முத்துகள் மூன்று!



டாலர் தேசத்தில்டாப் சம்பளம்!

சுய தொழில் தொடங்கி, அதிர்ஷ்டமும் திறமையும் கை கொடுக்க கோடி கோடியாக சம்பாதிப்பவர்கள் ஒரு ரகம்! ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து கைநிறைய சம்பாதிப்பவர்கள் இன்னொரு ரகம்.  இரண்டாவது பிரிவில் அதிகம் பொருளீட்ட முடியாது என்பது பலரின் அபிப்ராயம். அதை உடைத்துக் காட்டியிருக்கிறார்கள் மூன்று பெண்கள். மூவரும் மூன்று நிறுவனங்களில் முக்கிய நிர்வாகிகள். அமெரிக்காவில் அதிகம் சம்பாதிக்கும் அவர்களைக் குறித்த தகவல்கள் இங்கே…

ஏஞ்சலா ஏஹ்ரெண்ட்ஸ் (Angela Ahrendts)

54 வயது… ஆப்பிள் நிறுவனத்தின் சில்லறை மற்றும் ஆன்லைனில் விற்பனைப் பிரிவுக்கு சீனியர் வைஸ் பிரசிடென்ட். 2006லிருந்து 2014 வரை பிரிட்டிஷ் கம்பெனியான பர்பெரியில் வேலை. நியூயார்க் நகரத்தில் ஃபேஷன் இண்டஸ்ட்ரியில் வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு பல நிறுவனங்களில் பணி. 2006ல் பர்பெரியில் தலைமை நிர்வாக அதிகாரியாக உயர அவருடைய  பிசினஸ்  பணி அனுபவங்கள் கைகொடுத்தன. 2014ல் ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்தார். அந்த வருடமே அவருக்கான முக்கியத்துவம் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையின் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் அவருக்கு 49வது இடம். ‘ஃபார்ச்சூன்’ பத்திரிகையின் பிசினஸில் உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 29வது இடம். 2014ல் அமெரிக் காவிலேயே அதிக சம்பளம் வாங்கும் முதல் பெண் நிர்வாகி என்கிற பெருமைக்கு சொந்தக்காரர். அவருடைய கடந்த வருட சம்பளம் 82.6 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 524 கோடி!

சஃப்ரா கேட்ஸ்(Safra Catz)

53 வயது… அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் பெண் நிர்வாகிகள் பட்டியலில் 2ம் இடம். 1986ல் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற கையோடு, ‘டொனால்ட்சன், லஃப்கின் & ஜென்ரெட்’ நிறுவனத்தில் பேங்கராக வாழ்க்கையைத் தொடங்கியவர். பிறகு பல நிறுவனங்களில் பணி. 1999ல் ‘ஆரக்கிள் கார்பரேஷன்’ நிறுவனத்தில் சேர்ந்தார். 2001ல் அந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரானார். 2005லிருந்து 2008 வரை சீஃப் ஃபைனான்சியல் ஆபீசரானார். இப்போதும் அந்தப் பதவியை தக்க வைத்துக் கொண்டே ஆரக்கிள் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.

2009ல் ‘ஃபார்ச்சூன்’ பத்திரிகையின் உலகின் சக்தி வாய்ந்த பிசினஸ் பெண்கள் பட்டியலில் 12வது இடத்தைப் பிடித்தார். அதே ஆண்டு, ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையின் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் அவருக்கு 16வது இடம். கடந்த ஆண்டு கேட்ஸ் சம்பளமாகப் பெற்ற தொகை 71.2 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பு சுமார் 453 கோடி.

மாரிஸா மேயர்

39 வயது… இப்போது ‘யாஹூ’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி. அமெரிக்காவில் அதிகம் சம்பளம் வாங்கும் பெண்கள் பட்டியலில் 3வது இடம். 1999ல் ஸ்டேண்ட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தபோது அவருக்காகக் காத்திருந்த வேலைகள் 14. ‘கூகிள்’ நிறுவனத்தில் முதல் பெண் இன்ஜினியராக சேர்ந்தார். 2012 ஜூலையில் ‘யாஹூ’ நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆனார். 2014ல் அவர் பெற்ற சம்பளத் தொகை 59.1 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் 377 கோடி.

தொகுப்பு: பாலு சத்யா