மன அழுத்தத்தையும் உருவாக்குது வைட்டமின் குறைபாடு!



உடலும் உள்ளமும்

சோர்வாக உணர்கிறீர்களா? அடிக்கடி கை கால்களில் வலியா? சிறிய வேலையில் கூட கவனம் செலுத்த முடியவில்லையா? உடல் பலவீனமாக இருப்பது போல தோன்றுகிறதா? ‘உங்களுக்கு இந்த நோயா? அந்த நோயா?’ என்று விளம்பரங்கள் பயமுறுத்துகின்றனவா? பயப்படாதீர்கள்...

வைட்டமின் குறைபாடு கூட உடல் சோர்வையும் மன அழுத்தத்தையும் உருவாக்கும் என்கிறார் சென்னை மெட்ரோபோலிஸ் லேப் தலைவர் டாக்டர் அனிதா சூர்யநாராயணன். குறிப்பாக வைட்டமின் பி12 குறைபாடு என்னென்ன பிரச்னைகளை உருவாக்கும் என விளக்குகிறார் அவர்.

‘‘இன்றைய இளைஞர்களின் ஃலைப்ஸ்டைல் பெருமளவில் மாறிவிட்டது. பலர் சரியான நேரத்துக்கு சாப்பிடுவதில்லை. இளம்பெண்களோ டயட் என்ற பெயரில் உணவின்
அளவையே குறைத்துவிடுகிறார்கள். இதெல்லாம் தவறான அணுகுமுறை. உடற்பயிற்சிகள் மூலம் மட்டுமே படிப்படியாக எடையை குறைக்க வேண்டும். அதுவே உடல்நலத்துக்கு நல்லது. சாப்பிடாமலே இருந்து திடீரென 10 கிலோ எடை குறைப்பதென்பது சத்துக் குறைபாட்டை ஏற்படுத்திவிடும்.

துரித உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கும் வைட்டமின் குறைபாடு ஏற்படும். காலை உணவை தவறவிடாமல் 9 மணிக்குள் சாப்பிடுவது அவசியம். சரியாக காலை உணவை சாப்பிடாதவர்களுக்கு நீரிழிவு பிரச்னை வர வாய்ப்பிருக்கிறது. வைட்டமின், இரும்புச்சத்துகள் உடலில் குறைந்தால் சோர்வாகக் காணப்படுவார்கள். ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு குறையும். இதனால் வேலையில் கவனம் செலுத்த முடியாது.

சில இளம்பெண்கள் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு ‘வலி’ என்பார்கள். சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமல் இருப்பதால் ஏற்படும் நெஞ்செரிச்சலே இதற்கான காரணம். குறிப்பாக... பச்சைக்காய்கறிகள், பழங்கள், பசலைக்கீரை, பருப்பு வகைகள், உலர் பழங்கள் ஆகிய வைட்டமின் நிறைந்த பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். எங்கள் பரிசோதனைக்கூடத்துக்கு பல பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து ஃப்ரீ எம்ப்ளாய்மென்ட் செக்கப்புக்கு இளைஞர்கள் வருகிறார்கள்.

இதில் ஆண்கள் பலருக்கு வைட்டமின் பி12 குறைபாடு உள்ளது. இளம்பெண்கள் பலரும் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்து ‘அனீமியா’ குறைபாட்டுடன் காணப்படுகிறார்கள். காபி நிறையக் குடிப்பவர்களுக்கும் உடலில் வைட்டமின்கள் உறிஞ்சப்படுவது குறையும். உடல் சோர்வாக காணப்பட்டாலோ, மன அழுத்தம் ஏற்பட்டாலோ, ஏதேனும் நோயாக இருக்குமோ என நாமே கற்பனை செய்ய வேண்டிய அவசியமில்லை. உரிய மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.

பரிசோதனைக்கு வருகிறவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தி வைட்டமின்களில் எது குறைவாக உள்ளது என்பதைக் கண்டுபிடிக்கலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் 12-14 கிராம்கள் இருக்க வேண்டும். இதற்குக் குறைவாக இருந்தால் அவருக்கு ரத்தசோகை  இருக்கிறது என்று அர்த்தம். வைட்டமின் குறைபாடு என்று வைட்டமின் பி12 மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவார்கள். இதுவும் கூடாது. இதிலுள்ள சத்து சிறிதளவே உடலால் உறிஞ்சப்படும்.

