கொழுப்பைக் கொண்டே எலும்பை உருவாக்கலாம்!



முகச்சீரமைப்பு மருத்துவத்தில் மிகவும் பிரபலமானவர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி. தெற்கு ஆசியாவிலேயே அதிகளவில் உதடு அன்னப்பிளவு அறுவை சிகிச்சை செய்தவர் என்கிற பெருமைக்குரியவர். நவீன  தொழில்நுட்பங்களின் காதலர்… ‘எந்தத் தொழில்லயும் அட்வான்ஸ்டா இருக்கறது முக்கியம். நான் ஒரு பல் மருத்துவரா மட்டுமே இருந்திருந்தா என்னைத் தேடி வந்திருப்பீங்களா?’ என்று சிரிக்கிறார்.

‘‘நம் உடலில் முகம் எத்தனை முக்கியமானது என்று சொல்ல வேண்டியதில்லை. நன்றாக இருக்கிறவர்களையே குறை சொல்கிற உலகத்தில் ஒருவர் குறைபாடுள்ள முகத்தோடு இருந்தால் என்னவெல்லாம் சொல்வார்கள்? சம்பந்தப்பட்டவர்களுக்கே தன் மீது இருக்கும் சுயமதிப்பும் தன்னம்பிக்கையும் போய்விடும். 50 வருடங்களுக்கு முன் முகஅமைப்பில் ஒருவருக்குக் குறைபாடு என்றால், கடைசி வரை அதே முகத்தோடு வாழ்ந்து வாழ்க்கையை முடிக்க வேண்டியதுதான். இன்றைய நவீன மருத்துவம் நம்முடைய எல்லாப்  பிரச்னைகளையும் தீர்க்கக் கூடியதாக வளர்ந்திருக்கிறது. முகச்சீரமைப்பை சிலர் அழகுக்காக செய்துகொள்கிறார்கள். நாம் அவர்களைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. பிறவிக் குறைபாடு, விபத்து, புற்றுநோய் போன்ற காரணங்களால் ஒருவரது முகம் மற்றவர்களால் விரும்பத்தகாத வகையில் இருந்தால், என்னென்ன  நவீன சிகிச்சைகளால் அவர்களை இயல்பான வாழ்க்கைக்குக் கொண்டு வர முடியும் என்பதைப் பார்க்கலாம். தோற்றத்தைப் பாதிக்கும் குறைபாடு, ஆரோக்கியத்தைப் பாதிக்கும் குறைபாடு என இதில் இரு வகைகள் இருக்கிறது. தோற்றத்தைப் பாதிக்கும்  குறைபாடு ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்னையையும் உண்டாக்காது. இவற்றைச் சரிசெய்யும் சிகிச்சையை முக எலும்பு விரிவாக்க சிகிச்சை என்கிறோம். முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. முகத்துக்குத் தோற்றம் தரும் இந்த எலும்புகளில் சிறிய குறைபாடு ஏற்பட்டாலும் முகத்தின் அம்சம் பாதிக்கப்படும். முன்னால் இருக்கும் ஒரு பல் போனாலே தோற்றம் மாறுவது இதனால்தான். சமீப காலம்வரை இதுபோன்ற பாதிப்பு களுக்கு உடலின் வேறு பகுதியிலிருந்து எலும்பை எடுத்து பொருத்தி சீராக்குவார்கள். எலும்பு எடுக்கப்பட்ட இடத்தில் ஏற்படும் காயங்கள்  ஆறுவதற்கும் நாட்களாகும். கிருமித்தொற்று ஏற்பட்டால் வேறு நோய்கள் உண்டாகும் அபாயமும் உண்டு. நிரந்தரத் தழும்பும் தோன்றும். Distraction osteogenesis என்ற புதிய சிகிச்சையின்  மூலம் இந்த நிலை இப்போது வெற்றிகரமாக மாற்றப்பட்டிருக்கிறது. டிஸ்ட்ராக்‌ஷன் முறையின் மூலம் வேறு இடங்களில் இருந்து எலும்புகளை எடுக்காமல், குறைபாடான   எலும்பையே வளரச்செய்து சீர்செய்ய முடியும். கபாலம், முகம், தாடை போன்றவற்றிலுள்ள எலும்புகளை நீளச்செய்வதன் மூலம் பெரிய அறுவை சிகிச்சை எதுவும் தேவைப்படாமலேயே குணமாக்கும் சிகிச்சை முறை இது.

