பிரசவ மருந்து



‘‘அந்தக் காலத்துல வீடுகள்லயே பிரசவம் பார்ப்பாங்க. பிரசவமான பொண்ணுக்கு மூணாவது நாள்லேருந்து மருந்து கொடுப்பாங்க. வயிறு உப்புசம், வாயுத் தொல்லைனு எந்தப் பிரச்னையும் இருக்காது. உள்ளே மிச்சம் மீதி தேங்கி நிக்கற கெட்ட ரத்தமெல்லாம் வெளியேறி, பிரசவிச்ச பொண்ணோட உடம்பு சுத்தமாகும்... அழகாகும். ஏழெட்டு குழந்தைங்க பெத்தவங்க கூட ஒரு நோய், நொடியில்லாம ஆரோக்கியமா, அழகா இருந்ததுக்கு அதெல்லாம்தான் காரணம்.

இன்னிக்கோ குழந்தை பிறக்கறதே பெரிய காரியமா இருக்கு. அப்படியே ஒண்ணே ஒண்ணு பெத்தாலும், மாசக்கணக்குல படுக்கையிலயே ரெஸ்ட் எடுக்கறாங்க. மூணே மாசத்துல உடம்பு தாறுமாறா ஊதிப் போகுது. ரத்தம் சுண்டிப் போகுது.

 புதுசு புதுசா நோய்கள் வந்து சேருது... எங்க கிராமத்துல இப்பவும் பிரசவமான பெண்களுக்கு மருந்து கொடுக்கிற பழக்கத்தை விடாம பண்ணிட்டிருக்கோம். அதை எடுத்துக்கிறவங்க ஆரோக்கியமா இருக்காங்க...’’ - ஆதங்கமும் ஆற்றாமையும் சேரப் பேசுகிறார் இந்திராணி. குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த இவர், பிரசவித்த பெண்களுக்கான கை மருந்துகள் தயாரிப்பதில் நிபுணி.

‘‘என் கணவர் நாட்டு வைத்தியர். அந்த வகையில நிறைய கை வைத்தியம் தெரியும். எங்கம்மா வீடுகள்ல போய் பிரசவம் பார்ப்பாங்க. பிரசவமான பெண்களுக்கு மூணாவது நாள்லேருந்தே விதம் விதமான பத்திய மருந்துகளைக் கொடுப்பாங்க. குழந்தை பிறந்த ஒரே வாரத்துல அந்தப் பொண்ணு ஆரோக்கியமா எழுந்து நடமாடறதையும் வேலைகள் செய்யறதையும் பார்க்கலாம். நகரத்துப் பெண்களுக்கு அதெல்லாம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. ‘எதுக்கெடுத்தாலும் டாக்டர்... எல்லாத்துக்கும் மருந்து’னு நம்பியே வாழறாங்க.

பிரசவமான பெண்களுக்கு மஞ்சள் உருண்டை, கருஞ்சீரக உருண்டை, பெருங்காய உருண்டை, மருந்துக் குழம்பு... இதெல்லாம் கொடுக்கறது கிராமத்து வழக்கம். மஞ்சள் உருண்டை கொடுக்கிறதால பிரசவமான புண் ஆறும். ஆன்டிசெப்டிக்கா வேலை செய்யும். கருஞ்சீரக உருண்டை அசுத்த ரத்தத்தை வெளியேத்தும். மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்தும். பெருங்காய உருண்டை வாயுத்தொல்லையை விரட்டி, உடம்பை லேசாக்கும். தினம் ரெண்டு வேளை இந்த உருண்டை களை எடுத்துக்கலாம்.

இது தவிர தாய்ப்பால் சுரக்கவும் இழந்த தெம்பு மறுபடி கிடைக்கவும் மருந்து குழம்பு வச்சுக் கொடுப்போம். சுக்கு, மிளகு, வால்மிளகு, திப்பிலி, பரங்கிப்பட்டை, சங்க இலைனு பலவகை மூலிகைகள் கலந்த அந்தக் குழம்பு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். இதெல்லாம் போக இஞ்சி சூரணமும் உண்டு. பிரசவமான பெண்கள்னு இல்லாம எல்லாருமே இதை எடுத்துக்கலாம். அஜீரணத்துக்கு நல்ல மருந்து.

என்னதான் நாகரிகத்துக்குப் பின்னாடி ஓடினாலும், ஆரோக்கியம்னு வரும் போது இந்த மாதிரி பழமைக்குக் கொஞ்சம் மரியாதையும் முக்கியத்துவமும் கொடுத்தா ஆயுசு கூடும்’’ என்கிற இந்திராணி, 3 விதமான மருந்து உருண்டைகள், இஞ்சி சூரணம் மற்றும் மருந்துக் குழம்புக்கான பொடி என எல்லாவற்றையும் ஒரே நாள் பயிற்சியில் 500 ரூபாய் கட்டணத்தில் கற்றுத் தரக் காத்திருக்கிறார். (96597 03169)

‘‘என்னதான் நாகரிகத்துக்குப் பின்னாடி ஓடினாலும் ஆரோக்கியம்னு வரும் போது பழமைக்கும் கொஞ்சம் மரியாதையும் முக்கியத்துவமும் கொடுத்தாஆயுசு கூடும்!’’

