அப்துல் கலாம் அளித்த அரிய விருதுகள்!எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மற்றும் மூடநீக்கியல் துறையில் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் மிகவும் பிரபலமானவர். சிங்கப்பூர், இங்கிலாந்து   ஆகிய நாடுகளில் முறையே Ortho, Bone Bank போன்ற சிறப்புப் பிரிவுகளில் பட்டங்கள் பெற்றவர்.  தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஏழாவது துணைவேந்தர் (2009-2012), அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை   மருத்துவக் கல்லூரியின் Institute Of Orthopedics And Traumatologyன் முதல் இயக்குநர், Asia Pacific Musculoskeletal Tumour Societyன் தலைவர்   பதவி வகித்த முதல் இந்தியர்  என ஏராளமான பெருமைகளுக்கு உரியவர். இவரின் மருத்துவ சேவைக்காக, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் இருந்து டாக்டர் பி.சி.ராய் விருது, Welfare Of The Disabled தேசிய விருது, பத்ம விருதுகளைப் பெற்றவர். தன் நீண்டகால   அனுபவத்தில், எலும்பு தொடர்பான சிகிச்சை முறைகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி பற்றியும், மனதை நெகிழ வைத்த சம்பவங்கள் குறித்தும் நம்மிடையே பேசினார்.

‘‘எலும்பு முறிவு அறுவை சிகிச்சையில் தொழில்நுட்பம் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு முடநீக்கியல் துறைக்குத் தேவையான பல நவீன   கருவிகள் உபயோகத்தில் இருப்பதே முக்கிய காரணம். குறிப்பாக எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களின் தன்மைகள், அவற்றின் மூலகாரணங்களை   எளிதில் கண்டுபிடிக்க உதவும் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் போன்ற சாதனங்கள் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அதிநவீன முறையில்   வடிவமைக்கப்பட்டுள்ளன. எலும்பு அறுவை சிகிச்சையில் இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஆதாரமாக, என் ஆராய்ச்சி அனுபவத்தைச் சொல்ல வேண்டும். நான் 1988ல்   ஆரம்பித்த ஆராய்ச்சியின் முடிவில் எலும்பு புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவரின் கை அல்லது கால் எலும்புப் பகுதியை மட்டும் அறுவை சிகிச்சை   மூலம் அகற்றி விட்டு, சென்னையில் தயாரிக்கப்பட்ட  உலோகத்தால் ஆன செயற்கை கை, கால்களை (INDIGENOUS CUSTOM MEGA   PROSTHESIS) பொருத்தி அவர் இயங்கும் நிலைக்கு கொண்டு வர முடிந்தது. இந்த உலோக எலும்பு பொருத்தியின் விலை வெளிநாட்டில் ரூ.4   லட்சத்து 50 ஆயிரம். நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட அதன் விலையோ ரூ.75 ஆயிரம் மட்டுமே. இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு   இந்த முறையில் அறுவை சிகிச்சை செய்துள்ளேன். டாக்டர் அப்துல் கலாம் அவர்களை சந்தித்த போது இதற்காகவே என்னைப் பாராட்டினார்.

தேய்ந்து போன கால் மற்றும் இடுப்புமூட்டை சரி செய்ய நவீன மூட்டுமாற்று சிகிச்சை முறை வந்துள்ளது. கால் மற்றும் தோள்பட்டை பாகங்களில் ஜவ்வு சேதமடைந்திருந்தால், கீஹோல் அறுவை சிகிச்சை (KEYHOLE SURGERY)  என்ற நூதன அறுவை   சிகிச்சை செய்து குணப்படுத்துகிறோம். பழைய சிகிச்சை முறையில், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள
நோயாளிகள் எழுந்து நடமாட 3 மாதங்கள் ஆகும். நவீன முறை  (ப்ளேட்டிங் மற்றும் நெய்லிங்) அறுவை சிகிச்சையிலோ இரண்டே வாரங்களில்   குணமாகி அன்றாட வேலைகளை மேற்கொள்ள முடியும்’’ என்கிற டாக்டர் மயில்வாகனன் நடராஜனுக்கு மருத்துவத் துறையில் மறக்க முடியாத   பெருமைகள் பல உள்ளன. “மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர் களிடம்  பாராட்டு பெற்றதோடு, அவர் குடியரசுத் தலைவராக பணியாற்றிய 5 ஆண்டு  காலத்தில், அவர் கையால் 3 சிறந்த விருதுகளைப் பெற்றதே மறக்க முடியாத பெருமை. மற்றொரு சம்பவம், 2005 டிசம்பர் 3ம்  தேதிக்கு   முதல் நாள் எனது தந்தை  டாக்டர் நடராஜன் மறைந்து விட்டார். வீட்டில் மூத்த  மகன் நான் என்பதால்  சம்பிரதாயப்படி மொட்டை  அடித்து   இருந்தேன். மறுநாளே டெல்லியில் ஊனமுற்றோர் சேவைக்கான தேசிய விருதைப் பெறவேண்டிய சூழ்நிலை.  அருகில் இருந்த அன்றைய மத்திய   அமைச்சர் சுப்பு லட்சுமி ஜெகதீசனிடம் மொட்டைக்கான காரணத்தைச்  சொன்னவுடன், விருது வழங்கும் மேடையிலேயே தனது ஆழ்ந்த அனுதாபத்தைத்    தெரிவித்தார். இந்த இரண்டும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள்’’ என நெகிழ்கிறார்.

உலோக எலும்பு பொருத்தியின் விலை  வெளிநாட்டில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம். நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட அதன்  விலையோ ரூ.75 ஆயிரம்   மட்டுமே. இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  நோயாளிகளுக்கு இந்த முறையில் அறுவை சிகிச்சை செய்து உள்ளேன். டாக்டர்  அப்துல் கலாம்   இதற்காகவே என்னைப் பாராட்டினார்.

- விஜயகுமார்
 படம்: ஆர்.கோபால்