எலும்பு வளரச் செய்யும் முறையைத் தவிர மற்ற சிகிச்சை முறைகளை நோயாளியை மருத்துவமனையில் அனுமதிக்காமல் புறநோயாளிகள் பிரிவில் வைத்தே சிகிச்சை அளிக்கலாம். இந்த புதிய முறையை இல்லிசராவோ என்ற ரஷ்ய மருத்துவர்  முதன்முதலில் கண்டு பிடித்தார். ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, தைவான் போன்ற நாடுகளுக்குச் சென்று டிஸ்டிராக்‌ஷன் துறையில் பயிற்சி பெற்ற பிறகு, நான் இந்தியாவில் அறிமுகப்படுத்தினேன். உதடு அன்னப்பிளவு குறைபாடு களுடன் பிறந்த குழந்தைகளுக்கு அக்குறைபாடுகளின் சுவடே இல்லாமல் செய்வதைப்போலவே, கபால மற்றும் முகக்குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் அந்தக் குறைபாடே இல்லாத  வகையில் குணப்படுத்த முடியும். சில குழந்தைகளின் கபால எலும்புகள் கருவிலிருக்கும்போதே ஒன்றிணைந்துவிடும். இதனால் பிறக்கும்போதே  தலையின் அமைப்பு வித்தியாசமாக இருக்கும். பிறந்தபிறகு வளர்ச்சியடையும் குறைபாடுகளை குழந்தை பிறந்த ஒரு ஆண்டுக்குள்ளேயே  கண்டுபிடித்துவிடலாம்.  இந்த பிறவிக்குறைபாட்டின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக முகம் மற்றும் கபால அறுவை சிகிச்சை நிபுணரை அணுகி சரிசெய்து விட்டால் குழந்தையின் கபாலம் மற்றும் முகத்தோற்றம் இயல்பான நிலைக்குத் திரும்பிவிடும். Tissue engineering என்பது இன்னும்   நவீன சிகிச்சை. உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை வைத்தே எலும்பை உருவாக்க முடியும். இதேபோல தசைகளை வளர வைக்க Tissue expansion என்ற சிகிச்சை முறை இருக்கிறது.

நவீன சிகிச்சைகள் வந்திருக்கிறது என்பதைவிட நான் சொல்ல விரும்புகிற முக்கியமான விஷயம், வரும் முன்னரே தடுப்பது. கருப்பையில் குழந்தை
தங்கியிருக்கும் நிலை, தாய்க்கு வைட்டமின் டி அல்லது போலிக் அமில சத்துக்குறைபாடு, ரத்தசோகை, கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்குறைவு, தைராய்டு, கர்ப்பகாலத்தில் வயிற்றில் அடிபடுதல், மரபியல் ரீதியான காரணங்கள், தந்தைக்கு மது, புகைப்பழக்கம் இருப்பது போன்ற காரணங்களால் குறைபாடுள்ள குழந்தை பிறக்கிறது. தாய்க்கு இந்தப் பழக்கம் இருந்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க இருமடங்கு வாய்ப்பு அதிகம். அதனால், இந்தக் காரணங்களைத் தவிர்ப்பதன் மூலம் குறைபாடு உள்ள குழந்தை பிறக்காமலும் தடுக்க முடியும். 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. அப்போதெல்லாம், இரும்புக் கம்பிகளால் இழுத்து மூடுவது போன்ற கிரில் லிஃப்ட்டாக இருக்கும்.  கரன்ட் இல்லாத நேரத்தில், வீட்டு வேலைக்காரப் பெண்மணியின் 12 வயதுப் பெண் குழந்தை ஒருத்தி லிஃப்ட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறாள். எப்படி மாட்டிக் கொண்டாள் என்பது தெரியவில்லை. திடீரென கரன்ட் வந்தவுடன் தலைமுடி மாட்டிக் கொண்டுவிட்டது.  வேகமாக லிஃப்ட் மேலே கிளம்பியவுடன் தலைமுடி, தலையின் மேல் தோலான ஸ்கால்ப், முகத்தில் பாதி மேல் தோல் என எல்லாம் பிய்த்துக் கொண்டு லிஃப்ட்டோடு சென்றுவிட்டது. 

கதறிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணைக் கூட்டி வந்தார்கள். திரைப்படங்களில் பார்க்கிற மாதிரி, ஆட்டுத்தலையை வெட்டி எடுத்துட்டு வருவதுபோல,  அந்தப்பெண்ணின் தலைமுடியையும், அதில் ஒட்டிக் கொண்டிருக்கிற தசைகளோடும் கொண்டு வந்த காட்சி பயங்கரமானது. நல்லவேளையாக மண்டை  ஓட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை. உடனே மயக்க மருந்து கொடுத்து, சரியாகப் பொருத்தி, தையல்கள் போட்டு, அறுவை சிகிச்சை செய்தோம்.  சின்னப்பெண் என்பதால், விரைவில் குணமாகிவிட்டாள். சமீபத்தில் மருத்துவமனைக்கு ஒரு பெண் வந்திருந்தாள். ‘என்னை அடையாளம் தெரியுதா டாக்டர்?’ என்று கேட்டாள். எனக்கு நினைவு இல்லை. ‘நீங்க சிகிச்சை அளித்த அந்தப் பெண் நான்தான். இப்போ   நல்லாருக்கேன். இவங்க என்னுடைய குழந்தைங்க’ என்று சொன்னாள். ஒரு நிமிடம், எனக்கு அந்த நள்ளிரவு அறுவை சிகிச்சையும் பதற்றமான   செயல்களும் நினைவுக்கு வந்துபோனது. ‘பிழைப்பாளா’ என்று உறவினர்களால் சந்தேகமாகப் பார்க்கப்பட்ட ஒரு சின்னப்பெண், பல ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு குழந்தைகளோடு என்னை சந்திக்க வந்திருந்தது  என்றும் மறக்க முடியாத மகிழ்ச்சி!’’

- ஞானதேசிகன்
படம்: ஆர்.கோபால்

வேறு இடங்களில் இருந்து எலும்புகளை எடுக்காமல், குறைபாடான எலும்பையே வளரச் செய்து சீர்செய்ய முடியும். கபாலம், முகம், தாடை எலும்புகளை நீளச்செய்வதன் மூலம் பெரிய அறுவை சிகிச்சை இல்லாமலேயே குணமாக்கும் சிகிச்சை முறை இது.