பொன்னியின் செல்விகள்!



திரையுலகிலும் கலையுலகிலும் உச்சம் தொட்ட பெரும் ஜாம்பவான்களே தொட்டு கலையாக்கத் தயங்கிய பெரும் படைப்பு ‘பொன்னியின் செல்வன்’. சோழ வளநாட்டின் அகப்புறங்களை மெல்லிய புனைவினூடாக உயிர்ப்போடு காட்சிப்படுத்தும் கல்கியின் அந்தக் காவியத்தை திரைப்படமாக்கும் முயற்சி அன்று தொடங்கி இன்று வரைக்கும் நடந்து கொண்டே இருக்கிறது.

அந்தப் படைப்பின் பிரமாண்டத்தை திரையில் கொண்டு வரும் பெருநுட்பத்துக்கு அஞ்சியே பல படைப்பாளிகள் தள்ளி நின்று கொள்கிறார்கள். ஆனால், ‘மேஜிக் லேன்டர்ன்’ தியேட்டர் குழுவினர் தைரியமாக மூன்றரை மணிநேர நாடகமாக்கி, அக்காவியத்தை மேடைக்கு கொண்டு வந்து வியக்கவும் சிலிர்க்கவும் வைத்திருக்கிறார்கள். எஸ்.எஸ். இன்டர்நேஷனல் லைவ் நிறுவனம் இந்நாடகத்தை தயாரித்திருந்தது.

படைப்பாளிகள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கிய ‘பொன்னியின் செல்வன்’ நாடகம் சமீபத்தில் சென்னை, மதுரை, கோவை மாநகரங்களில் அரங்கேறியது. சோழநாடு குறித்த கண்காட்சி, பொன்னியின் செல்வன் குறித்த செய்திகள், சுவரொட்டிகள், சிற்பங்கள் என பார்வையாளர்களை சோழர் காலத்தின் வாசலுக்கே இட்டுச்சென்ற அரங்கச்சூழலும் கலைஞர்களின் கணீர் தமிழும், ரசனை ததும்பும் காட்சி அமைப்புகளும், ஒன்றிப்போன உடல்மொழியும் புதிய அனுபவத்தை ஏற்படுத்தின.

 குறிப்பாக குந்தவை, நந்தினி, வானதி, பூங்குழலி, செம்பியன்மாதேவி... இதுவரை நாடக மேடைகளில் பார்த்துப் பழகாத முகங்கள்! குந்தவையும் வானதியும் இயல்பாகப் பேசும்போது தமிழ் தள்ளாடுகிறது. ஆனால், அரிதாரம் இட்டு அறங்கேறி நின்றால் சங்கத்தமிழ் சரசமாடுகிறது. 6 மாத கால கடும் பயிற்சி. நடிப்புக்கு மட்டுமின்றி ஆளுமைக்கு, தொடர்புத்திறனுக்கு, தற்காப்புக்கு, உடல்மொழிக்கு, உச்சரிப்புக்கு என ஒட்டுமொத்தமாக முகத்தையே மாற்றியிருக்கிறது மேஜிக் லேன்டர்ன் தியேட்டர்.

குந்தவை


 - ப்ரீத்தி குந்தவையாக உருமாறி நின்ற ப்ரீத்தி ஆத்ரேயாவுக்கு பூர்வீகம் சென்னையே. ஸ்டெல்லா மேரீஸில் படித்தது ஆங்கில இலக்கியம். அப்பா உர விற்பனையாளர். அம்மா இல்லத்தரசி. சகோதரர் மும்பையில் வங்கிப் பணியாற்றுகிறார். லண்டனில் நடனத்தில் மாஸ்டர் டிகிரியும் முடித்திருக்கிற ப்ரீத்தியிடம், பொன்னியின் செல்வன் வாய்ப்பு பற்றிக் கேட்டால் சிலிர்ப்போடு பேசுகிறார். ‘‘சின்ன வயசுல இருந்தே நாட்டியத்துல ஈடுபாடு. கலாஷேத்ரா நிறுவனர் ருக்மணிதேவி அருண்டேலோட சிஷ்யர்களான சாந்தா - தனஞ்செயன்கிட்டதான் கத்துக்கிட்டேன்.

