தொண்டையில் தீ!



உணவே மருந்து

உலகில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் மாதம் ஒரு முறையேனும் சந்திக்கும் பிரச்னை அசிடிட்டி. மனித உடலையும் இரைப்பையையும் கிராபிக்ஸில் காட்டி, அசிடிட்டி ஏற்படுத்தும் விளைவையும் அதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சிரப் குடித்தால் ஏற்படும் மாற்றத்தையும் காட்டும் விளம்பரங்கள் எல்லா சேனல்களையும் நிரப்பியிருக்கின்றன.

அசிடிட்டிக்கான மருந்துக்குப் பின்னால் ஒரு மிகப்பெரும் சந்தை இருப்பதை இதன் மூலம் உணர முடிகிறது. சிரப், மாத்திரைகளாக மட்டுமல்லாமல் பல சுவைகளில் உள்ள தூளை தண்ணீரில் கலக்கிக் குடித்தால் சில நொடிகளிலேயே குணமடையும் என்றும் கவனம் ஈர்க்கின்றன சில நிறுவனங்கள்!

வயிற்று வலியோ, நெஞ்செரிச்சலோ வந்தால் பொத்தாம்பொதுவாக அசிடிட்டி என்று சொல்லி விடுகிறோம். மருந்துக்கடைகளில் அசிடிட்டி மருந்து களை வாங்கி உட்கொண்டு நிவாரணம் தேடிக் கொள்ளும் நமக்கு, ‘அது தற்காலிக நிவாரணமே’ என்பது தெரிவதில்லை. அதாவது... நோய் வரும் பட்சத்தில் மருந்து, மாத்திரை உதவியோடு நோயை தற்காலிகமாக விரட்டி விடு
கிறோமே தவிர, நோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. அசிடிட்டி என்றால் என்ன? இரைப்பை குடலியல் சிகிச்சை நிபுணர் பாசுமணியிடம் கேட்டோம்.

‘‘அசிடிட்டி என்பதை தமிழில் ‘அமில நிலை’ என்று சொல்லலாம். நாம் சாப்பிடும் உணவு இரைப்பைக்குச் சென்றதும் இரைப்பை யில் உள்ள ஹைட்ரோக்ளோரிக் அமிலமும், பெப்சின் எனும் நொதிநீரும், இன்ன பிற நொதிகளும் இணைந்து உணவைக் கூழாக்குகின்றன. அந்த இரைப்பைக் கூழுக்கு Chyme என்று பெயர். அந்தக்கூழ் சிறுகுடலுக்கு சென்று தேவையான சத்துகள் உறிஞ்சப்பட்டு கழிவுகள் பெருங்குடல் வழியே வெளியேறுகின்றன. அமிலம் உணவை கூழாக்குவதோடு, உணவில் உள்ள தீமை செய்யும் பாக்டீரியாக்களையும் அழித்து விடுவதால், ஃபுட் பாய்ஸன் ஏற்பட வாய்ப்பில்லை. இயற்கையாக நம் உடலின் இயக்கம் இதுதான்.

நமது உணவுக்குழல், குழாய் போன்றவை நேராக இல்லாமல் பல அடுக்குகளைக் கொண்டவை. இதனால் தலைகீழான நிலையில் கூட நம்மால் உணவை உட்கொள்ள முடியும். உணவு செரிமானமான பிறகு இரைப்பையில் இருக்கும் வெற்றிடத்தை காற்று நிரப்பிக் கொண்டிருக்கும். நாம் உணவு உட்கொள்ளும்போது நீரும் உணவும்   இரைப்பையை   நிரப்பி விடுவதால் காற்று எதிர் வழியில் சென்று ஏப்பமாக வெளி வருகிறது. காற்று எதிர்வழியில் வருவது போல் நொதிநீரோ, அமிலத்தால் நொதித்த உணவோ எதிர்வழியில் எதுக்களிக்கும்போது உணவுக்குழாயில் எரிச்சல் ஏற்படுகிறது. இதுவே அசிடிட்டி.

