வாட் ஏ கேம்!



நந்தினி விஜயகுமார்

ஒற்றைக் குழந்தையாகப் பிறந்தாலும் சரி...ஓடியாடி விளையாட இடமில்லாவிட்டாலும் சரி...இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு தனிமை ஒரு பிரச்னையாகவே இருப்பதில்லை. அவர்களது கற்பனை உலகத்தின் மனிதர்கள் யதார்த்த மனிதர்களைவிட சுவாரஸ்ய மானவர்கள்... சாகசமானவர்கள்...யெஸ்...  குழந்தைகள்  முதல்  பெரியவர்கள்  வரை எல்லா  வயதினரையும்  தனிமையிலிருந்து மீட்கின்றன மொபைல் மற்றும் வீடியோ கேம்ஸ். 'ஓ காதல் கண்மணி’ படத்தின் ஹீரோ துல்கர் சல்மான், கதைப்படி அந்தப் படத்தில் கேம் டெவலப்பர். இளைய தலைமுறையினரின் விருப்பப் பட்டியலில் இன்ஜினியரிங்கை கொஞ்சம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முன்னேறிக் கொண்டிருக்கிறது கேம் டெவலப்பிங் மற்றும் அனிமேஷன் துறை!

குளோபல் இன்ஸ்டிடியூட் ஆஃப் கேமிங் அண்ட் அனிமேஷன்’ என்கிற பெயரில் இந்தியாவின் ஒரே கேமிங் டிசைன் கல்லூரியை நடத்துகிறார் நந்தினி விஜயகுமார். கேமிங் மற்றும் அனிமேஷன் துறையின் எதிர்காலம், இந்தத் துறைகளில் இளைய தலைமுறையினருக்குக் காத்திருக்கிற வேலை வாய்ப்புகள் பற்றியெல்லாம் பேசுகிறார் நந்தினி.

மீடியா துறையிலதான் என் கேரியர் ஆரம்பமானது. சின்ன வயசுலேருந்தே எனக்குள்ள கார்ட்டூன் படங்களும் அனிமேஷன் களும் பெரிய பிரமிப்பை ஏற்படுத்தி யிருந்தது. ஒரு கார் பிரமாண்டமா எழுந்து நிற்கறதையும் டான்ஸ் ஆடறதையும் பார்த்து என் மனசுக்குள்ள குழந்தைக்கான குதூகலம் ஏற்பட்டிருக்கு. வெறுமனே ரசிக்கிறதோட நிற்காம, அதையெல்லாம் எப்படி உருவாக்கிறாங்கன்ற தேடலும் ஆரம்பமாச்சு. எதேச்சையா இப்படியொரு பிரத்யேக காலேஜை ஆரம்பிக்கிற வாய்ப்பு தேடி வந்தது. 2010ல ‘குளோபல் இன்ஸ்டிடியூட் ஆஃப் கேமிங் அண்ட் அனிமேஷன்’ காலேஜை ஆரம்பிச்சேன். இது பாரதியார் யுனிவர்சிட்டியோட இணைக்கப்பட்டிருக்கு.

இந்தக் காலத்துக் குழந்தைங்களுக்கு பக்கம் பக்கமா பாடங்களை மனப்பாடம் பண்றதோ, 24 மணி நேரமும் புத்தகமும் கையுமா இருக்கிறதோ சரியா வர்றதில்லை. ரொம்ப சின்ன வயசுலயே அவங்களோட கிரியேட்டிவிட்டி நம்மை பிரமிக்க வைக்குது. புத்தகங்களை மனப்பாடம் பண்ணிப் புரிஞ்சுக்க முடியாத ஒரு விஷயத்தை, கார்ட்டூன் மூலமாகவும் அனிமேஷன் மூலமாகவும் ரொம்ப சுலபமா புரிஞ்சுக்கிறாங்க. அதோடு, இன்னிக்கு 2டி, 3டி தொழில்நுட்பம் இல்லாத துறைகளே இல்லை. 3டி டெக்னாலஜியை வச்சு சர்ஜரி பண்றாங்க. ஒரு கட்டிடம் கட்டறதுக்கு முன்னாடி அதோட முழுத் தோற்றத்தையும் 3டி டெக்னாலஜியில முன்கூட்டியே பார்த்துட்டு டெவலப் பண்ண முடியுது. எத்தனை டிகிரி கோணத்துல உடம்பை வளைச்சா, உடம்போட எந்தத் தசைக்கு வேலை கொடுக்க முடியும்கிறதை 3டி டெக்னாலஜி  உள்ள  ஃபிட்னஸ் மெஷின்கள்ல பார்த்துத் தெரிஞ்சுக்க முடியுது.

