சுவாரஸ்யமானது சுவர் தோட்டம்!



‘‘சுவர் தோட்டம், பசுமைச் சுவர், செங்குத்துத் தோட்டம் என பல்வேறு பெயர்களில் இன்றைய கான்கிரீட் காடுகளிடையே பசுமையை உண்டாக்க வந்துள்ளது புதிய வகை தோட்டக்கலை’’ என்கிற தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட், அதுபற்றி விரிவாக விளக்குகிறார்.

நகரங்களில் இடத்தின் மதிப்பு அதிகமாகிக்கொண்டே செல்வதால், வீட்டுத் தோட்டத்தின் பரப்பு குறைந்து, தாவரங்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தாவரங்களால் மட்டுமே மிகக் குறைந்த செலவில் வெயிலின் தாக்கத்தைக் குறைத்து, காற்றை சுத்தம் செய்ய இயலும். இதனால், இந்த வகை தோட்டம் பிரபலமடைந்து வருகிறது. இந்த செங்குத்துத் தோட்டத்தை ஏற்கனவே உள்ள சுவர்களிலோ, அதற்கென தனியாகச் சட்டங்கள் அமைத்தோ உருவாக்கலாம். உள்புறமோ, வெளிப்புறமோ அமைக்கலாம். பொதுவாக கண்ணாடி அமைப்புகள் கொண்ட அலுவலகங்கள், நட்சத்திர ஓட்டல்களின் முகப்பு அறைகளில் உள்புறமாக பசுமைச் சுவர்களை உருவாக்குகின்றனர்.

பகல் பொழுதில் சூரிய வெப்பத்தை கட்டிடங்கள் கிரகித்து சூரிய கதிர் வீச்சை ஏற்படுத்தும். இதனால் அந்தப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கும். இது போன்ற சுவர் தோட்டம் அமைக்கும் போது சூரிய வெப்பத்தை தாவரங்கள் தடுத்துவிடுவதால் கதிர் வீச்சு குறையும். கட்டிடங்களின் அருகில் வெப்ப அளவு குறையவும் வாய்ப்பு ஏற்படுகிறது. உயரமான பகுதிகளில் தண்ணீர் ஊற்றுவது சற்று கடினம். அதனால் சொட்டுநீர் பாசனம் செய்தால் எளிமையாக பராமரிக்கலாம். அடுக்குமாடி குடியிருப்புகளில் அமைக்கும்போது, மேல் தளங்களில் குடியிருப்போரின் சமையலறை கழிவுநீரை சுத்திகரித்து, எளிமையாக மறு உபயோகம் செய்யவும் ஒரு வாய்ப்பு. மேலைநாடுகளில் கட்டிடம் கட்டும்போதே சுவர் தோட்டத்துக்கான அமைப்புகளை ஏற்படுத்தி விடுகின்றனர்.

இதற்கு நல்ல வெளிச்சமுள்ள அல்லது சற்று நிழலான சுவர் பகுதி போதுமானது. புற ஊதா கதிர்களைத் தாங்கி நீண்ட நாட்கள் வரும் பாலிபுரோப்பிலீன் பிளாஸ்டிக்கிலான சுவரில் பொருத்தப்படும் பகுதி, தொட்டிகள், பைகள் போன்றவை கடைகளில் நிறையவே கிடைக்கின்றன. அவற்றை வாங்கி நமது தேவைக்கேற்ப வடிவமைத்து அலங்காரச் செடிகள் அல்லது சமையலுக்குத் தேவையான செடி வகைகளை வளர்க்கலாம். பொதுவாக அடுக்குமாடி அல்லது வணிக வளாகங்களின் முகப்புப் பகுதிகளில் அலங்காரச் செடிகளையும் குடியிருப்பு பகுதிகளின் அருகில் சமையலுக்குத் தேவையான செடி வகைகளையும் வளர்க்கலாம். காம்பவுண்ட் சுவரையும் இதற்கு பயன்படுத்தலாம். பாட்டில்கள், பழைய டயர்கள் போன்றவற்றையும் நமது பொருளாதாரத்துக்கேற்ப பயன்படுத்தலாம்.

நீரை அதிக நாட்கள் தக்க வைத்துக்கொள்ளும் எடை குறைந்த தென்னைநார் கழிவு, மண்புழு உரம் போன்றவற்றை வளர்ப்பதற்கு உபயோகிக்கும்போது செடிகள் சிறப்பாக வளரும். ஆஸ்பரகஸ், பெரணி வகைகள், வண்ணமிகு கெலேடியம் வகை தாவரங்கள், சில வண்ண புற்கள், தொங்கு தொட்டிகளில் வளர்க்கப்படும் அனைத்து மலர் செடிகள் மற்றும் புதினா, கொத்தமல்லி, ஓரிகானம் போன்ற நறுமண தாவரங்களையும் சுவர் தோட்டத்தில் வளர்க்கலாம். இன்றைய நகரங்களின் உடனடித் தேவை இந்த சுவர் தோட்டம்!

டெரேரியம் கலை வளர்க்கும் நிபுணர்

பல்வேறு செடிகளை கண்ணாடித் தொட்டிகள் அல்லது ஜாடிகளில் வளர்க்கும் ‘டெரேரியம்’ கலை பற்றி சென்ற இதழில் பார்த்தோம். தென்னிந்தியாவிலேயே முதன்முதலாக
டெரேரியம் முறையில் தாவரங்கள் வளர்த்து, அக்கலையை வளர்த்து வருகிறார் கோவையைச் சேர்ந்த நிபுணர் சம்யுக்தா காளிங்கராயர்.

மேலைநாடுகளில் கட்டிடம் கட்டும்போதே சுவர் தோட்டத்துக்கான அமைப்புகளை ஏற்படுத்தி விடுகின்றனர்!

இது இயற்கையை நோக்கிய இனிய பயணம்!


வீட்டுத் தோட்டம் - மாடித் தோட்டம் அமைப்பது பற்றிய ஒருநாள் சிறப்புப் பயிற்சி கருத்தரங்கம் ஜுலை 27, ஞாயிறு அன்று கோவையில் நடைபெறுகிறது. இயற்கை வழி (ஆர்கானிக்) வீட்டுத் தோட்டம் அமைத்தல், புதிய முறையில் மாடியில் மண்ணில்லா தோட்டம் அமைத்தல், வணிக நோக்கில் அலங்கார மலர்கள் மற்றும் செடிகள் வளர்த்தல், மண்புழு உரம் மற்றும் இயற்கை உரம் தயாரித்தல், பூச்சி மற்றும் பூஞ்ஞானக் கொல்லிகள், முத்தான மூலிகைச் செடிகளை வீட்டிலேயே வளர்த்தல், அற்பமாக எண்ணப்படும் சத்துமிகு தானியங்கள் மறு அறிமுகம் ஆகியவற்றை வின்சென்ட் மற்றும் துறைசார் வல்லுனர்கள் செயல்முறை விளக்கங்களோடு அளிக்கிறார்கள்.மேலும் விவரங்களுக்கு: 9442019007, 7598516303 www.maravalam.blogspot.in

(விதை போடுவோம்!)
தொகுப்பு: வர்ஷா