அனிச்சை செயலை ஆராய்ந்தவர்!



இவான் பாவ்லோவ். இவர் செரிமான மண்டலத்தைப் பற்றி மேற்கொண்ட ஆய்வுகளுக்காக மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றவர். உடல் இயக்கவியல் மற்றும் உளவியல் பிரிவில் அதிக அறிவு பெற்றவர்.

 மிகச்சிறந்த மருத்துவரும் கூட. இவான், ரஷ்யாவில் 1849ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி ரியாசன் என்ற இடத்தில், ஒரு வறுமை மிகுந்த குடும்பத்தில் பிறந்தார். இவானுக்கு இளமையிலேயே அறிவாற்றல் அதிகம். இவர் பள்ளிப் படிப்பை சிறந்த முறையில் முடித்தார். படிக்கும் காலத்திலேயே மருத்துவராக வேண்டும் என்கிற தீவிரம் இவரிடம் இருந்தது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் படித்து, பின் மருத்துவத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார் இவான்.

இவான், நாய்களை வைத்து நடத்திய ஆராய்ச்சியின் மூலம் அனிச்சைச் செயல் என்பதை முதன்முதலில் விளக்கினார். அதன் மூலம் அவரது புகழ் உலகம் முழுக்கப் பரவியது.
நாய்களின் இரைப்பை செயல்பாடுகளை ஆராய்ச்சி செய்ய இவர் வெவ்வேறு சூழ்நிலைகளில் நாய்களுக்கு உணவினை கொடுத்தார். அதன் உமிழ்நீர் சுரப்பியை தொடர்ந்து கண்காணித்தார். அந்த நாய்களுக்கு உணவு தருவதற்கு முன்பு மணியடிக்கும் வழக்கத்தை ஆரம்பித்தார். காலப்போக்கில் மணி ஓசை கேட்டதும் உணவு வரும் என்கிற எண்ணம் நாய்களுக்கு வர, உடனே உமிழ்நீர் சுரப்பதும் வழக்கமானது. இதை குறித்துக் கொண்டார், இவான்.

அடுத்தகட்ட ஆய்வாக கொஞ்ச நாளைக்கு மணி அடித்த பிறகு நாய்க்கு உணவு தருவது நிறுத்தப்பட்டது. அப்போது காலப்போக்கில் நாய்களிடத்தில் ஏற்படும் மாற்றங்கள் கவனிக்கப்பட்டன. அதில் தெரியவந்தது என்னவென்றால், மணியடிக்கப்பட்ட பின்னும் உணவு ஏதும் தராதபோது, நாயின் உமிழ்நீர் சுரத்தல் நின்றுபோயிருந்தது. அதாவது, மாறிய புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தூண்டுதலும் மாறிவிட்டது. மூளையின் புறப்பகுதி சரியாக வேலை செய்யாதபோது இத்தகைய செயல்கள் நடைபெறாது எனவும் கண்டுபிடித்தார்.

நீண்ட ஆய்வுகளுக்குப் பின்னர் உணவினைப் பார்த்தவுடன் உமிழ்நீர் சுரப்பது மற்றும் அனிச்சைச் செயல் ஆகியவற்றை விளக்கினார். ‘விலங்குகள் தமது முந்தைய அனுபவத்தின் அடிப்படையில் அனிச்சையாக தூண்டலுக்கு உள்ளாகின்றன. குறிப்பிட்ட நேரத்தில் உணவினை வைத்துப் பழக்கிவிட்டால், ஒருநாள் உணவினை வைக்காவிட்டாலும் உளவியல் தூண்டல் காரணமாகக் குறிப்பிட்ட நேரத்தில் உமிழ்நீர் சுரக்கிறது’ என்பதையும் நிரூபித்தார், இவான். 

விலங்குகளின்மீது செய்யப்பட்ட இந்த ஆராய்ச்சி நியதிகளை அவர் மனித இனத்திற்குப் பொருத்திப் பார்த்து கருத்து தெரிவிக்க முற்பட்ட சமயத்தில், 1936ம் ஆண்டு காலமானார். ‘இவானின் மறைவு உயிரியல் ஆய்வுலகிற்கு மிகப்பெரிய இழப்பு’ என்கிறது அறிவியல் உலகம்.

- சி.பரத்