காய்கறித் தோட்டம்என்னதான் விலை உயர்ந்த கடைகளில் பார்த்துப் பார்த்து காய்கறி வாங்கினாலும் நம் வீட்டுத் தோட்டத்தில் அப்போதே பறித்து, பசுமை வாசனை மாறாமல் சமைக்கிற சுகம் கிடைக்குமா? கிலோ கணக்கில் வாங்கி, ஃப்ரிட்ஜை அடைக்கிற அளவுக்கு காய்கறிகளை நிரப்பி வைக்க வேண்டிய தேவைேயயில்லை. வீட்டில் இருக்கும் இடங்களில் தேவைக்கேற்ப சிறியதாக ஒரு காய்கறித் தோட்டம் அமைத்துப் பராமரித்தால் போதும். ரசாயன உரமோ, செயற்கை பூச்சிக்கொல்லித் தெளிப்போ இல்லாமல் ஆரோக்கியமான முறையில் கீரை முதல் காய்கறிகள் வரைவிளைவித்து நோய்நொடியின்றி வாழலாம்!

காய்கறித் தோட்டம் பற்றி நாம் அதிகம் பேசத் தேவையில்லை. காய்கறித் தோட்டம் அமைக்கிறவர்கள் முதலில்கவனிக்க வேண்டிய விஷயம் இட வசதி. சிலருக்கு தரையில் இடம் இருக்கும். சிலருக்கு மொட்டை மாடியில் இடம் இருக்கலாம். சிலருக்கு பால்கனியில்தான் இடம் இருக்கும். தனி வீடாக இருக்கும் பட்சத்தில், தோட்டத்தின் ஒரு பகுதியை காய்கறித் தோட்டத்துக்காக உபயோகிக்கலாம். அதில் சிறுசிறு பாத்திகளாக அமைத்து கீரை, வெண்டை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, வரப்பு ஓரங்களில் சின்ன வெங்காயம், ஒரு கறிவேப்பிலை, ஒரு முருங்கை மரம், ஒரு எலுமிச்சை கண்டிப்பாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளலாம்.

தவசிக்கீரை என ஒரு கீரை வகை உண்டு. அதை ‘மல்ட்டி வைட்டமின் கீரை’ என்றே சொல்வோம். இதையும் ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றோ, இரண்டோ வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்தக் கீரையில் நான்கைந்தைப் பறித்துக் கழுவி அப்படியே சாப்பிடுவது மல்ட்டி வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதற்குச் சமம். அது சரி... இந்த தவசிக் கீரையை எங்கே வாங்குவது? அக்ரிகல்ச்சுரல் அண்ட் ஹார்ட்டிகல்ச்சுரல் டிபார்ட்மென்ட்டை அணுகி வாங்கலாம்.
காய்கறிச் செடிகளுக்கு நல்ல வெயில் தேவை. வெயில் இருந்தால்தான் பூ கொட்டுவது நிற்கும். காய்ப்பிடிப்பும் நன்றாகஇருக்கும்.

காய்கறித் தோட்டம் அமைக்கிறபோது பூச்சிகள் மற்றும் பூஞ்சான்கள் தாக்குதல் இருக்கும். அதைக் கட்டுப்படுத்துகிற முறைகளை முறையான தோட்டக்கலை
நிபுணரிடம் கேட்டோ, பயிற்சிகளுக்குப் போய் தெரிந்து கொண்டோ செய்வது நல்லது. காய்கறித் தோட்டங்கள் அமைப்பதற்கான புத்தகங்களும் இருக்கின்றன. அவற்றைப் படித்தும் எந்தெந்த பூச்சிகள் தாக்கும்... அவற்றை எப்படிக் கட்டுப்படுத்தலாம் எனத் தெரிந்து கொள்ளலாம்.வீட்டுத் தோட் டம் அமைப்பவர்கள் வெளியில் உள்ள மருந்துகளை வாங்கி அடிக்க வேண்டாம். அதாவது, வேதிப் பொருட்கள் அடங்கிய மருந்துப் பொருட்களைத் தவிர்க்கவும். இயற்கையான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைஉபயோகிக்கலாம். மண்புழு உரம், கெமிக்கல் கலக்காத உரங்கள் தயாரித்து விற்பனை செய்யவென்றே நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை அணுகலாம்.