இயற்கையான உணவு களில் வைட்டமின்கள் கொட்டிக்கிடக்கின்றன. மீன், முட்டை, ஈரல், பால் போன்ற உணவுப்பொருட்களில் தேவையான அளவு வைட்டமின் பி12 உள்ளது. தோல் நீக்கப்படாத சிவப்பரிசியிலும் வைட்டமின் பி12 உண்டு...’’ என வைட்டமின்களின் அவசியம் குறித்துப் பேசும் டாக்டர் அனிதா, மன அழுத்தத்தையும் சோர்வையும் உருவாக்குவதில் வைட்டமின் பி12 குறைபாட்டின் பங்கு குறித்தும் விளக்குகிறார்.

‘‘நமது நரம்புகளுக்கும் மூளைக்கும் தேவையான செல்களை இயங்க வைப்பதில் வைட்டமின் பி12க்கு முக்கிய பங்குண்டு. அதனால் வைட்டமின் பி12 குறைபாடானது உடல் சோர்வு, மன அழுத்தம், மறதி நோய் போன்ற மூளை மற்றும் நரம்பு சார்ந்த நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது. குடல் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கும் கேஸ்டரைடிஸ் எனப்படும் வாயுப் பிரச்னை உள்ளவர்களுக்கும், ‘பெர்னிஸியஸ் அனீமியா’ எனப்படும் ரத்தசோகை நோய் உள்ளவர்களுக்கும், எடை குறைய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் வைட்டமின் பி12 சத்து உடலில் உறிஞ்சப்படும் அளவு குறையும் குறைபாடு ஏற்படும்.

அதிகமாக மது அருந்துபவர்கள், நோய் எதிர்ப்புத் திறனில் பிரச்னை உள்ளவர்கள், நீண்ட காலமாக மருந்து, மாத்திரைகள் எடுத்து வருபவர்களுக்கும் வைட்டமின் பி12 குறைபாடு உருவாகும். சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடும் தாய்மார்களின் குழந்தைகளுக்கும் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு. வைட்டமின் பி12 குறைபாடு அதிகமாவதால் ஏற்படும் ரத்தசோகைக்கு ‘வைட்டமின் பி12 டெஃபிஷியன்சி அனீமியா’ என்று பெயர். இதற்கு சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் இன்னும் பல பிரச்னைகள் உருவாகும்.

சோர்வு, பலவீனமாக உணர்தல், சருமம் வெளிரிப் போதல், நாக்கு அடிக்கடி உலர்தல், பல் துலக்கும் போது ஈறுகளில் ரத்தம் வருதல், எடை திடீரெனக் குறைவது, மலச்சிக்கல், பசி
எடுக்காமல் இருக்கும் நிலை ஆகியவை இதன் அறிகுறிகளாகும். வைட்டமின் பி12 குறைபாட்டினை நீக்க பல எளிய சிகிச்சைகள் உள்ளன.

‘அனீமியா’ உள்ளவர்கள் வைட்டமின் பி12 ஊசி எடுத்துக்கொள்வதன் மூலம் இதனை சரிசெய்யலாம். அசைவ உணவு சாப்பிடாதவர்கள் இயற்கையான காய்கறிகளில் எதில் வைட்டமின் பி12 அதிகமாக உள்ளது என தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். கடல் உணவுகளான மீன், இறால், நண்டு, நத்தை போன்றவற்றில் வைட்டமின் பி12 போதுமான அளவு உள்ளது. ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனைப் பெற்று சாப்பிடுவதும் நல்ல பலன் தரும்...’’

இளம்பெண்கள் பலரும் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்து ‘அனீமியா’ குறைபாட்டுடன் காணப்படுகிறார்கள்.நரம்புகளுக்கும் மூளைக்கும் தேவையான செல்களை இயங்க வைப்பதில் வைட்டமின் பி12க்கு முக்கிய பங்குண்டு. அதனால், வைட்டமின் பி12 குறைபாடானது சோர்வு, மன அழுத்தம், மறதி நோய் போன்ற பிரச்னைகள் ஏற்படு வதற்குக் காரணமாகிறது.

- விஜய் மகேந்திரன்
படம்: ஆர்.கோபால்