சிறப்பான சிறுதானிய பிஸ்கெட்!



சிறுதானியங்களின் மீதான மக்களின் அக்கறையும் ஆர்வமும் அதிசயிக்க வைக்கின்றன. நீரிழிவு, பருமனால் பாதிக்கப்பட்டோர் மட்டுமே சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டது போக, இன்று ஆரோக்கியமாக வாழ ஆசைப்படுகிற அத்தனை பேரின் மெனுவிலும் அவை இடம்பெறத் தொடங்கியிருக்கின்றன.

இட்லி, தோசை, உப்புமா, அடை உள்ளிட்ட அத்தனை உணவுகளையும் சிறுதானியங்களிலும் செய்ய முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும். சென்னையைச் சேர்ந்த அக்சீலியா அஷோக், சிறுதானியங்களில் சுவையான பிஸ்கெட் மற்றும் குக்கீஸ் செய்து அசத்துகிறார்!

‘‘பிளஸ் டூ படிச்சிருக்கேன். பியூட்டிஷியன் கோர்ஸ், டெய்லரிங்னு பொழுதுபோக்கா கத்துக்கிட்ட பல விஷயங்கள்ல பேக்கரியும் ஒண்ணு. ஆரம்ப காலத்துல எல்லாரும் செய்யற மாதிரி மைதா உபயோகிச்சுதான் பிஸ்கெட் பண்ணிட்டிருந்தேன். சிறுதானிய உணவுகள் பத்தின ஒரு பயிற்சி வகுப்புக்குப் போனதுலேருந்து, அதைப் பத்தின விழிப்புணர்வு அதிகமாச்சு. ‘சாதாரணமா நாம சாப்பிடற எல்லா உணவுகளையும் சிறுதானியங்கள்லயும் பண்ண முடியும்’னு அந்தப் பயிற்சியில சொன்னாங்க. அதை வச்சு நானே, சிறுதானியங்கள்ல பிஸ்கெட் வருமானு முயற்சி பண்ணிப் பார்த்தேன்.

 வழக்கமான பிஸ்கெட்டுகளைவிட பிரமாதமா வந்தது. சாம்பிள் கொடுத்துப் பார்த்ததுல அக்கம்பக்கத்து வீட்டாருக்குப் பிடிச்சுப் போய், உடனடியா ஆர்டர் கொடுத்தாங்க. இப்ப சாதாரண பிஸ்கெட் வகைகளைவிட, சிறுதானிய பிஸ்கெட் செய்யறதுலதான் நான் பிஸி’’ என்கிற அக்சீலியா, கேழ்வரகு, திணை, கம்பு, கோதுமை, பலதானியக் கலவை என 5 வகைகளில் பிஸ்கெட் செய்கிறார். இனிப்பும் கொழுப்பும் கம்மியான இந்த பிஸ்கெட்டுகளை வயதானவர்கள், நோயாளிகள், டயட் செய்கிறவர்களும் தைரியமாக சாப்பிடலாம்.

‘‘கம்பு, கேழ்வரகு, திணை, கோதுமை, ஆர்கானிக் சர்க்கரை, வெண்ணெய், உப்புனு எல்லாமே தரமானதா பார்த்து வாங்கணும். டயட் பிஸ்கெட்டுங்கிறதால, அதிக வெண்ணெயோ, இனிப்போ சேர்க்கறதைத் தவிர்க்கறது நல்லது. ஓடிஜி அல்லது மைக்ரோவேவ் அவன் அவசியம். மற்ற பொருட்களுக்கு 500 ரூபாய் முதலீடு போதும். இதர பிஸ்கெட் வகைகளைப் போல இதை மொத்தமா செய்து வச்சுக்கிட்டு, விற்க முயற்சி பண்ணக் கூடாது. ஆர்டர் எடுத்துட்டு, அதுக்கேத்தபடி ஃப்ரெஷ்ஷா பண்ணிக் கொடுக்கலாம். சூப்பர் மார்க்கெட், பேக்கரிகளுக்கும் சப்ளை பண்ணலாம். 50 சதவிகித லாபம் பார்க்கலாம்’’ என்கிற அக்சீலியாவிடம் 5 வகையான சிறுதானிய பிஸ்கெட்டுகளை ஒரே நாள் பயிற்சியில் கற்றுக் கொள்ள கட்டணம் 750 ரூபாய். 98431 80300
‘‘இனிப்பும் கொழுப்பும் கம்மியான இந்த பிஸ்கெட்டுகளை வயதானவர்கள், நோயாளிகள், டயட் செய்கிறவர்களும் தைரியமாக சாப்பிடலாம்!’’

