கருவிலேயே கற்ற விளையாட்டு!



சாய்னா நெஹ்வால்

'இன்றைக்கு சாய்னா ஒரு சாம்பியனா இருக்கான்னா அதுக்கு அவளோட அம்மாதான் முதல் காரணம். சாய்னாவோட வெற்றிக்குப் பின்னால் இருப்பவர்களில் முதன்மையானவர். எங்கள் கல்யாணம் நடந்தபோது, உஷா ராணிக்கு பதினாலு வயசுதான். ஆறு வருஷம் கழிச்சுதான் ஹிசார் வந்து என்னோட குடும்பம் நடத்த தொடங்கினா...’’ - பழைய நினைவுகள் கண்களில் விரிய மகிழ்ச்சியுடன் தொடர்கிறார் ஹர்வீர்.

'1980ல் தான் உஷா ஹிசாருக்கு வந்து சேர்ந்தா. அவளுக்கு தொடர்ந்து படிக்க ஆசை. குருஷேத்ரா பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி பட்டப் படிப்புக்கு சேர்ந்தா. சரியா மூன்றே வருஷத்துல முடிச்சுட்டா. அந்த வருஷ கடைசில எங்களுக்கு முதல் பெண் குழந்தை பிறந்தது. அபு சந்திரான்ஷுன்னு பெயர் வைத்தோம்.

 நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து போன ஒரே மலை வாசஸ்தலம் மவுன்ட் அபுவின் பசுமையான நினைவுகளை என்றென்றைக்கும் மறக்காம இருக்கவே அந்தப் பெயரை தேர்வு செய்தோம்.

ரெண்டு பேருமே நல்லா ஷட்டில் விளையாடுவோம். அபு கொஞ்சம் பெரியவளானதும், மீண்டும் விளையாட ஆரம்பிச்சோம். எங்க பல்கலை. குடியிருப்பு வளாகத்திலேயே பேட்மின்டன் கோர்ட் இருந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ராக்கெட்டும் கையுமா கௌம்பிடுவோம். உஷா பிரமாதமா விளையாடுவா. உள்ளூர்ல நடந்த டோர்னமென்ட்டுல நாங்க ஜோடியா விளையாடி ஜெயிச்சத மறக்கவே முடியாது. 'நப்சோர் டெய்லி'ங்கற லோக்கல் பத்திரிகையில போட்டோவோட நியூஸ் எல்லாம் போட்டாங்க.

ரெண்டாவதா கர்ப்பமான பிறகும் கூட தொடர்ந்து விளையாடிட்டே இருந்தா. அபிமன்யு மாதிரி சாய்னாவும் வயித்துக்குள்ள இருந்தே பேட்மின்டன் ஆட கத்துக்கிட்டான்னு நினைக்கிறேன். குழந்தை பிறந்து ஆறு மாதம் கூட ஆகியிருக்காது. உஷா மீண்டும் கிரவுண்டுக்கு கிளம்பிட்டா. நான் குழந்தைய கையில் தூக்கி வச்சுகிட்டு வேடிக்கை காண்பிப்பேன்...'

'இருங்க நானும் கொஞ்சம் சொல்றேன்' என்று உரையாடலில் இணைந்த உஷா, “ஷட்டில் இப்படியும் அப்படியுமா பறப்பதை பார்த்து சாய்னா கலகலன்னு சிரிச்சா. அப்போ அவளோட முகத்துல இருந்த சந்தோஷம், அந்த சிரிப்புல இருந்த உற்சாகம் எந்தக் குழந்தையும் அப்படி சிரிச்சு நான் பார்த்ததே இல்ல. இப்போ நெனச்சாலும் அப்படியே புல்லரிக்குது...” என்கிறார்.

“சாய்னாவோட முதல் விளையாட்டுப் பொருளே ஷட்டில்தான். நாங்க பேட்மின்டன் ஆடும்போது வெளிய இருந்து பந்தை தூக்கிப் போடுவா. அவ ரொம்பவும் ஆரோக்கியமான குழந்தையா வளர்ந்தா. ஹரியானாவில் பால், பழம், நெய் அதிகம் சேர்த்துக்குவோம். அதோட, நாலரை வருஷம் வரை தாய்ப்பால் குடிச்சதும் ஒரு காரணம்னு நினைக்கிறேன்.

அதனாலேயோ என்னமோ சாய்னாவுக்கும் அம்மாவுக்கும் இடையே அப்படி ஒரு அட்டாச்மென்ட். உஷாவுக்கு பேட்மின்டன் மேல இருந்த ஆர்வம், காதல், வெறி அப்படியே சாய்னாவிடம் ஒட்டிக் கொண்டதில் ஆச்சரியம் இல்லை. மூணு வயசுல பால பவன் பிளே ஸ்கூல்ல சேர்த்தோம். தினமும் லஞ்ச்சுக்கு நான் வீட்டுக்கு வரும்போது, ஸ்கூலுக்கு போய் சாய்னாவை கூட்டிட்டு வருவேன்.

ஒரு நாள் வேலை டென்ஷன்ல சுத்தமா மறந்துட்டு நேரா வீட்டுக்கு போய்ட்டேன். ‘ஏங்க கொழந்த எங்கேங்க’ என்று உஷா கேட்ட பிறகு, அவசரம் அவசரமா  ஸ்கூலுக்கு ஓடினா, எந்த பிரச்னையும் பண்ணாம பெஞ்ச்லயே படுத்து நல்லா தூங்கிக்கிட்டிருந்தா. இப்பவும் மதியத்துல ஒரு மணி நேரம் தூங்கறது வழக்கமாயிடுச்சு.

