சீனியர் சிட்டிசனுக்கு சிறப்பு சலுகைகள்!



சீனியர் சிட்டிசன்களின் நிரந்தர வைப்புத் தொகைக்கு அரை சதவிகிதம் கூடுதல் வட்டி!

தேசிய அளவில் 10 கோடி பேர் கொண்ட மூத்த குடிமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மத்திய அரசின் பல திட்டங் களும் மாநில அரசின் வழியாகவே பயனாளிகளைச் சென்று சேர்கிறது. சீனியர்களுக்கு என்னென்ன சலுகைகள் இருக்கின்றன என்பதை ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ (லீமீறீஜீணீரீமீவீஸீபீவீணீ.ஷீக்ஷீரீ) தொண்டு நிறுவனத்தின் தமிழக இயக்குநர் பி.ஆர்.அன்பழகனிடம் கேட்டோம். அவர் அளித்த தகவல்களில் இருந்து...

1. ஓய்வூதியத் திட்டம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரால் 2007ம் ஆண்டு மத்திய அரசு தொடங்கிய திட்டம் இது. பலருக்கும் தெரிந்த திட்டம், பலரும் பயனடைந்து கொண்டிருக்கும் திட்டம் என்று இந்த திட்டத்தைச் சொல்லலாம். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கும் ஆதர வற்றவர்களுக்கும் மாதம் தோறும் 500 ரூபாயை மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு, இத்தொகையுடன் கூடுதலாக 500 ரூபாய் சேர்த்து 1,000 ரூபாயாக வழங்குகிறது.

2. உணவு, உடை ஓய்வூதியம் பெறும் ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு ‘அன்னப்பூர்ணா’ திட்டத்தின் கீழ் மத்திய அரசு மாதம் தோறும் 10 கிலோ இலவச அரிசியை ரேஷன் கடைகள் மூலம் வழங்குகிறது. ரேஷன் கடைகள் வாயிலாகவே பொங்கலுக்கு வேட்டி - சேலை வழங்கும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

3. வரிவிலக்கு ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்துக்கு மூத்த குடிமக்களுக்கு வரிவிலக்கு உண்டு. 80 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் ரூ.5 லட்சம் வரை வரிவிலக்கு உண்டு.

4. பயணங்களில் சலுகை இந்தியன் ரயில்வேயின் அனைத்து வகுப்புப் பயணங்களுக்கும் 60 வயது நிறைந்த ஆண்களுக்கு 40 சதவிகிதம் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. 58 வயது நிறைந்த பெண்களுக்கு 50 சதவிகிதம் சலுகை உண்டு. பொதுத்துறை மற்றும் சில தனியார் விமானங்களில் 50 சதவிகிதம் வரை சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  ரயில், விமானம் போன்ற பயணச் சலுகை மாநில அரசின் பேருந்துகளிலும் வழங்கப்பட வேண்டும் என்று மூத்த குடிமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அசாம் மாநிலத்தில் 50 சதவிகிதம் பயணச் சலுகை அறிவிக்கப் பட்டுள்ளது. கர்நாடகாவிலும் இதுபோன்ற சலுகை உண்டு.

5. அவசர உதவிக்கான எண்கள் மூத்த குடிமக்களின் அவசர உதவிக்காக பிரத்யேக எண்கள் செயல்படுகின்றன. இந்த அவசர எண்களுக்கு அழைத்தால் அரசு ஊழியர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மூத்த குடிமக்களுக்குத் தேவையான உதவிகளையும் ஆலோ சனைகளையும் வழங்குவார்கள். 1800 180 1253, 1298 ஆகிய எண்களுக்கு அழைக்கலாம். 

6. வங்கிகளில் வசதிகள் மூத்த குடிமக்களின் நிரந்தர வைப்புத் தொகைக்கு அரை சதவிகிதம் கூடுதல் வட்டியை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

7. வழக்குகளில் முன்னுரிமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஏதேனும் தகவலுக்காக மூத்த குடிமக்கள் தாக்கல் செய்திருந்தால், அவர்களுக்கு முன்னுரிமை உண்டு. மூத்த குடிமக்கள் தொடர்புடைய வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக ‘விரைவு நீதிமன்றம்’ மூலம் வழக்குகளை விசாரிக்கவும் வழிவகைகள் உள்ளன.

8. முதியோர் இல்லங்களுக்கான வசதிகள் நாற்பதுக்கும் அதிக முதியவர்களைப் பராமரிக்கும் முதியோர் இல்லங்களுக்கு ஆண்டுக்கு 2 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்குகிறது மாநில அரசு.

9. மருத்துவம் முதல் அமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் அனைத்து சிகிச்சைகளும் பெறலாம். இதே சலுகைகள் ஆதரவற்ற  முதியோருக்கும், முதியோர் இல்லங்களில் தங்கியிருக்கும் முதியோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

 சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மூத்த குடிமக்களுக்கென தனி புறநோயாளிகள் பிரிவு, தனி சிகிச்சைப் பிரிவும், சிறப்பு மருத்துவர்களும் உண்டு. இந்த வசதி சென்னை தவிர, டெல்லியில் மட்டுமே உள்ளது.ஆதரவற்ற மூத்த குடிமக்களைப் பராமரிக்க சென்னை மாநகராட்சி சூளைமேட்டிலும், கே.கே. நகரிலும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆதரவற்றோர் இல்லங்களை நடத்தி வருகிறது.

தொகுப்பு: ஞான தேசிகன்