 ஒரு அரங்கத்தை வழி நடத்துற அளவுக்கு சகலமும் கலந்த வித்தியாசமான பயிற்சி அது. காஸ்ட்யூம், மேக்கப்ல இருந்து அரங்க டெக்கரேஷன் வரைக்கும் எல்லாத்தையும் அறிஞ்சுக்கிற வாய்ப்பு கிடைச்சுச்சு. மேலும் மேலும் கத்துக்கணும், இன்னும் புரொஃபஷனலிசம் வேணும்னு தோணுச்சு. லண்டன் போய் டான்ஸ்லயே ஹையர் ஸ்டடி பண்ணினேன். வழக்கம் போல வெறும் நடனம் மட்டுமே இல்லாம, நவீனமா பல யுக்திகளை மிக்ஸ் செய்து நிறைய ஸ்டேஜ் பண்ணியிருக்கேன். காஸ்ட்யூம், மேக்கப், ஸ்டேஜ் அரேஞ்ச்மென்ட்னு நண்பர்களுக்கு உதவி செய்றதும் உண்டு.

மேஜிக்லேன்டர்ன் கூட ரொம்ப வருஷமாவே எனக்கு நட்பு உண்டு. ஏழெட்டு வருஷம் முன்னாடி ‘பட்டம்’னு ஒரு நாடகம் பண்ணினாங்க. மூன்றாம் ரிச்சர்ட்டோட டிராமா. அதுக்கு காஸ்ட்யூம் பண்ணிக் கொடுத்தேன். 6 மாதம் முன்னாடி ‘பொன்னியின் செல்வன்’ பண்றோம்... வாங்கன்னு கூப்பிட்டாங்க. ‘பொன்னியின் செல்வ’னை நான் படிச்சதில்லை. பாட்டி, அம்மாவெல்லாம் படிச்சுட்டு கதை சொல்லுவாங்க.

அந்த அளவுக்குதான் அந்தக் காவியத்துல புரிதல் இருந்துச்சு. அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க... ஒர்க்ஷாப்புக்கு வாங்கன்னு கூப்பிட்டாங்க. 6 மாதப் பயிற்சி. ‘யாருக்கு என்ன கேரக்டர்’னு கடைசி நாள்தான் முடிவு பண்ணினாங்க. அதுவரைக்கும் எல்லோரும் எல்லா கேரக்டரும் பண்ணிப் பாத்தோம். அநேகமா என்னை நந்தினி கேரக்டர் பண்ணச் சொல்லுவாங்கன்னு எதிர்பார்த்தேன். கடைசி நாளன்னிக்கு, ‘நீங்கதான் குந்தவை பண்றீங்க’ன்னு சொன்னாங்க. நம்பவே முடியலே!

பொன்னியின் செல்வன் மாதிரி ஒரு டிராமாவில மரமாவோ, கொடியாவோ, செடியாவோ நின்னாக்கூட பெருமைதான். பிரதான கேரக்டரா நடிக்க வாய்ப்பு கிடைத்தது உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

குந்தவை என் இயல்புக்கு நேர் எதிர் கேரக்டர். ரொம்ப அமைதியாவும் நிதானமாவும் பெருந்தன்மையோடயும் இருக்கிறவ. ஒரு காரியத்தைச் செய்றதுக்கு முன்னாடி ஆயிரம் முறை யோசிக்கிறவ. எனக்கு டக்கு டக்குன்னு கோபம் வரும். பளீர்னு முடிவெடுத்திருவேன். இப்போ குந்தவை என்னோட இயல்பையே மாத்திட்டா. ‘எப்படி இவ்வளவு அமைதியானே’ன்னு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ஆச்சரியமா கேட்குறாங்க... என்று வெட்கப்படும் ப்ரீத்தி, குந்தவையான பிறகு அவளைப் பற்றி நிறைய ஆராய்ச்சியும் செய்திருக்கிறார்.