பசிக்கும்போது சாப்பிடாமல் விடுவது அசிடிட்டிக்கான காரணங்களில் முக்கியமானது. பசிக்கும்போது ஹைட்ரோக்ளோரிக் அமிலம் சுரக்கும். அப்போது நாம் உணவை உட்கொண்டால் அமிலம் உணவை கூழாக்கி விடும். அந்நேரத்தில் சாப்பிடாமல் இருந்து விட்டால் அமிலம் இரைப்பையின் உட்புறச்சுவரை அரித்து விடும். இப்படியாக தொடர்ந்து சுவர் அரிக்கப்பட்டுக் கொண்டே வந்தால், அது நாளடைவில் அல்சராக மாறி விடுகிறது.

நமக்கு சில நேரங்களில் திடீரென தொண்டையில் தீப்பிடிப்பது போன்ற எரிச்சலோடு இருமல் வரும். உடனே தண்ணீரைக் குடித்து அந்த எரிச்சலை போக்குவதற்குப் போராடுவோம். வயிற்றிலிருக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் பீய்ச்சி அடித்து தொண்டைக்கு வருவதால் ஏற்படும் விளைவுதான் இது.

இரைப்பையும் உணவுக்குழாயும் சந்திக்கும் இணைப்புக்கு அமிலம் வரும்போது தசைகள் பிடித்துக் கொள்ளும். இதனால் பயங்கர வலி ஏற்படும். பலர் இதனை மாரடைப்பு என்று தவறாக நினைத்துக் கொள்வார்கள். இரைப்பையும் உணவுக்குழலும் சந்திக்கும் இணைப்பு தளரும்போது கூட இரைப்பையில் இருக்கும் உணவுப்பொருள் உணவுக்குழாய்க்குச் செல்லலாம்.

அசிடிட்டிக்கான காரணங்கள்...

*பருமன் உள்ளவர்களுக்கு பொதுவாக செரிமானப் பிரச்னைகள் இருக்கும். இதன் காரணமாக அசிடிட்டி ஏற்படும்.

* காபி, டீ குடிக்கும்போது இரைப்பைக்கும் உணவுக்குழலுக்குமான இணைப்பு தளர்வதால் வரலாம்.

*காற்றடைக்கப்பட்ட பானங்களை பருகும்போது அதில் உள்ள வாயு எதிர் வழியில் வெளியேறும்போது அசிடிட்டி ஏற்படும்.

* ஆல்கஹால் பயன்பாடு மற்றும் புகைப்பிடிப்பதால் உணவுக்குழல் பாதிப்படைவதால் அசிடிட்டி ஏற்படும்.

* ஆஸ்துமா, ரத்த அழுத்தம், இதயக்கோளாறுகள் கூட அசிடிட்டிக்கு காரணமாக அமைகின்றன.

இப்படி அசிடிட்டி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. தவறான உணவுமுறைக்குள் நாம் அகப்பட்டுக் கொண்டதே இதற்கு மூலக்காரணம்’’ என்கிறார் டாக்டர் பாசுமணி. ‘‘நமது முன்னோர் காலத்தில் அசிடிட்டி மற்றும் செரிமானப் பிரச்னைகள் அதிகமாக இல்லை. செரிமானத்துக்கான பொருட்களை உணவிலேயே சேர்த்துச் சாப்பிட்டதுதான் நம் உணவுக் கலாசாரம். இன்றைய நவநாகரிக உலகில் வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கும் அவ்வுணவு முறைக்கு மீள்வதுதான் அசிடிட்டியை விரட்டுவதற்கான தீர்வு’’ என்கிறார் சித்த மருத்துவர் காசிப்பிச்சை.

‘‘வாய்ல செரிக்காததா வயித்துல செரிக்கப்போகுது?’ என ஒரு பழமொழி இருக்கிறது. உணவுப் பொருளை அரைத்து நொறுக்குவதற்குத்தான் வாயில் பற்கள் இருக்கின்றன. நாமோ ஏனோதானோவென மென்றுவிட்டு நன்றாக அரைபடாத உணவை இரைப்பைக்கு அனுப்புகிறோம். இரைப்பையில் பல் இருக்கிறதா என்ன?

