செய்திகள் வாசிப்பது டாக்டர்



காலை சூரியன்!

‘அதிகாலைப் பறவை நெடுந்தூரம் செல்லும்’ என்பது ஒரு பழமொழி. அதிகாலைப் பறவையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது டொரண்டோ பல்கலை கழக ஆய்வு. சூரியோதயத்தில் எழுந்திருப்பவர்கள் தாமதமாக எழுபவர்களை விட அதிக எனர்ஜியுடன் இருக்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. இயற்கையாகவே சூரியோதயத்தில் எழுபவர்கள் பிறரை விட, 25 சதவிகிதம் நேர்மறை எண்ணங்களோடும், மகிழ்ச்சியோடும், எச்சரிக்கை உணர்வோடும் இருக்கிறார்கள்.

அவர்களுடைய இயற்கை வாழ்க்கை முறை சரியாக இருப்பதே காரணம். 9லிருந்து 5 என்ற அலுவலக நடைமுறைக்கு சரியாக அவர்கள் பழக்கவழக்கம் இயல்பாக அமைந்துவிடுவதால் மன அழுத்தம் குறைகிறது. இந்த ஆற்றலை சூரியோதயம் அளிக்கிறது. பல மணி நேரம் கழித்து தாமதமாக எழுந்திருப்பவர்களுக்கு ஆற்றல் குறைபாடு ஏற்படும். மன அழுத்தத்துக்கும் ஆளாவார்களாம்! நேரமா எழுந்திருங்க... கடக்க வேண்டியதூரம் அதிகம் இருக்கு!

தலைமுறை சந்தோஷம்!

தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி உறவு மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கிறது என்கிறார் பாஸ்டன் கல்லூரி சமூகவியல் பேராசிரியரான மூர்மன். பேரன், பேத்திகள் சின்னச் சின்ன உதவிகள் மூலம் தங்கள் தாத்தா பாட்டிகளின் மன ஆரோக்கியத்தை பராமரிக்கிறார்கள். இவர்களும் தங்களின் அனுபவப் பகிரல், அறிவுரை, மாரல் சப்போர்ட் மூலம் அவர்களுடைய மனபாரத்தை குறைக்கிறார்கள் என்கிறார் அவர். உங்களுடைய குழந்தைக்கு இந்தப் பந்தத்தின் அருமையை உணர்த்துங்கள்.

கூட்டுக்குடும்பமாக இருந்தால், முந்தைய தலைமுறையையும் இளைய தலைமுறையையும் பேச, பழக நேரம் எடுத்துக் கொள்கிறார் களா என்று பாருங்கள். கொஞ்ச நேரமானாலும் அது மகிழ்ச்சியானதாக மலரட்டும். தூரமாக இருந்தால் போனில் பேச வையுங்கள். முடிந்த வரை அடிக்கடி பிள்ளைகளோடு சென்று சந்தித்து வாருங்கள். வெளிநாடாக இருந்தால் ஸ்கைப் மூலமாவது பேச வையுங்கள். தாத்தா, பாட்டிக்கும் சந்தோஷம்... தங்கள் குழந்தைகளுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும்!

ஓவிய மாயாஜாலம்!

நீங்கள் பிகாசோவாக இருக்க வேண்டிய அவசியமில்லை... பொழுதுபோக்காக வரையும் ஓவியம் கூட உங்கள் மன அழுத்தத்தை பெரும் அளவில் குறைக்கும் என்கிறது ஜெர்மனியில் உள்ள ஹாஸ்பிடல் எர்லான்ஜென் பல்கலைக்கழக ஆய்வு. ஓவியப் படைப்புத் திறனுக்கும் மூளை நரம்புகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இதனால் மூளையின் திறமையும் அதிகரிக்கிறது. வேலையில் இருந்து ஓய்வுபெற்ற புதிதில் முதியோருக்கு ஒருவித மன அழுத்தம் ஏற்படும்.

அதிலிருந்து மீண்டு வர காலம் பிடிக்கும். அந்தக் கடினமான காலத்தை எளிதில் கடக்க வாரம் ஒரு முறை என 10 வாரங்களுக்கு பெயின்டிங் செய்தால் மன அழுத்தம் குறையுமாம். ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க ஓவியம் போன்ற எளிய வழிகள் இருக்கும் போது, இனி உங்கள் விரக்தியை துணை மீது காண்பிக்காதீர்கள். ஓவியத்தில் கவனத்தைசெலுத்துங்க... அழுத்தத்தையே அழுத்திடலாம்!