படிமங்களை ஆராய்ந்த பாவை!



மேரி அன்னிங்

ஒரு காலத்தில் பூமியில் அதிக வல்லமை பொருந்திய உயிரினமாக வலம் வந்துகொண்டிருந்த டைனோசர்கள் சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இயற்கைப் பேரழிவில் அழிந்து விட்டன. மனிதன் தோன்றுவதற்கு முன்பே வாழ்ந்து, மறைந்த இந்த டைனோசர் பற்றி, இன்று எப்படி நாம் அறிய முடிந்திருக்கிறது?

அதற்குக் காரணம் ‘ஃபாசில்’ என்று அழைக்கப்படும் புதைபடிமங்கள்தான்! இந்தப் புதைபடிமங்களைச் சேகரித்து, நமக்கு அளித்தவர்களில் மிக முக்கிய மானவர் தொல்பொருள் ஆய்வாளரான மேரி அன்னிங். இவருடைய செயல்களால்தான் பூமியின் பண்டைய வரலாறு பற்றி நமக்குத் தெரிய வந்திருக்கிறது!

1799... இங்கிலாந்தில் உள்ள டோர்செட் கடற்கரை நகரில் மே 21 அன்று பிறந்தார் மேரி அன்னிங். அவர் பெற்றோருக்குப் பிறந்த பத்து குழந்தைகளில் மேரியும் ஜோசப்புமே உயிரோடு இருந்தனர். அம்மா மேரி மூர். அப்பா ரிச்சர்டுக்கு மரப்பொருட்கள் தயாரிக்கும் வேலை. குறைவான வருமானம் என்பதால், பகுதி நேரமாக புதைபடிமங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார் ரிச்சர்ட்.

பக்கத்து வீட்டுக்காரர் எலிசபெத் ஹாஸ்கிங்ஸ் 15 மாதக் குழந்தையான மேரியைத் தூக்கிக்கொண்டு, இன்னும் இரண்டு பெண்களுடன் ஒரு மரத்தடியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மரத்தில் நெருப்புப் பற்றிக்கொண்டது.

அந்த விபத்தில் மூன்று பெண்களும் பலியாகிவிட்டனர். மேரி மட்டும் சிறு காயங்களுடன் பிழைத்துவிட்டார். நெருப்பில் இருந்து தப்பிய குழந்தை, நோய்வாய்ப்பட்ட குழந்தையாக இருக்குமென்று எல்லோரும் நினைத்தனர். ஆனால், குழந்தை வளர வளர அந்த எண்ணம் தவிடுபொடியானது. புத்திக்கூர்மையும் ஆர்வமும் நிறைந்த பெண்ணாகத் திகழ்ந்தார் மேரி.

அந்தக் காலத்தில் பெண்குழந்தைகளுக்கு கல்வி பரவலாக அளிக்கப்படவில்லை. ஞாயிறு பள்ளியில் சேர்ந்து எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார் மேரி. அவர்கள் வாழ்ந்த லைம் ரிஜிஸ் நகரம் புகழ்பெற்ற கடற்கரை சுற்றுலாத்தலமாக இருந்தது.

 அதனால் ஏராளமானவர்கள் அங்கே வந்தவண்ணம் இருந்தனர். கடற்கரைகளில் இருக்கும் சிப்பிகள், சங்குகளைச் சேகரிக்க மேரியை அழைத்துச் செல்வார் ரிச்சர்ட். சேகரித்த சிப்பிகளையும் சங்குகளையும் கடற்கரையில் ஒரு கடை வைத்து விற்பனை செய்வார். இப்படித்தான் மேரிக்கு தேடுதலில் ஆர்வம் வந்தது.

அந்தப் பகுதியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்களின் புதைபடிமங்கள் ஏராளமாக இருந்தன. அவற்றின் அருமை அப்போது யாருக்கும் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. ரிச்சர்ட் புதைபடிமங்களைக் கண்டு பிடித்து, பத்திரமாக எடுத்து, கடையில் விற்பார். சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் அதை வாங்கிச் செல்வார்கள். இதனால் குடும்பத்துக்குக் கூடுதல் வருமானம் கிடைத்து வந்தது. மேரியும் புதைபடிமங்களைக் கண்டுபிடிக்கவும்  பத்திரமாக அவற்றை எடுக்கவும் கற்றுக்கொண்டார்.

ரிச்சர்ட் நுரையீரல் நோயால் தாக்கப்பட்டு 44 வயதில் இறந்து போனார். குடும்பத்துக்கு சொத்தோ, சேமிப்போ இல்லாததால், வறுமையில் மூழ்கியது. ஏழைகளுக்கு உதவி செய்யும் அரசாங்க நிறுவனத்திடம் உதவி கேட்டார் மேரியின் அம்மா.