உங்கள் தோட்டத்திலேயே இட வசதி இருந்தால், உங்கள் வீட்டுக் காய்கறிக் கழிவுகளையே ஒரு கம்போஸ்டு தொட்டியில் போட்டு அடிக்கடி கிளறி விட்டு கொஞ்சம் சாணம், கொஞ்சம் யூரியா எல்லாம் போட்டு மக்க வைத்தால் 50வது நாளில் இருந்து நீங்களே அந்த உரத்தை எடுத்து உங்கள் தோட்டத்துக்கு உபயோகிக்க முடியும். இது நாமாகவே இயற்கையான உரம் தயாரிக்கிற முறை. இதைப் போலவே நாமாகவே இயற்கைப் பூச்சிக் கொல்லிகளையும் தயாரிக்கலாம். அதைப் பற்றி நாம் பின்வரும் அத்தியாயங்களில் விரிவாகப் பேசப் போகிறோம்.

வீட்டைச் சுற்றியுள்ள வேலிகளில் கோவைக்காய் கொடியை ஏற்றி விடலாம். இதை பெரும்பாலும் ‘ஸ்டெம் கட்டிங்’ என்கிற முறையில் மிகச் சுலபமாக வளர்க்கலாம். கோவைக்காயின் கொடியும், காய்களும், சிவந்தபின் பழுத்துத் தொங்கும் பழங்களும் எல்லாமே பார்வைக்கு அத்தனை அழகு. கோவைக்காய்க்கும் பழத்துக்கும் நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன. அதைப் போல பாகற்கொடியையும் வளர்க்கலாம்.அடுத்தது மொட்டை மாடியில் தோட்டம் அமைக்க விரும்புவோருக்கானது. அதிக அளவு வெயில் அடிக்கும் என்கிற மாதிரி இருந்தால், ‘ஷேடு நெட்’ எனப்படுகிற வலையை உபயோகித்து தோட்டம் அமைக்கலாம். அப்படியில்லாமல் தண்ணீர் டேங்க் இருக்கிறது, அதன் நிழல் வெயிலை ஓரளவு மறைத்து விடும் என்கிறவர்களுக்கு இந்த வலை தேவையில்லை. மாடித் தோட்டம் அமைக்கும் போது 2 விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பூக்களுக்கான மாடித் தோட்டமோ... காய்கறிகளுக்கான மாடித் தோட்டமோ... எதுவானாலும் சரி. சில விஷயங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேல்தளம் உறுதியாக இருக்கிறதா, கசிவுகள் ஏதும் இல்லாமல் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அதற்காக மாடியின் தளத்தில் வாட்டர் ப்ரூஃபிங் செய்வார்கள். அதற்கென உள்ள நிபுணரைக் கலந்தாலோசித்து, முதலில் மொட்டை மாடியைத் தயார்படுத்த வேண்டும். இன்னொரு முறையும் உண்டு. ஜியோ டெக்ஸ்டைல் ஷீட் மற்றும் வெர்ட்டிசெல் (Geotextile sheet and verticell) என்கிற இது கொஞ்சம் காஸ்ட்லியானதுதான் என்றாலும், உங்கள் மேல் தளத்துக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

இது எதற்குமே எங்களுக்கு வசதிப்படாது என நினைத்தீர்களானால், குறைந்தது ஒரு தார்பாலின் ஷீட்டையாவது விரித்து அதற்கு மேல் மணல் போட்டோ, தொட்டிகள் வைத்தோ தோட்டம் அமைக்க வேண்டும். எனக்கு தார்பாலின் ஷட்டுக்கும் செலவு பண்ண முடியாது என யோசித்தீர்களானால் செடிகளுக்கு நீங்கள் தண்ணீர் விடும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். செடிகளின் கீழ் லேயர் வரை தண்ணீர் போகாமல் கவனமாக ஊற்ற வேண்டும்.

அடுத்து மாடித் தோட்டங்களுக்கு எடை குறைவான ‘வெயிட்லெஸ் சாயில்’ உபயோகிப்பது சிறந்தது. வெயிட்லெஸ் சாயில் கலவைபற்றியும் அடுத்தடுத்த இதழ்களில் விரிவாகப் பேசப் போகிறோம். இந்த எடைக் குறைவான மணல் கலவையுடன், பயோ ஃபெர்ட்டிலைஸர்ஸ் எனப்படுகிற நுண்ணுயிர்களையும் கலந்து உபயோகிக்கலாம். சிமென்ட் தொட்டியோ, பிளாஸ்டிக் தொட்டியோ... எதில் செடிகளை வைப்பதானாலும், மணல் எடை குறைவாக இருக்க வேண்டும். நீங்கள் ட்ரிப் கூட போடலாம். இப்போது வீடுகளுக்கு உபயோகிக்கும் மினி ட்ரிப் கிட் கிடைக்கிறது. அதைக்கூடஉபயோகிக்கலாம்.

