வியக்க வைக்கும் வண்டின தாயன்பு!



பூச்சிப் பூக்கள் 30


மேலை நாடுகளில் சில இன வண்டுகளுக்கு தீவிரவாத அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவை பொருளாதார முக்கியத்துவம் பெற்றதாகவும் கருதப்படுகிறது. இதில் கண்டவுடன் சுட்டுத் தள்ள வேண்டிய அயிட்டம் ‘கொலராடோ வண்டு’தான்! உருளைக் கிழங்குச் செடியென்றால் இவற்றிற்கு ஏகப்பட்ட இஷ்டம்.

உபரியாக தக்காளி மற்றும் பொன்னெட் குடை மிளகாய்ச் செடிகளையும் இவை விட்டு வைப்பதில்லை. இவற்றை சர்வ நாசம் செய்து விவசாயிகளை கன்னத்தில் கை வைக்க வைத்துவிடும்.

இந்த வண்டுகளை அழிக்கும் போராட்டத்தில் விவசாயிகளும் விதம்விதமான விலையுயர்ந்த பூச்சிக் கொல்லி மருந்துகளுக்காக ஏகப்பட்ட செலவு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும் இவை எளிதில் புதிய கொல்லி மருந்துகளுக்கு பூரணமான வீரிய எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடுகின்றன. இதனால் ஆண்டுதோறும் ஏற்படும் இழப்பு, லட்சக்கணக்கான டாலர்கள்!

கூடி முடித்த பெண் வண்டுகள் தம் முட்டைகளை இடுவதற்கு பாதுகாப்பும் உணவும் கிடைக்கிற தோதான இடத்தைத் தேடும். இதன் முட்டைகள் ஓவல், உருண்டை, சதுரம் மற்றும் நீள் சதுரம் போன்ற பல்வேறு வடிவங்களில் இருப்பதுண்டு. ஒரு ஒற்றை முட்டை முதல் பல்லாயிரம் முட்டைகள் வரை இனத்திற்கேற்ப வண்டுகள் முட்டையிடுகின்றன.

 பிற ஜீவராசிகளைப் போல் வண்டுகள் தம் வாரிசுகளுக்கு சிசுருஷை எதுவும் செய்வதில்லை. எனவே தமது முட்டையை மட்டும், அதிலிருந்து வெளிவரும் லார்வா புழுவிற்கு பிரியமான உணவு கிடைக்கும் இடத்தில் பாதுகாப்பாக இடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.

பிற பூச்சிகளின் லார்வாக்களைப் போல் இல்லாமல் வண்டுகளின் லார்வாக்கள் மிகவும் வித்தியாசமானவை. இதன் முரட்டுத்தனமான கரிய நிறத் தலையைப் பார்த்தவுடனே கண்டு
பிடித்து விடலாம். வண்டுகளுக்குள்ளும் இனத்திற்கு இனம் இந்தப் புழுக்களின் தோற்றம் மாறுபட்டிருப்பதுண்டு. சிலவற்றின் உடல் மிருதுவாகவும் சிலவற்றின் உடல் சொரசொரப்பாகவும் இருப்பதுண்டு.

வண்டுகளின் எல்லா வகைப் புழுக்களுமே மாயா பஜார் பார்ட்டிகள்தான்! ஏகப்பட்ட தீனியைத் தின்னும். புழுவாக வாழும் காலம் முழுவதும் தின்பதுதான் ஒரே வேலை. இதற்கெனவே இவை முட்டையிலிருந்து வெளிவரும்போதே தீனியை அரைப்பதற்குத் தோதான தாடைகளோடு பிறக்கின்றன.

ஆனாலும் இவை கண்டதையெல்லாம் உட்கொள்வதில்லை. தமக்குப் பிடித்தமானதை மட்டுமே உட்கொள்கின்றன. தாவர இலைகள் என்றாலும் குறிப்பிட்டவற்றை மட்டுமே சாப்பிடும்! இதுபோக பலதரப்பட்ட உணவுகளின் மீது ஒவ்வொரு இனமும் பிரியம் வைத்திருக்கின்றன.

எனவே தாய் வண்டு தனது லார்வாவிற்கு பிடித்தமான இரை மலிந்துள்ள இடத்தைத் தேடி வந்து முட்டையிடுகிறது. இவ்வகையில் பலதரப்பட்ட தாவரங்கள், பட்டுப் போன மரங்கள், கிடங்கில் சேமித்து வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் என்று முட்டையிடுவதற்கு வண்டுகள் இடத்தை தேர்வு செய்து கொள்கின்றன.பிஸிஸ்ட்டர் வண்டுகள் தமது லார்வாவிற்கு பிடித்தமான வெட்டுக்கிளியின் முட்டைகள் நிறைந்துள்ள மண் பகுதியில் முட்டை இடுகின்றன.

