பயோனிக் ஐ ரோபோடிக் ஆர்ம் இருக்கு! கவலை எதுக்கு?



ஆண், பெண் இருவரும் வேலைக்குச் செல்லும் அவசர உலகில், வீட்டில் ஒருவருக்கு சிறிய உடல் நலக்குறைவு என்றாலே நம் அன்றாட வேலைகள்    பாதிப்படைகின்றன. அதிலும் கை, கால்கள் செயலற்ற நிலையில் இருந்தாலோ, பார்வைக் கோளாறு இருந்தாலோ, அவர்களை ஒரு குழந்தையைப்   போலவே  பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. அவர்களின் ஒவ்வொரு தேவைக்கும் நம்மை  எதிர்பார்க்கும் நிலை. சரி, நம்மால் முடியவில்லை   அவர்களை கவனித்துக் கொள்ள  ஆள் வைக்கலாம் என்றாலோ, பாதுகாப்பு பிரச்னை... ``இதெல்லாம்  தேவையே  இல்லை. `பயோனிக் ஐ’, `ரோபோடிக் ஆர்ம்’ இருக்க கவலை எதுக்கு’’ என்கிறார் டாக்டர் ஏ.வி.ஸ்ரீனிவாசன்! டாக்டர் ஏ.வி.ஸ்ரீனிவாசன் நரம்பியல் மருத்துவத்தில் கணிசமான பங்களிப்புகளை அளித்தவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் துறையில்  பேராசிரியராகவும் பணியாற்றி, பல நரம்பியல் மருத்துவர்களை உருவாக்கி வருகிறார்.  அமெரிக்க நரம்பியல் மருத்துவத்துறை இவரது ஆய்வை  பாராட்டிப் பரிசளித்துள்ளது. `பார்க்கின்ஸன்ஸ் பயங்கரம்’, `நினைவாற்றல் நிரந்தரமா?’, `ஆட்டிஸம் அறிவோம்’ உள்பட பல நூல்களை தமிழில் எழுதி  நரம்பியல் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை சாமான்ய மக்களையும் சென்றடையச் செய்தவர் இவர். நரம்பியல் துறையின் புதிய கண்டுபிடிப்புகள் பற்றியும், அவரது மருத்துவ அனுபவத்தில் திருப்தியளித்த சம்பவம் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து  கொண்டார்...

நரம்பியல் மருத்துவத்தில் பல புதிய விந்தைகள் இந்த ஆண்டு நிகழ்ந்துள்ளன. அதில் `பயோனிக் ஐ’ (Bionic eye) ஒரு முக்கிய கண்டுபிடிப்பு.   வயதானவர்களுக்கு மேக்குலர் டிஜெனரேஷன் என்ற பிரச்னையினால் பார்வை இழப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு பரம்பரை காரணமாகவும் இப்பிரச்னை   ஏற்பட்டு, இளம் வயதிலேயே பார்வை பறிபோகலாம். இவர்களுக்கு `பயோனிக் ஐ’ ஒரு வரப்பிரசாதம். கண்ணில் ஒரு சிறிய சர்ஜரி செய்து   ரெட்டினாவில் ஒரு சிப் பொருத்திவிடுவோம். இவர்களுக்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்ட ஒரு கண்ணாடியும் உள்ளது. இந்தக் கண்ணாடியை   அவர்கள் அணிந்து கொண்டால் பார்வை தெரிய ஆரம்பிக்கும்.  அடுத்து மறதி நோய்... இது வயது வித்தியாசமின்றி அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது. மறதி நோய் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டாலும், எதிர்காலத்தில் வருமா என்ற சந்தேகம்  பலருக்கும் இருக்கும். சிடி-பெட்(CT-PET) ஸ்கேன் மூலமாகவே மறதி நோய் வருமா என்று கண்டறியும் வசதி இப்போது வந்துள்ளது. கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை தருவதன் மூலம் மறதி நோய்  வராமல் தடுத்துவிடலாம். சிலருக்கு முதுகுத் தண்டுவடத்தில் அடிபட்டதால் பாரபிலிஜியா, குவாட்ரிபிலிஜியா வந்து கை, கால்களை அசைக்க முடியாமல் காலம் முழுவதும் படுக்கையில் கிடக்கவேண்டியிருக்கும். இவர்களுக்காக `Robotic Arm’ உருவாக்கியுள்ளார்கள். இந்தக் கருவியை அணிபவரின் எண்ணத்தை கொண்டே செயல்படும் வகையில் வடிவமைத்துள்ளார்கள்.