மூன்றாவதாக பால்கனி தோட்டம். பால்கனி என்று எடுத்துக் கொண்டால் 5 தொட்டிகள்... மிக அவசியமான காய்கறிகள் அல்லது கீரைகள் போடலாம். காலையில் எழுந்ததும் அவசரத் தேவைக்கு சில காய்கறிகள் தேவைப்படும். கடைக்கு ஓட வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு பச்சை மிளகாய், தக்காளி, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை என இந்த ஐந்து செடிகளை வைத்தால்கூடப் போதுமானது. பால்கனி தரை வீணாகாமல் இருக்க ஜியோ டெக்ஸ்டைல் ஷீட் அல்லது தார்பாலின் ஷீட் உபயோகிக்கலாம். அல்லது தொட்டிகளுக்கு அடியில் தட்டுகள் வைத்து, அதிகப்படியான தண்ணீர் அதில் வடிகிற மாதிரிச் செய்யலாம்.

வீட்டுத் தோட்டம் என்கிற கான்செப்ட் இப்போது பிரபலமாகி வருகிறது. எல்லோருக்கும் அதைப் பற்றிய விழிப்புணர்வு வந்திருக்கிறது. எல்லோருக்குமே ஆரோக்கியமான வாழ்க்கையின் மீதான அக்கறை அதிகரித்திருக்கிறது. வீட்டிலேயே தோட்டம் அமைக்கிற போது ஆபத்தான பூச்சிக்கொல்லிகளின் பாதிப்புகள் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் காய்கறி, கீரைகளை விளைவித்து உட்கொள்ளலாம். 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு வீட்டுத்தோட்டத்தின் மூலம் போதுமான அளவு காய்கறிகளைப் பெற முடியும். அதற்காக உடனே நான் உருளைக்கிழங்கை விளைவிக்கப் போகிறேன் எனப் பரிசோதனை முயற்சியில் இறங்க வேண்டாம். அது பெங்களூருவில் உள்ளவர்கள் செய்யலாம். அவர்களுக்கு கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் விதைக்கலாம். நாமும் காலிஃப்ளவர், முட்டைகோஸ், முள்ளங்கி போன்றவற்றை அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான சீசனில் விதைத்துப் பார்க்கலாம். மற்ற நேரங்களில் நம்முடைய சீதோஷ்ண நிலையில் வளரக்கூடிய செடிகளையே வளர்க்க வேண்டும்.

சுலபமாக விதைத்து எளிதாக பலன் காணக்கூடிய செடிகளான புதினா, தண்டுக்கீரை, கொத்தமல்லி போன்றவற்றை வைத்தாலே போதும். கீரை வகைகளுக்கு வெயில் அதிகம் தேவையில்லை. பால்கனியில் வெயிலே விழுவதில்லை என நினைத்தால், தாராளமாக கீரை விதையுங்கள். வீட்டுத்தோட்டத்தைப் பொறுத்தவரை ஆரம்ப செலவு மட்டும் கொஞ்சம் அதிகமிருக்கும். அதைத் தவிர்த்து தினசரி அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை தோட்டத்துக்கு செலவழித்தால் உங்கள் வீட்டுக் காய்கறிச் செலவை பெருமளவில் மிச்சப்படுத்தலாம். பொழுதைப் போக்க தேவையில்லாமல் தூங்குவது, அக்கம்பக்கத்து வீட்டாருடன் வம்புப் பேச்சில் ஈடுபட்டு வில்லங்கத்தை ஏற்படுத்திக் கொள்வது போன்றவற்றுக்குப் பதிலாக தோட்டக் கலையில் நேரத்தை செலவிடுங்கள். அது உங்கள் மனம், உடல், பணம் என எல்லாவற்றுக்கும் பாதுகாப்பளிப்பதை  அனுபவத்தில் உணர்வீர்கள்!

4 பேர் கொண்ட குடும்பத்துக்கு வீட்டுத்தோட்டத்தின் மூலம் போதுமான அளவு காய்கறிகளைப் பெற முடியும்.  தினசரி அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை தோட்டத்துக்கு செலவழித்தால்  உங்கள் வீட்டுக் காய்கறிச் செலவை பெருமளவில் மிச்சப்படுத்தலாம்.

தவசிக்கீரையை ‘மல்ட்டி வைட்டமின் கீரை’ என்றே  சொல்வோம். இந்தக் கீரையில் நான்கைந்தைப் பறித்துக் கழுவி அப்படியே சாப்பிடுவது மல்ட்டி வைட்டமின்
மாத்திரைகள் எடுத்துக் கொள்வதற்குச் சமம்.

எழுத்து வடிவம்: மனஸ்வினி

படம்: ஆர்.கோபால்