சினிமா, டி.வி. துறைகளைப் பத்தி சொல்லவே வேண்டாம். 3டி டெக்னாலஜி தவிர்க்க முடியாத ஒரு அம்சமாயிடுச்சு. இத்தனை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிற இந்தத் துறையைப் பத்தி போதுமான விழிப்புணர்வு இல்லாததுதான் குறை. ‘அனிமேஷனா... அதெல்லாம் பெரிய இடத்துப் பிள்ளைங்க படிக்கிறது’ங்கிற மனப்பான்மை நிறைய பேருக்கு இருக்கு. ஆனா, இந்த காலேஜ்ல பத்தாவது பாஸ் பண்ணினவங்ககூட அனிமேஷன்ல டிப்ளமோ படிக்கலாம். கேம் டெவலப்பிங் கத்துக்கிட்டு வெளிநாடுகளுக்குக்கூட வேலைக்குப் போகலாம்...’’ என்கிற நந்தினி, கல்லூரியின் தொடக்க காலத்தில் அனிமேஷன் பற்றியும் கேம் டிசைன் பற்றியும் மாணவர்களுக்குப் புரிய வைக்க ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார்.

வீடியோ கேம் டிசைன் பண்ணவும் கார்ட்டூன் கேரக்டர்களை உருவாக்கவும் ஒரு படிப்பானு கேட்டவங்க நிறைய பேர். இதையெல்லாம் படிச்சா வேலை கிடைக்குமா? சம்பாதிக்க முடியுமா? எதிர்காலம் இருக்குமாங்கிற கேள்விகள் பலருக்கும் இருந்தது. இந்தத் துறைகள்ல ஏற்கனவே சாதிச்சு பெரிய இடங்களுக்குப் போனவங்களை உதாரணம் காட்டினேன். பயிற்சியில என்ன கத்துக் கொடுக்கிறாங்கனு ேநர்ல வந்து பார்க்கச் சொன்னேன். பத்து பெரிய நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள்தான் இங்கே வகுப்புகள் எடுக்கிறாங்க. அவங்களோட அணுகு முறையும், பாடங்கள் ஏற்படுத்தற சுவாரஸ் யமும் மெல்ல மெல்ல மாணவர்களுக்குப் புரிய ஆரம்பிச்சது. இந்தத் துறைகளுக்கான ஆர்வமும் அதிகமாயிருக்கு. சமீபத்துல வெளிவந்த நிறைய படங்கள்ல மக்களால ரசிக்கப்பட்ட அனிமேஷன் காட்சிகளும் இந்தப் படிப்புகளைத் திரும்பிப் பார்க்க வச்சிருக்கு.... தேங்க்ஸ் டு தமிழ் சினிமா...’’ என்கிற நந்தினி கடைசியாகச் சொல்கிற தகவல் பெண்களுக்கானது... பெற்றோருக்கானது.

மொபைல் கேமாகட்டும், வீடியோ கேமாகட்டும்...   பலதும் ரொம்ப  ஆக்ரோ ஷமா இருக்கு... வன்முறை அதிகமா இருக்கு... ரத்தம், வெட்டு, குத்துனு பிள்ளைங்களோட மனநிலையைக் கெடுக்குதுனு பரவலா ஒரு பேச்சு இருக்கு. அதை மறுக்கறதுக்கில்லை. இந்த ட்ரெண்டை மாத்தணும்னா கேம் டிசைன் மற்றும் டெவலப்மென்ட் படிப்புகளுக்கு பெண்கள் நிறைய பேர் வரணும்.  அவங்களோட பார்வை வேற மாதிரி இருக்கும். அவங்க டிசைன் பண்ற கேம்ஸ்ல வன்முறை இருக்காது. கிரியேட்டிவிட்டி அதிகமா இருக்கும். ஆரோக்கியமான விளையாட்டுகள் மூலமா அதை விளையாடற வங்களோட மனநிலையையும் ஆரோக்கியமா மாத்தலாம்!’’

குழந்தைகள் புத்தகங்களை மனப்பாடம் பண்ணிப்  புரிஞ்சுக்க முடியாத ஒரு விஷயத்தை, கார்ட்டூன் மூலமாகவும் அனிமேஷன்  மூலமாகவும் ரொம்ப சுலபமா புரிஞ்சுக்கிறாங்க.

பெண்கள் டிசைன் பண்ற கேம்ஸ்ல வன்முறை இருக்காது. கிரியேட்டிவிட்டி அதிகமா  இருக்கும். ஆரோக்கியமான விளையாட்டுகள் மூலமா அதை விளையாடறவங்களோட  மனநிலையையும் ஆரோக்கியமா மாத்தலாம்!