குடிக்கிற இளைஞனை நயன்தாராவோ, தமன்னாவோ காதலிப்பார்களா?பாலியல் சார்ந்த விஷயங்கள் பற்றி குழந்தைகளிடம் பேசுவது என்பது, எப்போதுமே பெற்றோருக்கு இக்கட்டான சூழ்நிலையாக மாறிவிடும். அது  போலவே, குழந்தைகளிடம் மது பற்றிப் பேசுவதும், இரு தரப்புக்கும் விரும்பத்தகாத ஒரு விஷயமாகவே இருக்கிறது. எனினும், இக்காலக்கட்டத்தில்  இந்தப் பேச்சைப் பேசித்தான் ஆக வேண்டும் - என்றுமே பேசாத பேச்சாக இருந்தாலும்! குழந்தைகளுக்கும் நமக்குமான உறவு எந்த அளவு  உயிரோட்டத்துடன் இருக்கிறது என்பதைப் பொறுத்து இது அமையும். தயக்கமே இல்லாமல், எந்த ஒரு விஷயத்தையும் மனம் திறந்து  பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை நாம் அவர்களுக்கு வழங்கியிருந்தால், இந்த விஷயமும் எளிதாகி விடும். டீன் ஏஜ் குழந்தைகளுக்கே உரிய  இடைவெளியை நாமும் சேர்ந்து அதிகப்படுத்தி இருந்தால், இது கொஞ்சம் சிரமம்தான். ஆனாலும், குடி எனும் குழிக்குள் அறிந்தும் அறியாமலும்  விழுந்து கிடக்கும் குழந்தையை காக்கும் கடமை நமக்குத்தானே? எப்போதுமே குழந்தைகளிடம் ஆக்கப்பூர்வமாக உரையாடுங்கள். சலிப்போடு, ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ ஆகிய பதில்களை மட்டுமே அவர்கள் கூறுகிற  வகையில், அவர்களை கேள்விகளால் குத்த வேண்டாம்.

அவர்களை ஆட்கொண்டிருக்கும் உங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தைப் பற்றித்தான் பேச இருக்கிறீர்கள். அதற்காக,  உணர்ச்சிவசப்படவோ, கோபம் கொள்ளவோ அவசியம் இல்லை. உங்கள் உரையாடல் இப்படி தொடங்கலாம்... ‘ஸ்கூல் பசங்க கூட குடிக்கறாங்கன்னு டி.வி.ல எல்லாம் காட்டறாங்களே... உங்க ஸ்கூல் / காலேஜ்  பசங்களுக்கு அந்தப் பழக்கம் உண்டா..?’ உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் குழந்தையாக இருப்பின், உங்கள் வேலை எளிதாகி விடும். ‘ஆமாம்மா...’ என ஆரம்பிக்கும் குழந்தை  அடுக்கடுக்கான விஷயங்களைப் பகிரத் தொடங்கும். அதிலிருந்து நாம் சொல்ல விரும்பும் விஷயத்தை பக்குவமாக புகட்டி விடலாம். அதே நேரம், அளவுக்கு அதிக போதனையும் அறிவுரைகளும் எதிர்மறை விளைவுகளையே உண்டாக்கும் என்பதையும் நினைவில் வையுங்கள். இன்றைய டீன் ஏஜ் குழந்தைகள் / இளைஞர்கள் மதுவைப் பற்றி தங்களுக்கு நன்றாகத் தெரியும் என்றே நம்புகின்றனர். ஆனால், அவற்றில் பலவும் பொய்யானவை... பெரும்பாலும் மூட நம்பிக்கைகளே! அவர்களுக்கு ஆல்கஹால் பற்றிய உண்மைத் தகவல்களை அறியத் தருவது மிக அவசியம். அத்தகவல்கள் அறிவியல் சார்ந்ததாக,  மிகைப்படுத்தப்படாததாக இருக்க வேண்டும். உதாரணமாக...

