தூவானம்




இசை நடை


நடை பயிலும்போதே இசையையும் சுகிக்க வாய்ப்பளிக்கும் வாக்மேன், 1979ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஜப்பானின் சோனி நிறுவனத் தலைவர், உடற்பயிற்சிக்காக காலை வேளையில் நடை பயின்றுகொண்டிருந்தபோது, அனாவசியமாக சிந்தனையை செலுத்தாமல் பயனுள்ள வகையில் அந்த நேரத்தைப் பயன்படுத்தினால் என்ன என்று சிந்தித்ததன் விளைவுதான் வாக்மேன்.


ஆப்பிள் ரோஜா

ஆப்பிள், ரோஜா மலர்க் குடும்பத்தைச் சேர்ந்தது. மொத்தம் 7100 வகையான ஆப்பிள்கள் உலகெங்கும் வளர்க்கப்படுகின்றன. குளிர்ப் பிரதேசங்களில் வெகு எளிதாக வளர்க்கப்படும் தாவரம் இது. பூர்வீகம் என்னவோ ரோஜாச் செடியாக இருந்தாலும், இப்போது இது சிறு மரமாகத்தான் வளர்கிறது.

இந்திய அமெரிக்கா

அமெரிக்காவிலுள்ள விண்வெளி ஆய்வுக்கூடமான நாசாவில் பணியாற்றுபவர்களில் இந்தியர்கள், 36 சதவீதத்தினர். மொத்தத்தில் 33 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் வசிப்பதாக சொல்லப்படுகிறது. அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் அவர்களுடைய வம்சாவளியினரின் தொகை, அமெரிக்க மக்கள் தொகையில் 23 சதவீதம். அதேபோல அமெரிக்க மருத்துவர்களில் 38 சதவீதம் பேர் இந்தியர்கள்.

கொஞ்சம் கிரிக்கெட்

இந்திய மண்ணில் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்றது. ஆண்டு, 1933; இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே. ஒரு ஓவரின் ஆறு பந்துகளையும் சிக்ஸராக விளாசி, 36 ரன்களைக் குவித்த முதல் வீரர், நம் ரவி சாஸ்திரி. இவருக்கு முன் எச்.மார்லே என்ற இங்கிலாந்து வீரர் ஒரே ஓவரில் 62 ரன்களை எடுத்தார்.

என்ன, அப்போது ஒரு ஓவருக்கு எட்டு பந்துகள் என்றும், பவுண்டரி எல்லைக் கோடு இல்லாததும், வெளியே அடிக்கப்பட்ட பந்தைத் தேடிப் பொறுக்கி எடுத்துக்கொண்டு வரும்வரை எவ்வளவு ரன்கள் வேண்டுமானாலும் ஓடிக்கொண்டிருக்கலாம் என்றும் விதி இருந்தது! மிகக் குறைந்த பந்துகள் வீசி, நூறு விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமையும் இந்தியருக்கே உண்டு - கபில் தேவ்.

ஜனவரி ஒன்று

ஜனவரி முதல் தேதியை உலகெங்கும் புத்தாண்டு பிறப்பாகக் கொண்டாடுகிறோம். ஆனால் சூடானில் இன்னொரு விசேஷத்துக்காகவும் கொண்டாடுகிறார்கள். அன்று அவர்களுடைய சுதந்திர தினமுமாகும். இந்த சுதந்திரத்தால், ஒரு வருடத்தில் ஒரு விடுமுறை நாளை அவர்கள் இழக்கிறார்கள், பாவம்.

திரைக்குப் பின்னால்

தன் சிந்தனைகளையும், செயல்களையும் வெளிப்படுத்திக்கொள்ளாத வகையில் இரும்புத் திரை நாடு என்று வர்ணிக்கப்பட்டது, ரஷ்யா. இதன் இரும்புத் திரை விவகாரங்களில் ஆக்கபூர்வமான ஒரு நடவடிக்கையும் உண்டு - அது அனைத்து ரஷ்ய குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வித் திட்டம்.

- வித்யுத்