புதுமையான பேப்பர் நகைகள்!

பொற்செல்வியின் நகை கலெக்ஷனில் தோடு, ஜிமிக்கி, வளையல், செயின், பிரேஸ்லெட், மோதிரம், கொலுசு என எல்லாம் இருக்கின்றன. பார்ப்பதற்கு ஆடம்பரமாகக் காட்சியளிக்கிற
அவற்றைக் கையில் எடுத்துப் பார்த்தால், கனமின்றி இருக்கின்றன. ‘‘அத்தனையும் பேப்பர் ஜுவல்லரி’’ என அசத்தல் பதில் தருகிறார் பொற்செல்வி. நம்ப முடியவில்லை. அத்தனை நேர்த்தி... அத்தனை கலர்ஃபுல்!

‘‘எம்.பி.ஏ. படிச்சிருக்கேன். குடும்பச் சூழல் காரணமா வேலைக்குப் போக முடியலை. எம்பிராய்டரி, ஃபேஷன் ஜுவல்லரினு நிறைய கத்துக்கிட்டேன். அதுல பேப்பர் ஜுவல்லரியும் ஒண்ணு. அதிக முதலீடு தேவைப்படாத தொழிலா இருந்ததால அதையே இப்ப முழுநேர பிசினஸா பண்ணிட்டிருக்கேன்’’ என்கிற பொற்செல்வி, கற்பனையும் கலர்களோடு விளையாடும் திறனும் இருப்பவர்களுக்கு இந்தத் துறையில் பெரிய லாபம் காத்திருப்பதைக் குறிப்பிடுகிறார்.‘‘தங்கம், வெள்ளியை விரும்பாத காலேஜ் பொண்ணுங்களுக்கும் சரி, சிம்பிளான ஜுவல்ஸ் போட நினைக்கிற வேலைக்குப் போறவங்களுக்கும் சரி, பேப்பர் ஜுவல்லரிதான் சரியான சாய்ஸ். செய்யறதும் சுலபம். ஒவ்வொரு டிரெஸ்ஸுக்கும் மேட்ச்சா நாலஞ்சு செட் வச்சுக்கலாம்.

 25 முதல் 30 ஷேப்ஸ் பண்ணலாம். ‘பேப்பர் நகையா? வியர்வையோ, தண்ணியோ பட்டா பாழாயிடாதா‘ங்கிற சந்தேகம் வர்றது சகஜம். அப்படி நடக்காம இருக்க நகைகள் மேல வார்னிஷ் கொடுக்கலாம். தோடு, ஜிமிக்கி, பிரேஸ்லெட், வளையல், பென்டென்ட் வச்ச செயின், மோதிரம், கொலுசுனு சாதாரண ஜுவல்லரியில கிடைக்கிற எல்லாத்தையும் பேப்பர்ல பண்ண முடியும். பார்க்கிறதுக்கு பேப்பர் நகைகள் மாதிரியே தெரியாது’’ என்கிறவர், 500 ரூபாய் முதலீட்டில் பேப்பர் ஜுவல்லரி பிசினஸில் இறங்கலாம் என நம்பிக்கை தருகிறார்.

‘‘குவில்லிங் ஸ்ட்ரிப்புகள் (வேற வேற அளவுகளில்), குவில்லிங் செட், பசை, தோடுக்கான கொக்கி, செயினுக்கான கயிறு மற்றும் ஸ்பிரிங், பிளெயின் வளையல், கொலுசுக்கான ஹூக், மோதிரத்துக்கான பேஸ், டிசைன்களுக்காக குவில்லிங் புத்தகம்னு எல்லாத்துக்கும் சேர்த்து 500 ரூபாய் முதலீடு போதும். குவில்லிங் பேப்பர் ஸ்ட்ரிப்பா கிடைக்கும். ஒரு செட்ல 100 ஸ்ட்ரிப்ஸ் இருக்கும். அதுல 5 முதல் 9 செட் பேப்பர் ஜுவல்ஸ் பண்ணலாம். ஒரு நாளைக்கு 3 செட் நகைகளை முழுமையா முடிக்கலாம். அளவு, டிசைனை பொறுத்து இந்த நகைகளை 20 ரூபாய்லேருந்து 300 ரூபாய் வரைக்கும் விற்கலாம். 50 சதவிகிதம் லாபம் நிச்சயம்’’ என்கிற பொற்செல்வியிடம், ஒரே நாள் பயிற்சியில் பேப்பர் ஜுவல்லரி கற்றுக் கொள்ள தேவையான மெட்டீரியல்களுடன் சேர்த்துக்
கட்டணம் 1,500 ரூபாய்.
91763 29517

‘‘தோடு, ஜிமிக்கி, பிரேஸ்லெட், வளையல், பென்டென்ட் வச்ச செயின், மோதிரம், கொலுசுனு சாதாரண ஜுவல்லரியில கிடைக்கிற எல்லாத்தையும் பேப்பர்ல பண்ண முடியும்!’’