‘‘‘பொன்னியின் செல்வன்’ நூலைத் தாண்டியும் குந்தவை பத்தி நிறைய தகவல்களைத் திரட்டினேன். புனைவை விட வரலாறு அவளோட இயல்பை தெளிவா பேசும். அதன் மூலமா அவளோட நிர்வாகத் திறனையும் ஆளுமையையும் புரிஞ்சுக்கிட்டேன். குந்தவை வன்முறைக்கு எதிரானவ. சுதந்திரமானவ. புத்தர்களுக்கும் சமணர்களுக்கும் நிறைய உதவிகள் செஞ்சிருக்கா. ராஜராஜனோட தந்தையின் பெயர்ல ‘சுந்தரச் சோழ விண்ணகம்’னு ஒரு மருத்துவமனையை உருவாக்கி மக்களுக்கு சேவை செஞ்சிருக்கா.

சோழர் காலத்துல கட்டப்பட்டு இன்னைக்கு வரைக்கும் பிரமாண்டம் குலையாம நிற்கிற பல கோயில்களுக்கான கட்டுமானத்துக்கு உதவிகள் செஞ்சிருக்கா. சோழர் வரலாற்றில் முக்கியமான பெண். அதையெல்லாம் மனசுல உள்வாங்கிக்கிட்டுதான் மேடைக்குப் போனேன்.

 போன தலைமுறை வரை, ‘பொன்னியின் செல்வன்’ படிக்காம யாரும் வளர்ந்திருக்கவே வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு மக்களோட கலந்த ஒரு காவியத்தை நாடகமாக்கி நடிக்கிறது ரொம்பவே சவாலான வேலை. அதுவும் நாடகத்துக்கு வரும்போதுகூட, ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தோட வர்றாங்க. ஒரே ஒரு டயலாக் தப்பாப் பேசினாலும் அவங்ககிட்ட இருந்து ரிப்ளை வந்திடும்ன்னு பயம்... இதுவரைக்கும் கிடைக்காத வித்தியாசமான எக்ஸ்பீரியன்ஸ் இது... என்று சிலாகிக்கிறார் ப்ரீத்தி.

நந்தினி - மீரா

 ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் சிக்கலான உளவியல் பாத்திரம் நந்தினி. ஆதிகாலம் முதல் சமகாலம் வரையிலும் பெண்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்களை நாவல் முழுதும் சுமந்து திரிகிறவள். வீரபாண்டியனுக்கும் மந்தாகினிக்கும் மகளாகப் பிறந்த நந்தினி பெரிய பழுவேட்டரையரின் மனைவி.

பழுவூரின் இளைய ராணி. பொன்னியின் செல்வனை சுமக்கும் பிரதான பாத்திரங்களில் ஒருத்தி.  நாடகத்தில் நந்தினியாக வாழ்ந்தவர் மீரா கிருஷ்ணமூர்த்தி. பிரபல பரதநாட்டிய கலைஞர். இவரும் ஆங்கில இலக்கியம் படித்தவர்தான். சந்திரலேகா நாட்டியக் குழுவில் அங்கம் வகிப்பவர். சமஸ்கிருத நாடகங்களில் நடித்த அனுபவம் உண்டு. பிரஸன்னா ராமஸ்வாமி குழுவிலும் நடித்திருக்கிறார்.

