ஆண் கொர்... பெண் கொர்!



அதிகம் குறட்டை விடுவது ஆண்களா? பெண்களா?
- எஸ்.கமலா, 8ம் வகுப்பு,
சிஎம்சி பள்ளி, தென்காசி.

இந்தப் பெருமை ஆண்களுக்கே! பெண்களை விட இரு மடங்கு குறட்டை ஆண்கள் பக்கம் இருந்தே வருகிறது. அடினாய்டு திசுவின் அதீத வளர்ச்சி காரணமாகவோ, மூக்கில் ஏற்படும் தடையாலோ சில நேரங்களில் குறட்டை வெளிப்படலாம். ஆனால், பரிணாம வளர்ச்சிக்கும் இதில் பங்கு உண்டு! நாம் பேசத் தொடங்கி, மொழிகள் தோன்றிய பிறகு, நம் குரல்வளைகள் கழுத்துப்பகுதியில் சற்றே கீழ் இறங்கியிருக்கின்றன. இதனால் நாக்குக்குப் பின்புறம் சிறு இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. இதற்கு Oropharynx என்று பெயர். மற்ற தசைகளைப் போலவே, நாம் உறங்குகையில் நாக்கும் ரிலாக்ஸ் செய்து கொள்வதால், அந்த இடைவெளியில் நாக்குப்பகுதி விழுகிறது. அப்போது   நாம் முதுகு தரையில் படும்படி   உறங்கினால், சுவாசிப்பதில் தடை ஏற்பட்டு, குறட்டையாக வெளிப்படுகிறது.

இந்த இடைவெளி பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக இருப்பதால்தான், ஆண்கள் குறட்டை விட்டுக்கொண்டே தூங்குகிறார்கள். பெண்கள் குறட்டைச் சத்தம் கேட்டு எழுந்துவிடுகிறார்கள்! சர்க்கரையினால் கேன்சர் ஏற்படும் வாய்ப்புள்ளது என்றொரு செய்தி படித்தேன். உண்மையா?
- எஸ்.விமல், 10ம் வகுப்பு, சாய்ராம் பள்ளி, சென்னை-45.

மிக அதிக அளவு சர்க்கரை எடுத்துக் கொள்பவர்களுக்கு கேன்சர் தாக்கும் அபாயம் இருப்பது ஓரளவு உண்மைதான். 20ம் நூற்றாண்டில், ஆப்ரிக்காவில் ‘நாகரிக மாற்றத்தால் உண்டாகும் நோய்கள்’ பற்றிய ஆராய்ச்சி நடத்தப்பட்ட போதே, இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பணிபுரிந்த மருத்துவ விஞ்ஞானிகள் நீரிழிவு, இதய நோய்களோடு, சில வகை கேன்சர்களையும் அடையாளம் கண்டனர். இதைத் தொடர்ந்து, அதிகரிக்கும் குளுக்கோஸ் அளவுக்கும் கேன்சருக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய ஆய்வுகள் தொடர்கின்றன.

2005ல், 13 லட்சம் கொரிய மக்களிடம் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது. இருப்பினும், ‘சர்க்கரை சாப்பிடாதே’ என மிரட்டுகிற அளவுக்கு, இது பூதாகரமான விளைவுகளை ஏற்படுத்தவில்லை. கேன்சருக்கு இன்னும் பிற வாழ்க்கைக் காரணிகளும் காரணமாக இருக்கக்கூடும் என்பதால், இப்போதைக்கு இனிப்புக்கு இடைஞ்சல் இல்லை!