கொங்கு ராகி களி.



சிறுதானிய உணவுகள் பற்றிய விழிப்புணர்வும் விருப்பங்களும் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், கொங்கு மண்டலத்தின் சுவைப்புகழ் உணவுகளை நினைவுபடுத்திப் பாருங்கள். தமிழகத்தின் மற்ற பகுதிகளைவிட கொங்கு மக்கள் சிறுதானியத்தைஅதிகம் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

‘அரிசிம்பருப்பு சாதம்’ எத்தனை புகழ்பெற்றதோ, அதற்குச் சற்றும் குறையாமல் சோள பணியாரமும், ராகி களியும், தினை அதிரசமும், கம்பங்கூழும்... மற்றெங்கும் விட இங்கு சிறுதானிய பயன்பாடு அதிகம்... ருசியும்தான்! நாம் சந்திக்கும் பலர் கேட்கும் கேள்விகளில் முக்கியமானது, ‘உங்களுக்குக் களி செய்ய தெரியுமா?’ களி செய்வது கம்பசூத்திரம் அல்ல. ஆனாலும், சிறப்பை அறிந்து முயற்சித்தல் நன்றுதானே!

தமிழகம் தாண்டி ராகி களி முக்கிய இடம் பெறுவது கர்நாடக மாநிலத்தில்தான். ‘ராகி முக்தே’ என்று பெயரிட்டு மாநிலம் முழுவதும் பாரம்பரிய உணவாக இருக்கிறது. களி செய்முறை எளிதுதான். ஆனாலும், ஊருக்கு ஊர் வேறுபடுகிறது. கர்நாடகாவில் சில இடங்களில் கோதுமை ரவை, சாதம், வெள்ளை ரவை, அரிசி மாவு போன்றவை சேர்க்கப்
படுகின்றன.

ராகி ஒரு முழுச்சத்துள்ள உணவு. அந்தக் காலத்தில் குழந்தைக்கு ஊட்டும் முதல் உணவாக ராகியே இருந்திருக்கிறது. ராகியை அரைத்து, மாவெடுத்து, வெயிலில் உலர வைத்து, பொடியாகவோ, வில்லையாகவோ சேர்த்து வைத்து, பால் சேர்த்து வேக வைத்துத் தருவது வழக்கம். குழந்தைக்கு மிகச்சிறந்த ஊட்ட உணவாகவும் இது அமையும். ‘சிறுதானிய வகைகளில் அரசன்’ இந்தகேழ்வரகு என்றழைக்கப்படும் ராகியே.

நீரிழிவுக்கான சிறப்பு உணவு முறையில் ராகிக்கு முதலிடம் உண்டு. எனினும், கஞ்சியோ கூழோ - எளிதில் ஜீரணமாகும் எதுவும் நீரிழிவுக்கு எதிரி என்பதால், ராகியை அடையாகவோ, தோசையாகவோ, சாதமாகவே எடுத்துக் கொள்ளலாம். ராகி அல்வாவில் தொடங்கி ஏகப்பட்ட அயிட்டங்கள் இதில் இருந்தாலும், செய்ய எளிதானதும் செலவில்லாததும் என்ற பெருமையைப் பெறுவது ராகி களியே. எதனோடும் இதை ஜோடி சேர்க்கலாம், தொய்யல் கீரை, காட்டுக் கீரை கடைசல், கொள்ளுக் குழம்பு, பாசிப்பயறு குழம்பு, கத்தரிக்காய் - மொச்சைக் குழம்பு என எல்லாமே நன்று.  அசைவத்தில், கோழிக்குழம்பும் ராகி களியும்மாப்பிள்ளை விருந்து பட்டியலிலும்இடம் பெறும். கருவாட்டுக் குழம்பும் களியும் நினைப்பவர்களையும் ருசிக்கத் தூண்டும்.

இது எதுவுமே இல்லாமல், வெறுமனே மோரில் கலந்து கூழாகக் குடித்தால் வெயிலுக்கு இதத்தை  அனுபவிக்க முடியும். குழந்தைகளுக்கு சூடான களியில் நெய்யும் நாட்டுச் சர்க்கரையும் சேர்த்துத் தரலாம். அனைத்துச் சத்தும் அதில் அடங்கும்.பச்சை இலையில் நல்ல மெருன் நிற களியை வைக்கும் போதே, அதன் சேர்க்கை என்ன என்று ஆவலாக கேட்பவர்கள் அதிகம். உணவு கண்ணுக்கும் ருசிக்க வேண்டுமே!

சிறுதானிய வகைகளில் அரசன் கேழ்வரகு என்றழைக்கப்படும் ராகி!


இத்தனை பெருமையுள்ள களியை பாரம்பரிய முறையில் செய்வோமா! களி செய்ய மண்சட்டியே சாலச் சிறந்தது. இல்லாவிட்டால், வாய் குறுகிய அடி கனமான சட்டி. தண்ணீரை கொதிக்க வைத்து மாவை விட்டு கை விடாமல் கிளற வேண்டும்... அவ்வளவே. இதில் சில நுணுக்கங்களை பின்பற்றினால் களி என்பது எத்தனை எளிதான சுவை உணவு என்பது புரியும்!

இதோ படிப்படியான களி செய்முறை...

சீக்ரெட் ரெசிபி

என்னென்ன தேவை?
ராகி மாவு - ஒரு கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிநிலைக்கு விடவும் (அதிகம் கொதிக்க விட வேண்டாம்).
எண்ணெயும் உப்பும் சேர்க்கவும்.
ராகிமாவை தூவி நன்றாக கைவிடாமல்
கிளறவும் (தீயை நடுத்தரமாக வைக்கவும்).

பாத்திரத்தை கீழே எடுத்து கடைசல் செய்வது போல மத்தில் நன்கு கிளறிவிடவும். இப்படி
செய்வதால் கட்டி தட்டாமலும் சீராகவும் வேகும்.
தேவைப்பட்டால் சிறிது வெந்நீர் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து சின்ன தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.
கையில் தண்ணீர் தொட்டு ராகியை தொட்டால் ஒட்டாமல் வருவது களி வெந்ததற்கு நல்ல பதம்.
அடுப்பில் இருந்து அகற்றி ஆறியதும் உருண்டை பிடிக்கவும்.
சூடாக குழம்புடனோ, ஆறிய பின் மோருடனோ பரிமாறவும்.

உங்கள் கவனத்துக்கு...

*ராகி மாவை தண்ணீரில் போட்டதும் கட்டி தட்டும், அதனை தவிர்க்க மாவை கெட்டியாக சிறிது தண்ணீரில் கரைத்தும் ஊற்றலாம்.
*கர்நாடக முறையில் ரவை அல்லது சாதம் சேர்த்தும் செய்யலாம். ரவை சேர்ப்பதானால் தண்ணீர் கொதித்ததும் ரவை சேர்த்து, பின் தனியாக மாவை சேர்க்க வேண்டும்.
*சாதம் சேர்ப்பதானால் மாவுடன் சாதம் கலந்து சேர்க்க வேண்டும்.
*களி கிளற என்றே சீ வடிவ மரத் துடுப்புகள் உண்டு. முடிந்தால் அதை உபயோகிக்கவும். அல்லது மரகரண்டி, பருப்பு மத்து போன்றவையே போதும்.

விஜி ராம்