வீவல் வண்டுகள் தென்னை மரத்தின் குருத்துப் பகுதியில் முட்டையிடுகின்றன. டைகர் வண்டுகள் சிறு பூச்சிகள் நிறைந்த பகுதியில் மண்ணில் வளையமைத்து முட்டையிடுகின்றன. வெளிவரும் லார்வாக்கள் இந்த வளையின் நுழைவாயிலில் காத்திருந்து வழியே போகும் பூச்சிகளைப் பிடித்து உண்ணும்.

லேடி பேர்டு வண்டுகள் பிடித்தமான தாவரத்தில் துளையிட்டு அதற்குள் முட்டையிடுகின்றன. சில வண்டுகள் பூக்களின் மீது முட்டை இடுகின்றன. இம்முட்டைகள் பொரிவதற்குள் பூக்கள் காயாகி விடுவதுண்டு. எனவே வெளிப்படும் லார்வா காய்க்குள்ளேயே சிக்கிக் கொள்ளும். அங்கே கிடைக்கும் ருசியான உணவை உட்கொண்டே அவை ஜீவிக்கின்றன. மாம்பழ வண்டு!

இரட்டைக் கொம்பு வண்டு, ஸ்காராப் வண்டு, காண்டாமிருக வண்டு போன்ற சாணமுருட்டும் வண்டுகள் முட்டை இடுவதற்கு சூப்பர் டெக்னிக்கை வைத்திருக்கின்றன. இவ்வண்டுகள் முட்டையிடுவதற்கு முன்பு தனது மோப்ப சக்தியைக் கொண்டே வெகு தூரத்தில் கிடக்கும் புதிய மாட்டு சாணத்தைத் தேடி வந்துவிடும்.

 தன் மண்வெட்டி போன்ற தலையால் சாணத்தை எடுத்து, மண்ணில் போட்டு தனது கால்களையும் தாடைகளையும் பயன்படுத்தி முன்னும் பின்னுமாய் உருட்டும். ஒட்டிய மண்ணால் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு சாணம் இறுகி உருண்டையாக மாறும். சமயத்தில் இந்த சாண உருண்டை உருட்டும் வண்டை விடவும் மூன்று மடங்கு பெரிதாகக்கூட இருக்கும்.

இந்த சாண உருண்டையை தன் பின்னங்கால்களால் உதைத்துக் கொண்டு பின்னோக்கி நடந்தவாறே அரை கிலோ மீட்டர் தூரம் வரை கொண்டு செல்லும். எனினும் வழியில் எதிரிகள் குறுக்கீடு இருப்பது சகஜம்! அதுவும் இரண்டு மூன்று எதிரிகள் சேர்ந்து கொண்டு சாண உருண்டைக்கு சொந்தம் கொண்டாடிக் கொண்டு உருட்டிச் செல்ல முயலும். இதனால் இங்கே கடும் யுத்தம் நிகழும்.

அதே சமயத்தில் ஜெயிக்கின்ற வண்டிற்குத்தான் சாண உருண்டை என்று சொல்லி விடவும் முடியாது. சண்டை மும்முரத்தில் ஒரு நிமிடம் கவனம் பிசகினால் போதும், சாண உருண்டையை இன்னொரு புதிய வண்டு களவாடிக் கொண்டு ஓடிவிடும். சண்டை வண்டுகளுக்கு பெப்பே!

தோதான இடத்திற்கு வந்து சேர்ந்தவுடன், முன்னங் கால்களால் சுரங்கம் தோண்டத் துவங்கும். பல மணி நேரம் கடினமாய் உழைத்து 3 முதல் 4 அடி ஆழம் வரை சுரங்கத்தைத் தோண்டும். பிறகு அதற்குள் சாண உருண்டையைத் தள்ளி விட்டு, தானும் உள்ளே சென்று அதன்மீது முட்டையிட்டு விட்டு மேலே வந்து விடும். பிறகு அந்த இடத்தில் இந்தச் சுரங்கம் இருப்பதே தெரியாமல் மூடிவிட்டுப் போய் விடும். முட்டை பொரிந்து வெளிப்படும் லார்வா புழு, சுமார் ஒரு வருட காலத்திற்கு சாணத்தை உண்டு வாழும்.

லார்வா புழுக்களின் ஆயுட்காலம் பல தரப்பட்டது. சில இனங்களில் வருடக்கணக்கில் கூட இருப்பதுண்டு. இக்காலத்தில் இதன் உடலில் பல வளர்நிலை மாற்றங்கள் நிகழ்கின்றன. ஒரு வழியாய் உண்டு கொழுத்தபின் கூட்டுப்புழுவாக மாறி நீள்துயில் கொள்கிறது. இக்கூட்டிற்குள் நான்கு விதமான உருமாற்றங்கள் நிகழ்ந்து, அழகான இறக்கைகளுடன் கூடிய புதிய வண்டு உதயமாகிறது!

(தொடரும்)

டாக்டர் ஆர்.கோவிந்தராஜ்