தூக்கம் A to Z



பெண்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து, அவர்களை உடலளவிலும் மனத்தளவிலும் பல வீனமாக உணர வைக்கிற பருவம் மெனோபாஸ். எத்தனை அன்பான, அமைதியான, இனிமையான பெண்களையும் ஆக்ரோஷமும் ஆத்திரமும் கொள்ளச் செய்கிற மெனோபாஸ் பருவத்தை எல்லாப் பெண்களும் கடந்தே ஆக வேண்டும்.

அதுநாள் வரை மாதவிலக்கு என்பதை ஒரு சுமையாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள், அது நின்று போனதும், ஏதோ தன் பெண்மையே தன்னிடமிருந்து பறி போன மாதிரி உணர்வார்கள். இனி தான் எதற்கும் யாருக்கும் லாயக்கற்றவள் என்கிற தாழ்வு மனப்பான்மையில் தவிப்பார்கள். கணவர் தன்னை விட்டு ஒதுங்கி விடுவாரோ என்பது போன்ற தேவையற்ற பயங்கள் தலைதூக்கும்.

மனது ஒரு பக்கம் பாடாகப்படுத்த, உடலும் தன் பங்குக்கு ஏகப்பட்ட மாற்றங்களைக் காட்டும். அளவுக்கு அதிக ரத்தப்போக்கு அல்லது அவ்வப்போது தென்படுகிற குறைந்த அளவு ரத்தப்போக்கு, மாதத்தில் எப்போது வேண்டு மானாலும் வருகிற ரத்தப்போக்கு, வேலையே செய்யாத போதும் அசதி, கை, கால் வலி, குடைச்சல், எலும்புத் தேய்மானம், மயக்கம், அதிக வியர்வை, உடல் சூடாவது என நிறைய மாற்றங்களை உணர்வார்கள்.

அதுநாள் வரை அனுபவித்திராத புதிய உபாதைகள் ஒரு பக்கமும், பாதுகாப்பற்ற மனநிலை இன்னொரு பக்கமுமாக மெனோபாஸ் என்பது கிட்டத்தட்ட நரக அனுபவத்தையே தரும். இந்த அத்தனை அறிகுறிகளின் உச்சக்கட்டமாக தூக்கம் ஒரேயடியாக பறிபோகும். தூக்கமே இல்லாதது, தூக்கத்தில் திடுக்கிட்டு விழிப்பது, மறுபடி தூக்கத்துக்குள் போக முடியாதது என ஆழ்ந்த, அமைதியான தூக்கம் என்பது இவர்களிடமிருந்து விடைபெறும். தூக்கமில்லாவிட்டால் எந்த மனிதரின் மனநிலையும் மிருகத் தன்மை கொள்ளும். ஏற்கனவே ஹார்மோன் மாற்றங்களினால் உடல் மற்றும் மன அவதிகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு, தூக்கமின்மையும் சேர்ந்து கொண்டால் கேட்கவா வேண்டும்?

மெனோபாஸ் நெருங்குவதற்கு முன்பிருந்தே சில விஷயங்களை முறையாகப் பின்பற்றினால், வரப் போகிற பிரச்னைகளில் இருந்து ஓரளவு தம்மைக் காப்பாற்றிக்
கொள்ளலாம். தூக்க முறையும் ஒழுங்குபடும். தூக்கமின்மை சிகிச்சையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிற அரோமாதெரபியில், மெனோபாஸ் பருவத்துத் தூக்கமின்மைக்கும் தீர்வுகள் இருப்பதைச் சொல்கிறார் அரோமா தெரபிஸ்ட் கீதா அஷோக்.

* இரவில் தினமும் குளித்துவிட்டு, தளர்வான உடை அணிந்து படுக்கவும்.

* ஒரு மஸ்லின் துணியில் 4 சொட்டுகள்

ஃபிரான்கின்சென்ஸ் ஆயில், 4 சொட்டுகள் லேவண்டர் ஆயில், 4 சொட்டுகள் லெமன் கிராஸ் ஆயில் மூன்றையும் தெளித்து, உங்கள் தலையணை உறைக்குள் வைத்துக் கொள்ளவும். பத்மாசனத்தில் உட்கார்ந்து கொண்டு, இரண்டு கால் கட்டை விரல்களையும் 50 முறைகள் அழுத்திப் பிடித்து விட்டுப் படுத்தால் ஆழ்ந்த தூக்கம் வரும். இதில் லேவண்டர் ஆயிலுக்கு பயத்தையும் பதற்றத்தையும் போக்கும் தன்மை உண்டு. ஃபிரான்கின்சென்ஸ் ஆயிலானது மனதை அமைதிப்படுத்தும். லெமன் கிராஸ் ஆயில் மூளையைப் புத்துணர்வுடன் வைக்கும்.