ஈவ்னிங் பிராக்டீசுக்கு போகும்போது ஃபிரெஷ்ஷா இருக்க இது உதவுது.சின்ன வயசுல நீச்சல், சைக்ளிங் எல்லாம் நல்லா செய்வா. 50 மீட்டர், 100 மீட்டர் நீச்சல், ஃபிராக் ரேஸ்ல பிரைஸ் வாங்கியிருக்கா. கொஞ்சம் பெரியவளானதும், தினமும் வீட்டுல இருந்து என்னோட ஆபீசுக்கு லஞ்ச் பாக்ஸ் கொண்டு வந்து கொடுப்பா. போக வர நாலு கிலோ மீட்டர்.

சளைக்காம சைக்கிள் ஓட்டுவா. ஒருநாள் சக விஞ்ஞானி டாக்டர் சாட்டர்ஜியோட பேசிட்டிருந்தேன். அரியானா மாநில அரசுப் பணியில் இருந்து மத்திய அரசுப் பணிக்கு மாறுவது பற்றி யோசிக்க ஆரம்பிச்சோம். அவர் வாரணாசிக்கு போக முடிவு செய்தார். என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாம் 'ஐதராபாத்தான் சரியான சாய்ஸ். அங்க கொஞ்ச நாள் இருந்துட்டு மறுபடி ஹிசாருக்கே டிரான்ஸ்பர் வாங்கிக்கோ' என்றார்கள். 'ஐதராபாத்துக்கு போ' என்று எனக்குள் ஏதோ ஒரு குரல் ஒலிச்சிகிட்டே இருந்தது.

1998 ஏப்ரல் 1ம் தேதி நான் ஐதராபாத்துக்கு புறப்பட்டேன். என்.ஜி.ரங்கா பல்கலைக்கழகத்துல வேலை. மெயின் சிட்டில இருந்து 25 கிலோ மீட்டர் தூரம். ஆனா, ராஜிவ் காந்தி ஏர்போர்ட்ல இருந்து ரொம்ப பக்கம். கிட்டத்தட்ட ரெண்டு மாசம் ஆயிடுச்சு நல்லா செட்டில் ஆக. அதுக்குப் பிறகுதான் ஹிசார் போய் உஷாவையும் குழந்தை களையும் கூட்டிக்கிட்டு வந்தேன்.

பெரியவ அபு பத்தாவது முடிச்சிருந்தா. ஃபர்ஸ்ட் கிளாஸ். மெகதிப்பட்டணம் செயின்ட் ஆன் காலேஜ்ல பிளஸ் டூ சேர்த்தோம். சாய்னா நாலாவது. வீட்டுக்கு பக்கமா இருந்த பாரதிய வித்யா பவன் வித்யாஸ்ரம் ஸ்கூல்தான் சரியா இருக்கும்னு முடிவு செஞ்சோம். ஆனா, சீட் கெடைக்கறது அவ்ளோ ஈஸியா இல்ல. பிரின்சிபால் வீட்டுக்கே போய் பார்த்தோம். 

‘ஃபிராக் ரேஸ், நீச்சல்ல பிரைஸ் எல்லாம் வாங்கியிருக்கா... மேத்ஸ் நல்லா போடுவா’ என்று சாய்னா பத்தி பெருமையா சொன்னேன். ‘எங்க ஸ்கூல்ல ஸ்போர்ட்சுக்கு அவ்ளோ இம்ப்பார்ட்டன்ஸ் கொடுக்கறது இல்ல. உங்க குழந்தைய படிப்புல கான்சன்ட்ரேட் பண்ண வைங்கோ’ என்றார்.

அதே பிரின்சிபால், சாய்னா எட்டாவது படிக்கும்போது கொல்கத்தாவில் நடந்த ஸ்கூல் பேட்மின்டன் போட்டில ரெண்டு பதக்கம் வாங்கிய உடன் ஆகா ஓகோவென்று பாராட்டினார். ஸ்கூல் மீட்டிங்ல, 'ஒவ்வொரு ஸ்டூடண்ட்டும் சாய்னாவை முன் மாதிரியா வச்சு செயல்படணும்'னு அவர் பேசியதை கேட்டபோது எங்களுக்கு ரொம்பப் பெருமையா இருந்தது.' 

(காத்திருப்போம்!)


‘‘சாய்னா ரொம்பவும் ஆரோக்கியமான குழந்தையா வளர்ந்தா. ஹரியானாவில் பால், பழம், நெய் அதிகம் சேர்த்துக்குவோம். அதோட, நாலரை வருஷம் வரை தாய்ப்பால் குடிச்சதும் ஒரு காரணம்னு நினைக்கிறேன்!’’

‘‘சின்ன வயசுல நீச்சல், சைக்ளிங் எல்லாம் நல்லா செய்வா. கொஞ்சம் பெரியவளானதும், தினமும் வீட்டுல இருந்து என்னோட ஆபீசுக்கு லஞ்ச் பாக்ஸ் கொண்டு வந்து கொடுப்பா. போக வர நாலு கிலோ மீட்டர். சளைக்காம சைக்கிள் ஓட்டுவா!’’

சங்கர் பார்த்தசாரதி