ரத்தசோகையை கண்டுபிடிக்கும் புதிய கருவி!



டாக்டர் கு.கணேசன்

தமிழகத்தில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 22 குழந்தைகள் இறந்துவிடுவதாகவும், பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் 1 லட்சம் கர்ப்பிணிகளில் 85 பேர் உயிரிழப்பதாகவும் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சிசு மற்றும் கர்ப்பிணிகள் மரணத்துக்கு கர்ப்பிணிகளிடம் காணப்படும் ரத்தசோகைதான் முக்கியக் காரணியாக  உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. 

கர்ப்பிணிகள் மட்டுமல்ல, இந்தியாவில் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 80 சதவீதம் பேரும் இளம் பெண்களில் 56 சதவீதம் பேரும் இளைஞர்களில் 30 சதவீதம் பேரும் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதை   ரத்தசோகை (Anemia) என்கிறோம். பொதுவாக, ஆண்களுக்கு 14 முதல் 16 கிராம் சதவீதம் வரையிலும் பெண்களுக்கு 12 முதல் 14 கிராம் சதவீதம் வரையிலும் ஹீமோகுளோபின் ரத்தத்தில் இருக்கும்.

இது 10 கிராம் சதவீதம் எனும் அளவுக்குக் கீழ் குறைந்துவிட்டால், அது ரத்த சோகை. ஹீமோகுளோபின் என்பது இரும்புச் சத்தும் புரதமும் இணைந்த ஒரு கூட்டுப்பொருள். இது ரத்தச் சிவப்பணுக்களில் அதிக அளவில் காணப்படும். சிவப்பணுவின் பிறப்பிடம், எலும்பு மஜ்ஜை. அங்கு சிவப்பணுக்கள் உற்பத்தியாவதற்கு இரும்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்-பி12, வைட்டமின்-சி மற்றும் ஃபோலிக் அமிலம் தேவை.

உணவில் தேவையான அளவுக்கு இரும்புச் சத்தும் ஊட்டச்சத்தும் இல்லாதபோது ரத்தசோகை ஏற்படுகிறது. சிவப்பணுக் கோளாறு, ரத்தமிழப்பு, குடல் புழுக்கள், ரத்தப் புற்றுநோய் மற்றும் மலேரியா, மஞ்சள் காமாலை போன்ற தொற்று நோய்கள் காரணமாகவும் இது ஏற்படுவதுண்டு. உடல் திசுக்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு சேர்ப்பது ஹீமோகுளோபினின் வேலை. இதன் அளவு குறையும்போது, திசுக்களுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பது குறையும். உடலில் அதிகமான சோர்வும் களைப்பும் உண்டாகும். அடிக்கடி தலைவலி, உடல்வலி, கைகால் குடைச்சல், தூக்கமின்மை ஏற்படும்.

அடுத்து, கடுமையான வேலைகள் செய்தால் மூச்சுத் திணறுவது, படபடப்பாக வருவது, நெஞ்சு வலிப்பது, பெருமூச்சு வருவது, தலைசுற்றல் மற்றும் மயக்கம் வருவது போன்ற அறிகுறிகள் தெரியும். நகங்களில் ‘ஸ்பூன்’ மாதிரி குழி விழும். தலைமுடி உதிரும். சிறுவர், சிறுமிகளுக்கு வயதுக்கேற்ற உடல் வளர்ச்சி இருக்காது. நினைவாற்றல் குறையும். படிப்பில் ஆர்வம் குறையும். தோல், நகம், கண், நாக்கு ஆகியவை வெளுத்துக் காணப்படுவதும், முகம் மற்றும் கணுக்கால்கள் வீங்குவதும் இந்த நோய்க்கே உரித்தான முக்கிய அறி குறிகள்.

ஒருவருக்கு ரத்தசோகை இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பதற்கு அவருடைய ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவைத் தெரிந்துகொள்வது நடைமுறை. இதற்கு ‘ஹீமோகுளோபினோமீட்டர்’ எனும் கருவி உதவுகிறது. இதில் பயனாளியின் ரத்தத்தை எடுத்து N/10 ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் கலந்து பரிசோதிக்கிறார்கள். ரத்தத்தின் நிறமும் இக்கருவியின் வெளிப்பகுதியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிறமும் பொருந்துகிற அளவை ஹீமோகுளோபின் அளவாக எடுத்துக் கொள்கிறார்கள். சாலி (Sahli) என்பவர் கண்டுபிடித்த இந்தப் பரிசோதனை முறை மிகப் பழையது. இது காட்டுகின்ற அளவு மிகத் துல்லியம் என்றும் சொல்லிவிடமுடியாது. ஆகவே, இதைவிட சிறந்த முறை ஒன்று தேவைப்பட்டது. அந்தத் தேவையை நிவர்த்தி செய்யும் விதமாக சிபிசி கவுன்ட்டர் (CBC Counter) எனும் கருவி பயன்பாட்டுக்கு வந்தது.