* மெனோபாஸ் பருவத்தில் இருக்கும் பெண்களில் 90 சதவிகிதம் பேருக்கு இடுப்பு வலியும் முதுகு வலியும் தவிர்க்க முடியாதது. ரத்தப் பரிசோதனை செய்து, கால்சியம் மற்றும் துத்தநாகக் குறைபாடு இருக்கிறதா என அறிந்து, அதற்கேற்ற உணவுகளையும் சப்ளிமென்ட்டுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* கடைகளில் பாரஃபின் வாக்ஸ் அல்லது பீஸ் வாக்ஸ் எனக் கிடைக்கும். 10 கிராம் வாக்ஸை எடுத்து டபுள் பாயில் முறையில் உருக்கவும். உருகியதும் அதில் பிளாக் பெப்பர் ஆயில், கேம்ஃபர் ஆயில், யூகலிப்டஸ் ஆயில் மூன்றிலும் தலா 10 சொட்டுகள் சேர்க்கவும். குப்புறப் படுத்துக் கொள்ளவும். உருகிய மெழுகில் தட்டையான பிரஷ்ஷை தொட்டு, இடுப்பில் வலி இருக்கும் பகுதிகளில் பொறுக்கும் சூட்டில் யாரையாவது தடவிவிடச் சொல்லவும். 10 நிமிடங்கள் கழித்து எடுத்து விடலாம். உடனடியாக வலி குறையும். மெழுகில் கலந்த அரோமா ஆயில்களின் கலவையும் மெழுகின் சூடும் சேர்ந்து இதமான உணர்வைத் தரும். தூக்கம் தழுவும்.

* மார்பகங்கள் கனத்துப் போவதும் வலிப்பதும் கூட இந்தப் பருவத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. காஸ் துணி (பேண்டேஜ் துணி) எனக் கடையில் கேட்டு வாங்கவும். இது கிடைக்காதவர்கள் மஸ்லின் துணியையும் உபயோகிக்கலாம். கால் லிட்டர் தண்ணீரை நன்கு சூடாக்கி எடுத்துக் கொள்ளவும். அதில் ஜாஸ்மின் ஆயில், சைப்ரஸ் ஆயில் மற்றும் லேவண்டர் ஆயில் மூன்றையும் தலா 25 சொட்டுகள் விட்டு, துணியை அதில் முக்கிப் பிழியவும். சூடு இருக்கும் போதே, அந்தத் துணியை மார்பகங்களின் மேல் வைத்திருந்து எடுக்கவும். 10 முறை இப்படிச் செய்தால், கனத்த மார்பகங்கள் லேசான மாதிரி உணர்வீர்கள். வலி குறைந்து தூக்கம் வரும்.

* சாதாரண தலைவலியும் ஒற்றைத் தலைவலியும் இந்த நாட்களில் மிகவும் சகஜம். ஆரம்பத்தில் தலைவலிக்காக தைலம் தடவிப் பழகியவர்கள், ஒரு கட்டத்தில் வலி இருக்கிறதோ, இல்லையோ தைலம் தடவினால்தான் தூக்கம் வரும் என்கிற நிலைக்கு வருவார்கள். காரணம், அத்தைலங்களில் உள்ள மென்தால், டீ ட்ரீ மற்றும் கேம்ஃபர்
கலவையும் அவற்றின் மணமும். அரோமா தெரபியில் இந்த மூன்றையும் பேஸ் நோட்ஸ் ஆயில் என்கிறோம்.

* அதாவது,  இவற்றின் மணத்தை நுகரும் போது, குறிப்பிட்ட நேரம் தாண்டியும் அவை நம் உடலுக்குள் வேலை செய்யும்.

* நொச்சி இலையை எடுத்து சுத்தம் செய்து துவையல் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். அதில் பைன் ஆயில், காம்ஃபர் ஆயில் இரண்டை யும் தலா 25 சொட்டுகள் விட்டுக் கலந்து, நெற்றியில் பற்று போட்டு, அதன் மேல் ஒரு மெல்லிய துணியைக் கட்டிக் கொண்டு 10 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். இது மண்டையில் நீர்கோர்ப்பு இருந்தால் சரி செய்து, உடனடியாக தலைவலியை விரட்டி விடும். நொச்சி இலையை மொத்தமாக அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு அவ்வப்போது அரோமா ஆயில் கலந்தும் உபயோகிக்கலாம்.

* இரவுச் சாப்பாடு எளிதில் செரிக்கக் கூடியதாகவும் சற்றே சூடானதாகவும் இருக்கட்டும். 7:30 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். இரவு உணவுக்கும்  தூக்கத்துக்கும் இடையில் குறைந்தது 2 மணி நேரமாவது இடைவெளி இருக்கட்டும்.

* தினம் ஒரு ஆப்பிள், கூடவே ஒரே ஒரு கிராம்பு போட்டுக் காய்ச்சிய பாலும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஃப்ரெஷ்ஷான அத்திப்பழம் 3ம் வெது
வெதுப்பான பாலும் எடுத்துக் கொள்ளலாம்.

மெனோபாஸ் பருவத்தில் இருக்கும் பெண்களில் 90 சதவிகிதம் பேருக்கு இடுப்பு வலியும் முதுகு வலியும்தவிர்க்க முடியாதது...

தொகுப்பு: சாஹா
படங்கள்: ஆர்.கோபால்