கலக்கலான காய்கறி ஐ¨ஸ்!

பழங்களில் ஜூஸ் தயாரிப்பதைப் போலவே காய்கறிகளிலும் தயாரிக்கலாம் என்கிற விவரம் பலருக்கும் தெரியாது. கேரட், நெல்லிக்காய் போன்ற ஒரு சிலதில் மட்டுமே ஜூஸ் தயாரிக்கலாம் என நினைத்துக் கொண்டிருக்கிற அவர்களுக்கு பலவிதமான காய்களில் பலவிதமான ஜூஸ் தயாரிக்க முடியும் எனப் புதிய தகவல் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீஜெகதா!

‘‘நான் குழந்தையா இருந்தப்ப, வீட்ல யாருக்காவது வயிற்றுவலி, தலைசுற்றல், வாந்தி, மயக்கம்னா எங்கம்மா, பாட்டியெல்லாம் உடனடியா காய்கறி ஜூஸ் பண்ணித் தருவாங்க. உதாரணத்துக்கு தலைசுற்றல், வாந்திக்கு இஞ்சியும் எலுமிச்சையும் சேர்த்த ஜூஸ், வெயிலுக்கு வெள்ளரிக்காய் ஜூஸ்னு எல்லா காய்கள்லயும் ஜூஸ் பண்ணித் தருவாங்க. அப்படித்தான் எனக்கும் ஆர்வம் அதிகமாச்சு. வளர்ந்த பிறகும் என்னோட அந்த ஆர்வம் தொடர்ந்தது. நிறைய சமையல் போட்டிகள்ல கலந்துக்கிட்டு, அங்கல்லாம் காய்கறி ஜூஸ் டெமோ பண்ணிக் காட்டுவேன். முதல்ல காய்கறியில ஜூஸானு தயக்கத்தோட பார்க்கிறவங்க, அதைக் குடிச்சுப் பார்த்ததும் ஆர்வமாகிடுவாங்க. காய்கறியோட பச்சை வாசனையோ, கசப்புத் தன்மையோ இல்லாம சுவையா தயாரிக்க முடியும்ங்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டு உற்சாகமாயிடுவாங்க...’’ என்கிற ஸ்ரீஜெகதா, காய்கறிகளில் ஜூஸ் தயாரிப்பதில் பல வருடங்களாக பயிற்சியும் அளிக்கிறார்.

‘‘மாங்காய், முள்ளங்கி, முட்டைக்கோஸ், புதினா, பூசணிக்காய்னு நாம தினமும் சமையலுக்குப் பயன்படுத்தற காய்கறிகளுக்கான செலவு மட்டும்தான் மூலதனம். வசதி இருக்கிறவங்க ஜூஸர் உபயோகிக்கலாம். இல்லாதவங்க மிக்ஸியை வச்சே செய்யலாம். 200 ரூபாய் முதலீடு போதும். 50 சதவிகித லாபம் உறுதி. எடை குறைப்புக்கு பூசணிக்காய், வாழைத் தண்டு, குளிர்ச்சிக்கு வெள்ளரிக்காய், நோய் எதிர்ப்பு சக்திக்கு தக்காளி, நெல்லிக்காய், யூரினரி இன்ஃபெக்ஷனுக்கு வாழைத் தண்டு, முள்ளங்கி, கால்சியம் பற்றாக்குறைக்கு முட்டைக்கோஸ்,

பாஸ்பரஸ் குறைபாட்டுக்கு மாங்காய்னு யாருக்கு என்ன தேவையோ, அதுக்கேத்தபடி தயாரிச்சுக் கொடுக்கலாம். எந்தப் பிரச்னைக்கு என்ன ஜூஸ் கொடுக்கணுங்கிற அடிப்படை அறிவு அவசியம். பிறகு அதை சுவையா செய்யக் கத்துக்கணும். வீட்ல மொத்தமா செய்து கொடுத்து, பார்க், கடற்கரை ஓரங்கள்ல வாக்கிங் போறவங்கக்கிட்ட விற்க ஏற்பாடு செய்யலாம்’’ என்கிறவரிடம் ஒரே நாள் பயிற்சியில் 5 வகையான காய்கறி ஜூஸ் தயாரிப்பை 500 ரூபாய் கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம். 98841 14285

- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்