“தியேட்டர்ல எனக்கு நிறைய அனுபவம் உண்டு. ஆனா, ‘பொன்னி யின் செல்வன்’ வித்தியாசமான அனுபவம். இதுல கிடைச்ச வாய்ப்பு எதிர்பாராதது. ‘தியேட்டர் எக்சர்சைஸ்’னு ஒரு புது கான்செப்டை இங்கே கத்துக்க முடிஞ்சது ஒரு வாய்ப்பு. ஒரு கதாபாத்திரம் வெற்று வசனங்களை மட்டுமே மேடையிலேறி வாசிச்சுட்டு இறங்கிட முடியாது. பாத்திரத்துக்கும் கலைஞனோட வாழ்க்கைக்கும் எங்காவது தொடர்பு இருக்கும். அதை அனுபவிச்சு உணரணும். அப்பத்தான் பாத்திரத்தோட ஒன்ற முடியும். கலைஞனோட சின்னச்சின்ன அசைவுகள் கூட மேடையில கவனிக்கப்படும். அதனால நடிப்புல சிரத்தையும் அர்ப்பணிப்பும் இருக்கணும்... நிறைய விஷயங்களை நந்தினியும் பொன்னியின் செல்வனும் எனக்குக் கத்துக்கொடுத்திருக்காங்க...Ó என்கிறார் மீரா.

வானதி - வர்ஷா


‘பொன்னியின் செல்வன்’ காவியத்தின் மற்றுமொரு நாயகி வானதி. கொடும்பாளூர் இளவரசி. குந்தவையின் தோழி. வானதியாக பாத்திரமேற்ற வர்ஷா ஹைதராபாத் கூகுள் நிறுவனத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றியவர். விளையாட்டாக ஆடிஷனுக்கு வந்தவருக்கு வானதி வாய்ப்பு வாய்த்தது. முதல் மேடையே முத்தாய்ப்பான மேடையாகி விட்டது!  “சென்னைதான் பூர்வீகம். அப்பா ஸ்டாக் புரோக்கர். அம்மா ஆசிரியை. அக்கா யு.எஸ்.ல இருக்கா. ஸ்டெல்லா மேரீஸ்ல பி.காம் முடிச்சேன். கூகுள்ல வேலை கிடைச்சுச்சு.

5 வருஷம் வேலை செஞ்சுட்டு சென்னைக்கு வந்து ஒரு பப்ளிஷிங் கம்பெனியில சேர்ந்தேன். ‘பொன்னியின் செல்வன்’ நாவலை நாடகமாக்கின குமாரவேல் சாரோட உறவுக்காரப் பெண் தீபா எனக்கு ஃபிரெண்ட். அவங்க சொல்லித்தான் ‘பொன்னியின் செல்வனு’க்கு ஆடிஷன் நடக்கிறது தெரியும். அதுக்கு முன்னாடி எனக்கு ஸ்டேஜ் எக்ஸ்பீரியன்ஸே இல்லை. இருந்தாலும் சும்மா போய் ஆடிஷன்ல நிக்கலாமேன்னு போனேன். அம்மா ‘பொன்னியின் செல்வன்’ பத்தி வீட்டில நிறைய பேசுவாங்க. அதில் உள்ள பாத்திரங்களைப் பத்தியெல்லாம் அவங்க சொல்றதைக் கேக்க வியப்பா இருக்கும். கேட்பேனே ஒழிய, நான் அந்த நாவலைப் படிச்சதில்லை. தமிழும் எனக்கு சரளமா வராது. கொஞ்சம் தடுமாறுவேன்.

ஆடிஷன்ல ஒரு வசனத்தைக் கொடுத்து பேசி நடிச்சுக் காட்ட சொன்னாங்க. நடிச்சுக் காமிச்சேன். தமிழ் கொஞ்சம் தடுமாறுச்சு... ‘இது போதும்... பாடி லாங்க்வேஜ் நல்லாயிருக்கு... நாங்க பாத்துக்குறோம்’னு சொல்லி சேத்துக்கிட்டாங்க. ஜனவரியில இருந்து ஒர்க்ஷாப். பிரவீண் சார், பசுபதி சார், குமாரவேலு சார்னு பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் பயிற்சி கொடுத்தாங்க. உச்சரிப்புக்கு அவங்க கொடுத்த பயிற்சி என் இயல்பையே மாத்திடுச்சு. டிராமா முடிஞ்ச பிறகும் வானதியோட பாதிப்புல இருந்து விடுபட முடியலே... என்று பெருமிதப்
படுகிறார் வர்ஷா.