ஆனாலும், நிலைமையைச் சமாளிக்க முடியவில்லை. 12 வயது மேரி, அப்பாவின் வேலையைத் தொடர ஆரம்பித்தார். அப்போது இச்தியோசார் என்ற கடல்வாழ் ஊர்வன விலங்கின் தலை புதைபடிமம் கிடைத்தது. சில மாத முயற்சிக்குப் பிறகு, அந்த விலங்கின் முழு உருவமும் கிடைத்தது. புதைபடிமச் சேகரிப்பாளரிடம் கொடுத்து, பணம் பெற்றுக்கொண்டார் மேரி.

மேரியின் உழைப்புக்கோ, அவர் எடுத்துக் கொடுத்த புதைபடிமத்தின் மதிப்புக்கோ ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை. மேரியின் வசதி படைத்த தோழிகளின் உதவியால் ஓரளவு புதை
படிமங்கள் விற்பனையாகின.

இங்கிலாந்தில் இருந்த பல விஞ்ஞானிகளுக்கு மேரியையும் மேரியின் புதைபடிமங்களைப் பற்றியும் கடிதம் எழுதினார்கள் தோழிகள். வில்லியம் பக்லேண்ட் என்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் மேரியைச் சந்தித்தார். மிகவும் வியந்து போனார். மேரியைப் பற்றி லண்டன் அருங்காட்சியகம், விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடம் போன்றவற்றுக்கு கடிதங்கள் எழுதினார். மேரி ஓரளவு புகழ்பெற ஆரம்பித்தார்.

குறைவாகப் படித்திருந்தாலும் தான் செய்யும் பணியும் புதைபடிமங்களைப் பற்றிய அறிவும் அவருக்கு ஏராளமாக இருந்தன. தகவல்களைச் சேகரித்து, தொகுத்து வைத்தார். ட்ரே என்ற நாயை அழைத்துக்கொண்டு நாள் முழுவதும் புதை படிமம் தேடும் பணியில் மூழ்கியிருப்பார் மேரி. ப்ளீசியோசார் என்ற மிகப்பெரிய கடல்வாழ் ஊர்வனப் பிராணி, பறக்கும் மீன் போன்ற வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த பல உயிரினங்களின் புதைபடிமங்களைக் கண்டு பிடித்தார் மேரி. டோர்செட் கவுன்ட்டி மியூஸியம் மேரியை கௌரவ உறுப்பினராக அங்கீகரித்தது.

இச்சூழலில் மேரிக்கு அடிக்கடி உடல்நலம் குன்றியது. மேரி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நிலவியல் துறை பணம் சேகரித்து மேரியின் மருத்துவச் செலவுக்குக் கொடுத்தது. ஓராண்டு கடுமையான வலிகளைச் சுமந்து வந்த மேரி, 47வது வயதில் இறந்து போனார். மேரி படித்து பட்டம் பெற்றவர் இல்லை. சோதனைக்கூடங்களில் ஆராய்ச்சி செய்யும் பயிற்சி பெற்ற விஞ்ஞானியும் இல்லை. ஆனாலும், அவருடைய கண்டுபிடிப்புகள் அறிவியல் உலகை மாற்றியிருக்கின்றன!

மேரியின் குழந்தைப் பருவத்தில் புதைபடிமம் குறித்த போதுமான தகவல்களோ, விழிப்புணர்வோ இல்லை. ஆனால், மேரியின் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு, புதைபடிமம் ஆராய்ச்சித் துறையே புதிதாக உருவானது. உலகம் முழுவதும் புதைபடிமங்களைத் தேடும் பணி நடைபெற்றது. வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைப் பற்றிய ஒரு தெளிவான புரிதல் நமக்குக் கிடைத்திருக்கிறது! மேரி வாழ்ந்த காலத்தில் அவர் ஒரு பெண் என்பதாலும் முறையான கல்வி பயிலாதவர் என்ப தாலும் புதைபடிம விஞ்ஞானியாக அங்கீகரிக்கப்படவில்லை.

அவர் இறந்து 165 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டனில் அறிவியல் வளர்ச்சிக்குப் பாடுபட்ட பத்து பெண்கள் பட்டியலில் மேரி அன்னிங் பெயரும் இடம்பெற்றது! மேரி அன்னிங் பிறந்து 215 ஆண்டுகளுக்குப் பிறகு மேரிக்கு மிகப் பெரிய அங்கீகாரம் அறிவியல் உலகில் கிடைத்திருக்கிறது! அவரது கண்டுபிடிப்பு களால்தான் உலகம் அறிவியலில் மறுகட்டுமானம் செய்ய முடிந்திருக்கிறது!

வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைப் பற்றிய ஒரு தெளிவான புரிதல் நமக்குக் கிடைக்க, மேரியின் கண்டுபிடிப்புகளே காரணம்!

சஹானா