மிஸ் தன்னம்பிக்கை அழகி!19 வயது இளம்பெண் ஒருவரின் பிகினி போட்டோ இப்போது, இணைய தளத்தில் செம ஹாட்! காரணம், அவரது கவர்ச்சியோ, வனப்பு மிகுந்த உடல்வாகோ இல்லை! பின்னே?
கனடா நாட்டின் நியூப்ரன்ஸ்விக்கைச் சேர்ந்தவர் இசபெல்லா. ரத்த நாள கோளாறினால் (Parkes Weber Syndrome) பாதிக்கப்பட்டுள்ள இவரது வலது  கால், பயங்கரமாக வீக்கம் அடைந்துள்ளது. இசபெல்லாவின் உடலில் கால்பகுதிக்குச் செல்லும் நிணநீரானது, நரம்பு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள  செயலிழப்பால், மீண்டும் திரும்பாது அங்கேயே தங்கி விடுவதால், கால் வீக்கமடைந்து விடுகிறதாம். வீக்கத்தைக் குறைத்து நிணநீர் ஓட்டத்தை  சாதாரணமாக்கும் கம்ப்ரஷன் பேன்டேஜ் அணிவது மட்டுமே இப்போதைக்குத் தீர்வு. இந்த நோய் அவரின் தைரியத்தைச் சற்றும்  குறைத்துவிடவில்லை.

அவரது சொந்த ஊரில் நடந்த அழகிப்போட்டியில் ‘அழகி பட்டம்’ பெற்றதே அதற்குச் சான்று! “என் உடலில் ஏற்பட்டுள்ள இந்தக் குறையானது, நான் பிகினி உடை அணிவதையோ, அழகான உடை அணிவதையோ சற்றும் கட்டுப்படுத்தாது.  என்னைப் பொறுத்த வரை தன்னம்பிக்கையே முக்கியம். குறையுள்ள ஒருவர் தன்னம்பிக்கை மிகுந்தவராக இருக்கும் போது, அவரின் குறையைப்  பார்த்து யாரும் பரிதாபப்படுவதில்லை. அப்போது அவரது தன்னம்பிக்கையே பாராட்டப்படும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. குறையை  அப்படியே ஏற்றுக்கொண்டு, நம்மை நாமே நேசிக்க பழக வேண்டும். அப்போதுதான் உலகம் நம்மை மதிக்கும். சந்தோஷமான வாழ்க்கை என்பது மிக  எளிதானது...’’

- இனிமையாகச் சொல்கிறார் இசபெல்லா!