இந்திராணி

சிறுதானிய கேக்


கேக் பிடிக்காத குழந்தைகளைப் பார்க்க முடியுமா? தினமும் 3 வேளைகளுக்கும் கேக் மட்டுமே கொடுத்தால் கூட அடம்பிடிக்காமல் சாப்பிடுகிற அளவுக்கு அது அவர்களது விருப்ப உணவுகளில் முக்கியமானது. விருப்பமான உணவுகள் ஆரோக்கியமானவையாக இல்லாததுதான் பிரச்னையே...மைதாவும் சர்க்கரையும் வெண்ணெயும் கலந்த கேக்குகள் ருசியாக இருந்தாலும், ஆரோக்கியமானவையாக இருப்பதில்லையே...என்னதான் தீர்வு? பள்ளிக்கரணையைச் சேர்ந்த விமலா சொல்வதைக் கேளுங்களேன்! ‘‘சிறுதானியங்களுக்கு இயல்புலேயே ஒரு நல்ல வாசனை இருக்கும். கேக் தயாரிக்கிற போது அந்த வாசனை ஊரையே கூட்டும்!’’

விமலா

விதம் விதமான போளி

பண்டிகைகளின் போது வீடுகளில் செய்யப்படுகிற பாரம்பரிய உணவான போளி, இன்று பிரபலமான ஒரு துரித உணவு. தெருவுக்குத் தெரு போளி விற்பனைக்கென்றே பிரத்யேக கடைகள் முளைப்பதைப் பார்க்கிறோம். வீடுகளில் பெரும்பாலும் பருப்பு போளியும் தேங்காய் போளியும் மட்டுமே செய்வது வழக்கம். நாகரிக உணவு மோகத்தில், போளிகளும் நவீன வடிவம் பெற ஆரம்பித்து விட்டன. சென்னை கே.கே.நகரை சேர்ந்த சாருலதா, விதம் விதமான போளி செய்வதில் நிபுணி.

‘‘பி.ஏ. படிச்சிருக்கேன். வேலைக்குப் போயிட்டிருந்தேன். பொண்ணு படிப்புக்காக வேலையை விட வேண்டி வந்தது. இயல்பாவே ரொம்ப நல்லா சமைப்பேன். தெரிஞ்சவங்க,
ஃப்ரெண்ட்ஸ் வரைக்கும் சின்னச் சின்ன கேட்டரிங் ஆர்டர் எடுத்துப் பண்ணிட்டிருந்தேன். எங்க வீட்ல எந்த விசேஷம்னாலும் போளி நிச்சயம் இருக்கும்.

எங்க வீட்டு போளியை டேஸ்ட் பண்ற யாரும் அதைப் பாராட்டத் தவறினதில்லை. அது மட்டுமில்லாம, அவங்க வீட்டு விசேஷங்களுக்கும் ஆர்டர் கொடுப்பாங்க. அப்படி சின்ன அளவுலதான் போளி பிசினஸை ஆரம்பிச்சேன். இப்ப அதுல நான் பயங்கர பிஸி...’’ என்கிற சாருலதா, பால் போளி, கடலைப் பருப்பு போளி, பாசிப் பருப்பு போளி, தேங்காய் போளி, ஜீரா போளி, கார போளி, மசாலா போளி என ஏகப்பட்ட வகைகளில் போளி தயாரிக்கிறார்.

‘‘போளி பண்றதுங்கிறது ஒரு கலை. மைதாவுலதான் பண்ண முடியும். ரப்பர் மாதிரி கடினமா, இழுவையோட இல்லாம சாஃப்டா போளி பண்றதுலதான் இருக்கு சூட்சுமமே. அந்த அடிப்படை தெரிஞ்சிட்டா, விதம் விதமா எத்தனை வெரைட்டில வேணாலும் பண்ணிடலாம்.

 காய்கறி சாப்பிட அடம் பிடிக்கிற குழந்தைங்களுக்கும் கலவையான காய்கறிகளோட, மசாலா சேர்த்து இப்படி போளியா கொடுத்து சாப்பிட வைக்கலாம். ட்ரை ஃப்ரூட்ஸ் வச்சு பண்ணித் தரலாம். சீஸும் மயோனைஸும் கலந்து செய்யற ஆபத்தான உணவுகளுக்குப் பதிலா, இப்படி தினம் ஒரு போளி வகையைக் குழந்தைங்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.

மைதா, எண்ணெய், வெல்லம், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு ஆயிரம் ரூபாய் முதலீடு போதும். ஒரு போளியை 8 ரூபாய்க்கு கொடுத்தாலும் 50 சதவிகித லாபம் நிச்சயம். சாயந்திர நேரத்துல மட்டும் சூடான போளி செய்து, அக்கம்பக்கத்து வீடுகளுக்கு விற்பனை செய்தாலே பெரிய லாபம் பார்க்கலாம்.

இது தவிர்த்து சின்னச் சின்ன விசேஷங்களுக்கும் 100, 200னு எண்ணிக்கை கணக்குல ஆர்டர் எடுத்துப் பண்ணலாம்’’ என்கிற சாருலதாவிடம் ஒரே நாள் பயிற்சியில் 7 வகையான போளி செய்யக் கற்றுக் கொள்ளலாம். கட்டணம் 750 ரூபாய். (97915 61947) ‘‘காய்கறி சாப்பிட அடம் பிடிக்கிற குழந்தைங்களுக்கும் கலவையான காய்கறிகளோட, மசாலா சேர்த்து இப்படி போளியா கொடுத்து சாப்பிட வைக்கலாம். ட்ரை ஃப்ரூட்ஸ் வச்சு பண்ணித் தரலாம்!’’

சாருலதா

-ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்