தூவானம்



உயர்ந்த ஆன்டெனா

உலகிலேயே மிக உயரமாக அமைக்கப்பட்டுள்ள ஆன்டெனா, போலந்து நாட்டின் தலைநகரமான வார்ஸாவில் உள்ளதுதான். தொலைதூரப் பகுதிகளுக்கும் தகவல் ஒலிபரப்பாகும் வகையில் இது 2000 அடி உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

திருமணக் குற்றம்நம் நாட்டில் திருமணக் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பத்திரிகைகள் சொல்கின்றன. திருமணத்துக்குப் பிறகான இந்தக் குற்றங்கள் மலிவது இருக்கட்டும், பண்டைய கிரேக்க நாட்டில் எப்படித் தெரியுமா? திருமணம் செய்யாதிருப்பதையே ஒரு குற்றமாகக் கருதி விசாரணையும் நடத்தப்பட்டது அங்கே!

கடலில் கிடக்குது பொக்கிஷம்

ஜப்பான் தன் நாட்டிற்குத் தேவையான மொத்த யுரேனியத்தையும் கடலிலிருந்து பெற்றுக் கொள்கிறது. நமக்கும் அதே கடல் யுரேனியத்தை தாராளமாக வழங்கத் தயாராக இருந்தாலும், அதைப் புறக்கணித்துவிட்டு நாம் அமெரிக்காவிடமிருந்து பெரிய விலை கொடுத்து வாங்குகிறோம்.

நீல மாளிகை தெரியுமா?

வெள்ளை மாளிகை - அமெரிக்க குடியரசுத் தலைவர் வசிக்கும் மாளிகையின் பெயர். அதேபோல நீல மாளிகை என்றும் ஒன்று இருக்கிறது. இதுவும் குடியரசுத் தலைவர் வசிக்கும் ‘வீடு’தான். ஆனால் இந்த மாளிகை, தென் கொரிய நாட்டில் உள்ளது; அந்த நாட்டு அதிபர் பயன்பாட்டுக்கானது.தூக்கத்துக்குத் தலையணை

‘தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவைப்படாது’ என்பது ஒரு பழமொழி. அதாவது நல்ல தூக்கம் வந்துவிட்டால், தலையணை இல்லாமலேயே உறக்கம் ஏற்படும். இப்படி படுக்கை, தலையணை என்று தூக்கத்தின் அருமையை உணர்ந்து ஓய்வுக்கு நிறைவான வழியைக் கண்டுபிடித்தவர்கள் கிரேக்கர்கள்.

வாழ்த்தின் ராகம்

தமிழ்நாட்டில் அரசு விழாக்களில் மட்டுமல்லாமல், சில தனியார் விழாக்களிலும், கலை நிகழ்ச்சிகளிலும் ஆரம்ப அம்சமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறார்கள். ‘நீராரும் கடலுடுத்த...’ என்று தொடங்கும் அந்தப் பாடல் இசையாக ஒலிக்கும்போது அனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய்க்கு வணக்கம் செலுத்துவதும் வழக்கம். இந்தப் பாடல் எந்த ராகத்தில் அமைந்திருக்கிறது தெரியுமா? மோகன ராகத்தில்.

அறிகுறிகள்...

நம் மூளை சோர்வு அடையுமானால், அல்லது நமக்கு ஓய்வெடுக்க வேண்டிய அளவுக்கு களைப்பு ஏற்படுமானால், அதைத் தெரிவிக்கும் அறிகுறிதான் கொட்டாவி. நம் உணவில் அதிக அளவு புரதச் சத்து இருந்தாலோ, அதிக புளிப்புச் சத்து இருந்தாலோ, அதைத் தெரிவிக்கும் அறிகுறி, ஏப்பம். வயிற்றுக்குள் உதரவிதா னம் சரிவர சுருங்கி விரிய முடியாதபோது அதைத் தெரிவிக்கும் அறிகுறி, விக்கல். உணவை உண்ணும்போது உணவுக் குழாயிலிருந்து தப்பித்து மூச்சுக் குழாய்க்குள் ஏதேனும் உணவுத் துகள் போய்விடுமானால், அதை அறிவிக்கும் அறிகுறிதான் ‘புறை ஏறுதல்’.

அணு பிளப்பான்

மாணவர்களிடையே, சைக்கிள் ஓட்டிச் செல்லும் ஒருவரைக் காட்டி, ‘‘அவர்தான் சைக்ளோட்ரான்’’ என்று சொல்லி திகைக்க வைப்பது வழக்கம். ஆனால் சைக்ளோட்ரான் என்பது ஒரு சாதனமும் கூட. இது அணுவைப் பிளக்கப் பயன்படுகிறது.

- வித்யுத்