பயனாளியிடமிருந்து சில மில்லி அளவுக்கு ரத்தத்தை எடுத்து இந்தக் கருவிக்குள் செலுத்தி விட்டால், அதில் உள்ள ‘போட்டோ சென்சார்’ எனும் அமைப்பின் உதவியுடன் ஹீமோகுளோபின் அளவைத் தெரிவித்துவிடும். இந்தக் கருவியின் விலை லட்சங்களில். மேலும், நவீன பரிசோதனைக் கூடங்களில் மட்டுமே இந்த வசதி இருக்கிறது. இதற்கான கட்டணமும் அதிகம். ஆகவே, இந்த இரண்டையும் மிஞ்சுகிற வகையில் ஒரு ரத்தப் பரிசோதனையைத் தேடிக்கொண்டிருந்தது மருத்துவத்துறை. சமீபத்தில் இதற்கும் ஒரு வழி கிடைத்து விட்டது.

டெல்லியில் உள்ள ஐ.ஐ.டியின் மாணவர் ஆம்பர் ஸ்ரீவஸ்தவா என்பவர் கிமிமிவிஷி மருத்துவமனை மருத்துவர்களின் வழிகாட்டுதலுடன் ‘ட்ரூஹெச்பி ஹீமோமீட்டர்’ (TrueHb Hemometer ) எனும் கருவியைக் கண்டுபிடித்துள்ளார். ‘‘ஒரு மொபைல் போன் போன்று இருக்கின்ற இக் கருவி ரத்தச் சர்க்கரை அளவை உடனடியாகக் கண்டறியும் குளுக்கோமீட்டர் மாதிரி செயல்படுகிறது. முதலில் சில வேதிப்பொருள்கள் தடவப்பட்ட பட்டையை இந்தக் கருவிக்குள் நுழைத்துக்கொள்ள வேண்டும். பயனாளியின் விரல் நுனியில் இதற்கென உள்ள லேன்செட் ஊசி வைத்துக் குத்தி, ஒரு சொட்டு ரத்தமெடுத்து இந்தப் பட்டையின் வெளிப் பகுதியில் வைக்க வேண்டும்.

உடனே இந்த வேதிப்பொருள்கள் ரத்தச் சிவப்பணுக்களிலிருந்து ஹீமோகுளோபினை மட்டும் பிரித்தெடுத்து கருவிக்குள் தகவல் அனுப்புகிறது. அதில் உள்ள ஹீமோகுளோபினை ‘ஸிமீயீறீமீநீtணீஸீநீமீ றிலீஷீtஷீனீமீtக்ஷீஹ்’ எனும் முறையில் கருவி அளந்து 45 நொடிகளுக்குள் அதன் டிஜிட்டல் திரையில் காண்பித்து விடுகிறது. இந்த அளவு மிகத் துல்லியமானது என்று புதுடெல்லியில் உள்ள கிமிமிவிஷி மருத்துவமனை மருத்துவர்களே சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

800 கிராம் எடையுள்ள இக்கருவி, பேட்டரியில் இயங்குகிறது. இதை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். ஒருமுறை ரீசார்ஜ் செய்துகொண்டால் இதில் 300 முறை பரிசோதித்துக் கொள்ளலாம். 1000 அளவுகளைப் பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள மருத்துவமனை/லேபுக்குத்தான் செல்ல வேண்டும் என்பதில்லை.

வீட்டிலேயே இதைக் கொண்டு நம் ஹீமோகுளோபின் அளவைத் தெரிந்து கொள்ள முடியும். யார் வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக, கிராமங்களுக்கு வரும் சுகாதாரப் பணியாளர்கள் இதை எளிதில் பயன்படுத்த முடியும். இதற்கு ஆகும் செலவு மிகக் குறைவு.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகளில் நடத்தப்படும் நோய் முன்கண்டுபிடிப்பு முகாம்களில் இதைப் பயன்படுத்தி, ரத்தசோகையை ஆரம்பத்திலேயே அறிந்து தகுந்த சிகிச்சையை மேற்கொண்டால், விரைவிலேயே இந்தியா ரத்தசோகை இல்லாத நாடாக மாறும்’’ என்கிறார் ஆம்பர் ஸ்ரீவஸ்தவா.

(இன்னும் இருக்கு)