கண்ணைக் காக்கும் ரோபோ!



கண் மருத்துவ பாரம்பரிய குடும்பத்திலிருந்து வந்தவர் டாக்டர் அமர் அகர்வால். அகர்வால் குழும கண் மருத்துவமனையின் சேர்மன். நோயாளிகளின்   நலன் கருதி பல புதிய முயற்சிகளையும், தொடர் ஆய்வுகளையும் மேற்கொள்கிறவர். வெளிநாடு செல்லும் அவசர நிமிடங்களுக்கிடையே  நம்மிடம்   அவர் பேசியதில் இருந்து...

‘‘கண் நோய்களை முன்னரே கண்டு பிடிக்கவும் சிகிச்சை அளிக்கவும் பல நவீன முறைகள் வந்திருக்கின்றன. கருவிழியில் நோய்த்தொற்று, அடிபடுவது, பிறவியிலேயே ஏற்படும்  குறைபாடுகளை மருந்து களால் சரி செய்ய முடியாது. இவர்களுக்கு கருவிழி மாற்று சிகிச்சைதான் சரியானது.  சிலருக்கு கண்களில் இருக்கும் ரத்த அணுக்கள் அதீதமாக செயல்பட ஆரம்பித்துவிடும். இந்த வீக்கத்தால் கண்கள் சிவந்துவிடுவது, வலி, கண்கள் கூசுவது போன்ற பிரச்னைகள் வரும். சிலருக்கு Eye pressure என்கிற கண் அழுத்தம் காரணமாக கண்களின் நரம்பு பாதிக்கும். கண்ணில் எந்த    பகுதியில் பாதிப்பு ஆரம்பித்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் Visual field test முறை உள்ளது. சமீபத்தில் OCT என்ற பரிசோதனை வந்திருக்கிறது. சி.டி.ஸ்கேன் போல கண்ணின் நரம்புகளை படம் எடுத்து தெளிவாக பார்த்துவிடலாம். இந்த OCT  முறையில் லென்ஸ், கருவிழி, கண்ணின் மற்ற பாகங்களையும்  பரிசோதிக்க முடியும். 5 வருடங்களுக்குப் பிறகு கண்ணில்  ஏற்படக்கூடிய பாதிப்புகளைக்கூட OCT மூலம் முன்னரே தெரிந்துகொள்ள முடியும். Gonioscopy கண்டுபிடிப்பு முறையிலும் முன்னரே கண்டுபிடிக்க  முடியும். இதயத்துக்கு ஆஞ்சியோகிராபி செய்வது போல கண்ணுக்கும் ஆஞ்சியோகிராபி செய்து கொள்ளும் முறையும் இருக்கிறது.  பார்வைக்குறைபாட்டுக்குக் கண்ணாடி அணிய விரும்பாதவர்கள் லேஸிக் சிகிச்சை செய்துகொள்ள முடியும் என்பது நமக்குத் தெரியும். லேஸிக் சிகிச்சைக்கு அடுத்தகட்டமாக   ஸ்மைல் (SMILE) சிகிச்சை வந்திருக்கிறது. Small Incision Lenticule Extraction என்ற இந்த ஸ்மைல் சிகிச்சை இன்னும் எளிதானது. விரைவில்   குணமளிக்கக் கூடியது.

கருவிழி  மாற்று சிகிச்சையில் முன்பு மொத்த கருவிழியையும் மாற்றுவார்கள். இப்போது  கருவிழியின் கடைசி லேயரை மட்டும் மாற்றினால்   போதும். இதனால் தையல் போடும் பிரச்னை இல்லை. பார்வையும் சீக்கிரமே வந்துவிடும். இதன்மூலம்  தானம் பெற்ற ஒருவரின் கருவிழியை ஒன்றுக்கும் மேற்பட்ட லேயராக பிரித்து, 4 பேருக்குப் பயன்படுத்த முடியும்.  இந்தியாவில் இன்னும் இது பிரபலமாகவில்லை. ரோபோடிக் கேட்ராக்ட் சர்ஜரி என்ற சிகிச்சை வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கிறது. ஒரு மருத்துவரின் மேற்பார்வையில் ரோபோவே அறுவை சிகிச்சையை செய்துவிடும். இந்தியாவிலும் இப்போது வந்திருக்கிறது. எதிர்காலத்தில் ரோபோவே முழு அறுவை சிகிச்சையையும் செய்யும் நிலை வரலாம். கிராமங்களில் உள்ள பெரியவர்கள் சோடா புட்டி என்று சொல்கிற அளவுக்குப் பெரிய கண்ணாடிகளை அணிந்திருப்பார்கள். இன்றைய தொழில்நுட்பத்தில் அத்தனை பெரிய கண்ணாடியை எல்லாம் அணிய வேண்டியதில்லை. லென்ஸ் மாற்றினாலே தெளிவான பார்வையும் கிடைத்துவிடும். 5 வருடங்களுக்கு முன்பு தீபாவளி நேரத்தில் நடந்த சம்பவம் இது. விழுப்புரம் அருகில் உள்ள கிராமத்திலிருந்து ஆனந்தி என்ற 3 வயது சிறுமியை  அழைத்து வந்திருந்தார்கள். பக்கத்து வீட்டில் பட்டாசு வெடித்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாள்.

வெடித்துச் சிதறிய பட்டாசு கண்ணில் பட்டுவிட்டது. உள்ளூர் மருத்துவமனையில் பார்த்துவிட்டு முடியாததால் இங்கு வந்திருந்தார்கள். Intraocular lens implantation என்ற சிகிச்சையை செய்தோம். ஆனால், சிகிச்சை முடிந்து சில நாட்களில் லென்ஸில் அசைவு தெரிந்தது. வேறு என்ன செய்வது என்று யோசித்த போது  பெரியவர்களுக்கு செய்யும் Fibrin tissue adhesive என்ற முறை நினைவுக்கு வந்தது. இந்த ஃபைப்ரின் முறையை ஏற்கனவே கிருஷ்ணவேணி என்ற நடுத்தர வயதுள்ள பெண்மணிக்கு செய்திருந்தோம். ஆனால், 3 வயது குழந்தைக்கு சரிவருமா என்று தெரியவில்லை. குழந்தையின் பார்வையை மீட்க இந்த சிகிச்சையை முயற்சிக்கலாம் என்று ரிஸ்க் எடுத்தேன். நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்துவிட்டாலும், சரியாக வேண்டுமே என்ற டென்ஷன் அதிகமாக இருந்தது. அன்று இரவு எனக்கு தூக்கமே இல்லை. கடவுளின் அருளால்  அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாகி அந்த குழந்தையின் பார்வை மீண்டு வந்தது. அந்த தூக்கம் தொலைத்த இரவையும், அந்த குட்டிப் பெண்ணையும் மறக்கவே முடியாது. அதைத் தொடர்ந்து இப்போது உலகமெங்கும் ஃபைப்ரின் சிகிச்சை முறையை குழந்தைகளுக்கும் செய்கிறார்கள்!’’

- ஞானதேசிகன்
 படம்: ஏ.டி.தமிழ்வாணன்