*  மது என்பது உடலையும் மனதையும் பாதிக்கக்கூடிய போதைப் பொருளே. அது மூளையின் ஒருங்கிணைப்புத் திறனை குலைக்கும் ஒரு  செயலுக்கு எதிர்வினை ஆற்றும் கால அளவும் கட்டுக்குள் வராது. பார்வை மங்கலாகும். சிந்திக்கும் தன்மை குறையும். தீர்க்கமாக முடிவெடுக்க  இயலாது.
*  பியர், ஒயின் போன்ற மது வகைகள் ஒன்றும் சாதுக்கள் அல்ல.
அவற்றிலும் மற்ற மது வகைகளில் உள்ளது போலவே, ஆல்கஹால் அடங்கியிருக்கிறது. விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், வோட்கா போன்றவை  ஏற்படுத்தும் அதே விளைவுகளையே, பியரும் ஒயினும் ஏற்படுத்தும். 350 மி.லி. பியர், 150 மி.லி. ஒயின், 45 மி.லி. மற்ற மதுவகைகள் - இவை  எல்லாவற்றிலும் (அளவு வேறுபட்டாலும் கூட) ஒரே அளவு ஆல்கஹால்தான் உள்ளது.
*  நண்பர்கள் கூறுவது போல, காபி குடித்தாலோ, ஷவரில் குளித்தாலோ, கொய்யாப்பழம் சாப்பிட்டாலோ, வாக்கிங் போனாலோ போதை  இறங்கி விடும் என்பது உண்மை அல்ல. ஒரே ஒரு ட்ரிங்க் (30 மி.லி.) குடித்திருந்தால் கூட, அந்தப் போதை ஓரளவு குறைய 2-3 மணி நேரங்கள்  ஆகும். அளவு அதிகமாக அதிகமாக இந்த நேரமும் அதிகரிக்கும். ஆணா, பெண்ணா என்பதைப் பொருத்தும், எடையைப் பொருத்தும், சூழலைப்  பொருத்தும் கூட இது மாறுபடும். மொத்தத்தில் ரத்தத்தில் கலந்திருக்கிற ஆல்கஹால் வெளியேற 36 மணி நேரம் கூட ஆகலாம்!
*  குடித்தவர்கள் தங்களால் நன்றாக வாகனம் ஓட்ட முடியும் என்று நம்புவார்கள்.
உண்மையில் இது ஒரு மாயை. குடித்தவர்களால் ஏற்படும் விபத்துகள் பற்றியும் குடித்தவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைவதையும் உயிரை  இழப்பதையும் அன்றாடம் ஆதாரபூர்வமாக செய்திகளில் பார்க்கிறோம்.
*  மதுபோதை எனும் குழிக்குள் விழுவது மிக எளிது. ஆனால், அந்தப் பாதாளத்தில் இருந்து மீண்டு மேலே வருவது மிக மிகக் கடினம். 

ஆகவே... ஏன் குடிக்கக்கூடாது என குழந்தைகளுக்கு அறிவுறுத்தவும் ஏராளமான விஷயங்கள் உண்டு. இளம் வயதினரையே அதிகம் பாதிக்கும்... பெரியவர்களைப் பாதிக்கும் அளவைக் காட்டிலும், மதுவானது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இளம் வயதினரையே அதிகமாகப் பாதிக்கிறது.  குடும்பத்தில் குடிப்பவர் யாரேனும் இருந்தால், அவரைப் பின்பற்றி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். சுய மதிப்பை இழக்கக்கூடாது...திரைப்படங்களில் வருவது எல்லாம் உண்மை அல்ல. இயக்குனர் எம்.ராஜேஷ் படங்களில் வருவது போல, குடிக்கிற இளைஞர்களை நயன்தாராவோ, தமன்னாவோ, வேறு எந்தப்  பெண்ணோ காதலிப்பதில்லை.

உண்மையில் குடிக்கிறவர்களுக்கு சமூகத்தில் எப்போதுமே மரியாதைக் குறைவுதான். உறவுகள் நிச்சயமாக குடியினால்  பாதிக்கப்படுகின்றன.சட்டப்படியும் தவறு... தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் 21 வயதுக்கு உட்பட்டோர் குடிப்பது சட்டப்படி தவறு. டெல்லி, சண்டிகர், ஹரியானா, பஞ்சாப்,  மேகாலயா, மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் குடிப்பதற்கான வயது வரம்பு இன்னும் அதிகம் (குறைந்தபட்சம் 25). குஜராத், லட்சத்தீவு, மணிப்பூர்,  மிசோராம், நாகலாந்து ஆகிய பகுதிகளிலோ குடிப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. விபத்துகளில் சிக்கலாகாது... டீன் ஏஜ் வாகன விபத்து மற்றும் மரணங்களுக்குப் பிரதான காரணமாக இருப்பது மதுவே. அதோடு, புரிந்தும் புரியாமலும் குற்றச் செயல்களில் ஈடுபடும், பாலியல் கோளாறுகளில் மாட்டும் அபாய மும் உண்டு. இவையெல்லாம் தன்னை அறியாமலே, பின் விளைவுகளைப் பற்றி  கவலை கொள்ளாது நிகழும் என்பதுதான் சோகம்.  காரணம் மது!

காபி குடித்தாலோ, ஷவரில் குளித்தாலோ, கொய்யாப் பழம் சாப்பிட்டாலோ, வாக்கிங்  போனாலோ போதை இறங்கி விடும் என்பது உண்மை அல்ல. 30 மி.லி.  குடித்திருந்தால் கூட, அந்தப் போதை  ஓரளவு குறைய 2-3 மணி நேரம் ஆகும்.