக்களிடம் இருந்து தப்பிக்க முடியும்... கட்டிங் போர்டை நுண்ணுயிரிகளிடம் இருந்து பாதுகாக்க சில வழி முறைகள்...

*காய்கறிகளோ, அசைவ உணவுப்பொருட்களோ நறுக்கி முடித்தபின் அப்படியே கவிழ்த்துப் போடாமல் சோப் போட்டு லேசான வெந்நீரில் நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். கழுவிய பின் சுத்தமான துணியை வைத்து ஈரப்பதம் போகத் துடைக்க வேண்டும். அதன் பிறகு நன்றாக உலர வைப்பதும் முக்கியம்.

*கட்டிங் போர்டில் அதிகக் கீறல்கள் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கீறல் இடுக்குகளில் பாக்டீரியா கிருமிகள் எளிதில் தொற்றும்.

*அவ்வப்போது பிளீச்சிங் திரவம் சில சொட்டுகளை கட்டிங் போர்டில் விட்டு அதன் பின்னால் நீரால் கழுவினால் நுண்ணுயிரிகள் அண்டாது.

*தரமான, கெட்டியான எளிதில் கீறல் விழாத பலகை களை காய்கறி நறுக்கப் பயன்படுத்தலாம்.

*மரத்தால் ஆன போர்டுகளில் சிறுதுளைகள் ஏற்பட்டிருந்தால் அடிக்கடி எண்ணெய் விட்டு தேய்த்து சுத்தமாக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கிருமிகள் தொற்றாது.

*சிக்கன், மீன், இறால் போன்ற உணவு களை வெட்டுவதற்கு தனி போர்டும் காய்கறிகள், கீரைகள் வெட்ட தனி போர்டும் வைத்துக் கொண்டால் இன்னும் நல்லது. அதிக கீறல்கள் விழுந்துவிட்டால் கட்டிங் போர்டை மாற்றிவிட வேண்டும்.