பூங்குழலி - காயத்ரி

பூங்குழலியாக நடித்த காயத்ரிக்கு பல முகங்கள். யோகா, களரி என கலக்குகிறார். ‘யோக தீபம்’ என்ற பெயரில் பயிற்சி மையமும் நடத்துகிறார். எம்.ஓ.பி.யில் எம்.பி.ஏ. படித்தவர். கூடவே, எம்.எஸ்சி. வைல்ட் லைப்ஃ படிப்பையும் முடித்திருக்கிறார்!“சின்ன வயசுல இருந்தே வைல்ட் லைஃப்ல ஆர்வம் உண்டு. நிறைய தெரிஞ்சுக்குவேன். ஆராய்ச்சி பண்ணுவேன். எம்.பி.ஏ. முடிச்சப்போ, வைல்ட் லைஃப்னு ஒரு படிப்பு இருக்கிறது தெரிஞ்சது. ஜாயின் பண்ணிட்டேன்.

ஆனா, படிப்புக்குத் தொடர்பில்லாத துறைக்கு வந்தாச்சு. விளையாட்டா கத்துக்கிட்ட களரி, ஆத்ம திருப்திக்காக கத்துக்கிட்ட யோகா ரெண்டுமே முதன்மையாகிடுச்சு. நடனம் மேலயும் ஈர்ப்பு. அடுத்த கட்டம் டிராமா. எல்லாமே இயல்பான பயணம்தான். எதுவும் திட்டமிட்டு நடக்கலே. தியேட்டர் ஆர்ட்டிஸ்டுக்கு களரி கூடுதல் தகுதி.

களரி, யோகா எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி கான்டெம்ப்ரரி டான்ஸ் பண்ணுவேன். அதுதான் என்னோட அடையாளம். மேஜிக்லேன்டர்ன் கூட சேர்ந்து நிறைய டிராமா பண்ணியிருக்கேன். ‘மூன் ஷைன் அண்ட் ஸ்கை டஃபி’ன்னு ராஷ்யப் கிருஷ்ணனோட ஒரு டிராமா செஞ்சோம். ‘பரமபதம்’னு ஒரு டிராமாவுல நான் திரௌபதியா பண்ணினேன். ‘பொன்னியின் செல்வ’னை முழுசா படிச்சதில்லை.

 ஒர்க்ஷாப்புல பூங்குழலியோட இயல்பை வடிவமைச்சாங்க. கொஞ்சம் நானும் படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன். ஃப்ரெஷாவே இருக்கட்டும்... நாவலைப் படிச்சு வேறு மாதிரி முயற்சி செய்ய வேண்டாம்Õனு சொல்லிட்டாங்க. ‘பூங்குழலி இயற்கையானவ. எல்லார் மேலயும் அன்பும் கருணையும் கொண்டவ. அவள் ஒரு படகோட்டி...’

- இதுதான் பூங்குழலி பத்தி என்னோட புரிதல். பேசுற முறை, உச்சரிப்பு, பார்வை, நடை, பாவனைன்னு நிறைய ஒர்க் பண்ணியிருக்கோம். ஒர்க்ஷாப் வர்றதுக்கு முன்னாடி என்னால இயல்பா தமிழ் பேச முடியாது. இப்போ எனக்கே ஆச்சரியமா இருக்கு. அவ்வளவு நல்லாப் பேசுறேன். ஒர்க்ஷாப்புல மனோபாவத்தையே மாத்திட்டாங்க. மூன்றரை மணி நேர டிராமாவுக்கு 200 நாளுக்கும் மேல ஒர்க் பண்ணியிருக்கோம். சின்னச் சின்ன அசைவுகளைக்கூட நேர்த்தியா செதுக்கியிருக்காங்க. இது ஒரு முக்கியமான அனுபவம்... என்கிறார் காயத்ரி.

