அயல்நாட்டு அம்மாக்கள்



அன்புக்கு அன்பளிப்பு!

‘‘தினமும் குடும்பத்துக்கு, நண்பர்களுக்கு, பக்கத்து வீட்டுக்காரருக்கு, ஒரு குழந்தைக்கு, அறிமுகமில்லாத ஒருவருக்கு, ஒரு பிராணிக்கு உங்களால் முடிந்த ஓர் உதவியை செய்ய முயற்சி செய்யுங்கள்... என்றும் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்’’ -  இது ஒரு தாயின் கருத்து. இதை தன் இரு குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்ததோடு, வாழ்ந்தும் காட்டியவர் அவர். அந்த நல்லெண்ணத்துக்கு வெகுமதியாக ஆஸ்திரேலியாவின் ‘மதர் ஆஃப் தி இயர் அவார்டு’ கிடைத்திருக்கிறது. அவர் பெயர் ஆன் கால்டுவெல்... 63 வயது. கணவனைப் பிரிந்து, தனியாக வாழ்ந்தாலும், கஷ்டத்திலும் தன் இரு குழந்தைகளையும் நன்கு வளர்த்தார். ‘ஹோம்
ஸ்கூலிங்’ முறையில் படிக்க வைத்தார்.

இப்போது இரு குழந்தைகளும் தலா 2 பட்டங்களைப் பெற்ற பட்டதாரிகள். வருடாவருடம் வழங்கப்படும் ‘மதர் ஆஃப் தி இயர்’ விருதுக்கு அம்மாவின் பெயரை மகள் டாமி பரிந்துரைத்து விண்ணப்பம் செய்ய, ஆன் விருது பெற்றிருக்கிறார். ‘எனக்கு குழந்தைகளுக்கான உரிமைகள் மீது ஈர்ப்பு உண்டு... அதற்கான பலன் கிடைத்திருக்கிறது’ என்கிறார் ஆன்.

அணைக்கிற கைதான் அடிக்கும்!

‘என்ன செய்ய வேண்டுமோ அதை மிகச் சரியாக செய்தார் அந்தத் தாய்!’ ‘அந்த அம்மா ஒண்ணும் ஹீரோ இல்லை. 16 வயசுப் பையனை இப்படி பொது இடத்துல அடிக்கலாமா?’ என சாதக பாதக விமர்சனங்கள் எழுந்தபடி இருக்கின்றன ஒரு தாயின் மீது. அமெரிக்காவைச் சேர்ந்த டோயா கிரஹாம் செய்ததெல்லாம் இதுதான்… கலவரத்தில் ஈடுபட்ட தன் மகனை அடித்து, உதைத்து வீட்டுக்கு அழைத்துப் போனார். இந்த நிகழ்வு தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

ஏப்ரல் 19. அமெரிக்கா, பால்டிமோர் நகரில் கறுப்பினத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் போலீஸ் காவலில் இருந்த போது இறந்து போனார். அதைத் தொடர்ந்து அமைதி ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடந்தன. சிலர் வன்முறையிலும் ஈடுபட்டார்கள். அப்படி ஏப்ரல் 27 அன்று  நடந்த ஒரு வன்முறையின் போதுதான், தன் மகனை அடித்து, உதைத்து வீட்டுக்கு அழைத்துப் போனார் அந்தத் தாய்.  வேறு எதையும்விட தன் மகனின் உயிர் பெரிது என்பதும் ஒரு காரணம். நம் அம்மாக்கள் ‘டேய் கண்டவனோட ஊரு சுத்திட்டு வந்தே… சண்டை பிடிச்சுகிட்டு வந்தே… பிச்சுப்புடுவேன். ராத்திரிக்கு சாப்பாடு கிடையாது’ என்கிற நம் அம்மாக்களின் குரல்தான் டோயா கிரஹாமிடமும் கேட்கிறது!

அமிர்தம் புகட்ட ஆர்ப்பாட்டம்!

‘குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும். அதன் பிறகு 2 வயது வரை மற்ற உணவுகளோடு கொடுக்க வேண்டும்’ என்று பரிந்துரைக்கிறது உலக சுகாதார அமைப்பு. ஆனால், பல நாடுகளில் பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பதே கூட தடை செய்யப்பட்டிருக்கிறது. அந்தச் செயலில் ஈடுபடும் தாய்மார்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். சீனாவில் தாய்ப்பால் கொடுக்கும் உரிமையை வலியுறுத்தி ஒரு புதுமையான போராட்டத்தில் ஈடுபட்டார்கள் சிலர். ‘ஸ்டார் ஃபெர்ரி’ என்ற இடத்தில் 100 பேர் கூடினார்கள். அவர்களில் 50 பேர், குழந்தைகளுக்கு பொது இடத்தில் தாய்ப்பால் கொடுத்து உரிமைக்கு குரல் கொடுத்திருக்கிறார்கள். இது எப்படி இருக்கு?