இன்டர்நெட் மூலம் தூரத்திலிருந்தும் இயக்க முடியும். இந்த `ரோபோடிக் ஆர்ம்’ மூலம் இவர்களை நடக்க வைக்கவும் முடியும். சிலருக்கு ஸ்ட்ேராக்கினால் வலது அல்லது இடது பக்கம் முழுவதும் செயலிழந்து, அந்தப் பக்க கை கால்களை அசைக்க முடியாமல் அவதிக்கு   உள்ளாவார்கள். பெரும்பாலும் வலது பக்கம் பக்கவாதம் வந்தால் வலது கையில் மட்டும்தான் சிகிச்சை அளிப்பார்கள். ஆனால், இடது கையில்   சிகிச்சை அளிப்பதன் மூலம் வலதுகையை இயங்க வைக்க முடியும்! இது எப்படி சாத்தியம்? வலது கைக்கான செயல்பாடுகளை இடது பக்க மூளைதானே செய்கிறது? இடது கைக்கான வேலையையும் இடது  பக்கமூளையில் உள்ள 15 சதவிகித நியூரான்கள் செய்கின்றன. இந்த நியூரான்களை தூண்டி வலது கையை செயல்பட வைப்பதே இந்த ஆய்வின் நோக்கம். இந்த ஆய்வுக்குப் பிறகு பிசியோதெரபிஸ்டுகளின் உதவியோடு பாதிக்கப்படாத பக்கத்துக்கும் அதே உடற்பயிற்சிகள்  கொடுக்கப்பட்டது. இதனால் பல நோயாளிகள் பயனடைந்தனர். பக்கவாதம் பற்றிய இந்த ஆய்வுக் கட்டுரைக்காகவே அமெரிக்க இந்திய நரம்பியல்  அகாடமி எனக்குப் பரிசளித்து பாராட்டியது மிகவும் திருப்தி அளித்த சம்பவம்’’ என்று மகிழ்கிறார் மருத்துவர்! ‘‘வலிப்பு நோயாளிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முகாம்களை நடத்தியுள்ளேன். இவர்களுக்கு 8 மணி நேர தூக்கம் மிக அவசியம்.  அப்போதுதான் அடுத்த நாளும் அவர்களால் புத்துணர்ச்சியுடன் இயங்க முடியும். வலிப்பு உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 4 மணி நேரத்துக்கு மேல் டி.வி.  பார்க்கக் கூடாது. அதிக நேரம் டி.வி. பார்ப்பதால், அதிலிருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையை சீக்கிரம் சோர்வடையச்செய்துவிடும். நமக்கு ஏற்படும் மறதி நோயை தவிர்க்க மது,சிகரெட் ஆகிய கெட்டப் பழக்கங்களை விட்டு விலக
வேண்டும்’’ என்றும் அறிவுறுத்து கிறார் டாக்டர் ஸ்ரீனிவாசன். மருத்துவமும் விஞ்ஞானமும் புதுப்புது கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி அசத்திக் கொண்டிருக்கும் போது, எந்த நோயும் நம்மை முடக்கிவிடாது என்ற  நம்பிக்கை பிறக்கிறது. இன்றைய மருத்துவர்களின் கண்டுபிடிப்புகளையும் திறமைகளையும் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.அவர்கள் தங்களின் திறமைக்கு நிகராக மக்களின் மீது நேசத்தையும், சேவை   மனப்பான்மையையும் வளர்த்துக் கொண்டால் நம் நாட்டு மக்களின் ஆரோக்கியம் மேலும் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு   உதாரணமாகத் திகழ்கிறார் இம்மருத்துவர்!

- விஜய் மகேந்திரன்
படம்: ஆர்.கோபால்