செம்பியன் மாதேவி - உமா


‘பொன்னியின் செல்வ’னின் புனிதப் பாத்திரங்களில் ஒன்று செம்பியன் மாதேவி. சோழ மன்னன் கண்டராதித்தனின் பட்டத்து ராணி. சிவனின் மீது பெரும் பக்தி கொண்டவள்.நாடகத்தில் அப்பாத்திரமேற்ற உமா பி.எஸ்.என்.எல்.லில் பணியாற்றுகிறார். பூர்வீகம் கேரளா. “சின்ன வயசுலயே பாட்டு, பேச்சு, நடனம்னு கலை ஈடுபாடு. கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணிக்கிட்டேன். வேலைக்கு வந்த பிறகு கோடை நாடக விழாவில நடிக்க வாய்ப்பு வந்துச்சு. ஃபர்ஸ்ட் டிராமாவிலேயே பெஸ்ட் ஆக்டர் அவார்டு கிடைச்சுச்சு.

அதுக்குப்பிறகு அகஸ்ட்ரோ குரூப்போட சேர்ந்து நிறைய சோஷியல் பிளே பண்ணியிருக்கேன். தஞ்சாவூர் தமிழ்ப் பண்பாட்டுக் கலைவிழாவுல நடனமாட வாய்ப்பு வந்துச்சு. அதன் மூலமா நர்த்தகி நட்ராஜ் நாட்டியக்குழுவுல சேர்ற வாய்ப்பு. அப்புறம் சீரியல்ல நடிக்கிற வாய்ப்புகள் வந்துச்சு. அடுத்த கட்டம், ‘பொன்னியின் செல்வன்’. இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத பயிற்சியும் அனுபவமும் இங்கே கிடைச்சுச்சு. ஒரு கலைஞனுக்கு பிஸிக்கல் ஃபிட்னஸ் ரொம்பவே முக்கியம்.

இதை நான் இங்கே வந்துதான் உணர்ந்தேன். மூன்றரை மணி நேர பிளே. முதல் சீன்ல எப்படி இருந்தோமோ, அதே மாதிரி பிரிஸ்க்காவே கடைசி சீன்லயும் இருக்கணும். இதுவரைக்கும் நான் பண்ணின டிராமா வேற. இங்கே திரைச்சீலை இல்லை. ஸ்லோவா மூவ் பண்ண முடியாது. ஒவ்வொரு நொடியும் அலர்ட்டா இருக்கணும். ஒரு காவல்காரர் கத்தியை சாய்ச்சுப் பிடிச்சுட்டாக் கூட ஒட்டுமொத்த திட்டமிடலும் கெட்டுப்போகும். பிரமாண்டமான வேலை. ‘ஸ்டேஜ்ல மைக்கே தரமாட்டேன்.

ஒரிஜினல் வாய்ஸ்லதான் பேசணும்’னு சொல்லிட்டார் டைரக்டர். அதுக்காக எல்லாருமே தனியா பயிற்சி எடுத்தோம். அதனால இயல்பான வாய்ஸ் கல்ச்சரே மாறியிருக்கு. உண்மையிலேயே இப்போதான் நான் தியேட்டர் ஆர்ட்டிஸ்டா முழுமையடைஞ்சிருக்கேன்...என்று நெகிழ்ச்சியாகச் சொல்கிறார் உமா.

 குந்தவையையும் நந்தினியையும் வானதியையும் பூங்குழலியையும் செம்பியன் மாதேவியையும் இப்போது தரிசிக்கும் வாய்ப்பை இழந்தவர்கள் அடுத்த வாய்ப்புக்காகக் காத்திருந்து, கொண்டாடுங்கள்! ஆதிகாலம் முதல் சமகாலம் வரையிலும் பெண்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்களை நாவல் முழுதும் சுமந்து திரிகிறவள் நந்தினி குந்தவை வன்முறைக்கு எதிரானவ. சுதந்திரமானவ. புத்தர்களுக்கும் சமணர்களுக்கும் நிறைய உதவிகள் செஞ்சிருக்கா

 வெ.நீலகண்டன்
படங்கள்: பரணி