பிறகு எப்படி அந்த அரைபடாத உணவை செரிமானமாக்கும்? அதிக அளவிலான ஆசிட் சுரந்து அதை கூழாக்குவதுதான் இரைப்பைக்குத் தெரிந்த ஒரே வழி. இப்போது புரிகிறதா அசிடிட்டிக்கான அடிப்படை என்னவென்று? பி.ஹெச். (அமில-காரத்தன்மை) அளவு 7க்கு குறைவாக இருந்தால் அமிலநிலை, 7க்கு அதிகமாக இருந்தால் காரநிலை.

இயற்கையை நாம் அவ்வளவு எளிதில் மதிப்பிட்டு விட முடியாது. இயற்கையைப் புரிந்து கொள்ள எவ்வளவோ மீதமிருக்கிறது. உருளைக்கிழங்கு அமிலநிலை, அதன் தோல் காரநிலை. ஆப்பிள் அமிலநிலை, அதன் தோல் காரநிலை... இப்படியாக அமில நிலையையும் காரநிலையையும் சரிவிகிதப்படுத்துவது தான் இயற்கை. நாமோ தோலை வெட்டி விட்டு கனியை மட்டுமே உட்கொள்கிறோம். நமது அன்றாட உணவு முறையை எடுத்துக் கொண்டால் கூட சாம்பார் அமிலநிலை, ரசம் காரநிலை.

பச்சரிசி அமிலநிலை, புழுங்கல் அரிசி காரநிலை. பிரியாணி அமிலநிலை, தண்ணீர் காரநிலை... இப்படி நாம் பகுத்துப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும். அமிலநிலையும் கார நிலையும் சரிவிகிதத்தில் இருக்கும்படியான உணவுமுறைகளைத்தான் நாம் பின்பற்றி வந்திருக்கிறோம். நமது உணவில் அறுசுவைகளும் இருந்தன. இப்போது அவற்றை நாம் பின்பற்றுவதில்லை.

உலகிலேயே மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளை உணவில் சேர்த்துக் கொண்டது நம் தமிழ் உணவுக்கலாசாரம். இருந்தும் நமக்கு ஏன் இத்தனை நோய்கள்? சில்லி சிக்கன் சாப்பிட்டால் கூட அதன் நிறத்துக்காக ரசாயனப் பொடிகள் சேர்க்கப்படுகின்றன. சரியாக நொதிக்காத மாவுகள்தான் உணவகங்களில் பயன்படுத்தப்படுகின்றன. துரித உணவகங்களிலோ இன்னும் கொடுமை. இப்படியாக கண்ட கண்ட உணவுப் பொருட்களை நம் வயிற்றுக்குக் கொடுத்தால் ஒன்று வயிற்றுப்போக்காக வெளியேறும்...

இல்லையெனில், எதிர்ப்பாதையில் எதுக்களிக்கும். எந்த உணவை எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம். அதை எப்படி அரைத்துக் கூழாக்கி இரைப்பைக்கு அனுப்புகிறோம் என்பது அதைவிட முக்கியம். சும்மா சொல்லிவிடவில்லை... ‘அள்ளித் திணிச்சா அற்பாயிசு... நொறுங்கத் தின்னா நூறாயிசு’ என்கிற பழமொழியை!’’ என்கிறார் காசிப்பிச்சை.

பசிக்கும்போது சாப்பிடாமல் இருந்தால் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் சுரந்து இரைப்பையின் உட்புறச்சுவரை அரித்து விடும். இப்படியாக தொடர்ந்து சுவர் அரிக்கப்பட்டுக்கொண்டே வந்தால் நாளடைவில், அது அல்சராக மாறி விடுகிறது...

‘‘சில்லி சிக்கன் சாப்பிட்டால் கூட அதன் நிறத்துக்காக ரசாயனப் பொடிகள் சேர்க்கப்படுகின்றன. சரியாக நொதிக்காத மாவுகள்தான் உணவகங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி கண்ட கண்ட உணவுப் பொருட்களை நம் வயிற்றுக்குக் கொடுத்தால் ஒன்று வயிற்றுப்போக்காக வெளியேறும்... இல்லையெனில், எதிர்ப்பாதையில் எதுக்களிக்கும்...’’

- கி.ச.திலீபன்