தக தக தங்கம்!



மஞ்சள் உலோக மோகம்!

இந்த பூமியில் எத்தனை எத்தனையோ உலோகங்கள் இருக்கின்றன. தங்கத்தை விடவும் விலை உயர்ந்த உலோகங்களும் உள்ளன. ஆனாலும், இந்த மஞ்சள் உலோகத்தின் மீதான மக்களின் மோகம் அலாதியானது. காரணம், அதன் பயன்பாடு.தங்கம் என்றால் ஆபரணங்கள் செய்ய மட்டுமே என நினைத்துக் கொண்டிருக்கிற பலருக்கும், அதன் பல்வேறு பயன்பாடுகள் பற்றித் தெரிந்தால் வியப்பில் விழிகள் விரியும்!

தங்கம் மின்சாரத்தைக் கடத்தக்கூடியது. களங்கமற்றது. சொன்னபடியெல்லாம் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது. எல்லா உலோகங்களுடனும் இணையக்
கூடியது.

▶வரலாற்றைப் படித்துப் பார்த்தால், பிரபலமான அனேக கலாசாரங்களிலும் தங்கம் என்பதை அழகின், சுத்தத்தின், ஆளுமையின், ஆற்றலின் அடையாளமாகக் கொண்டாடிய தகவல் வியக்க வைக்கிறது. இன்றும் நாம் தங்கத்தைத் தலையில் வைத்தே கொண்டாடுகிறோம். திருமணத்துக்கான மோதிரம், தாலி, ஒலிம்பிக் மெடல் தொடங்கி, ஆஸ்கார், கிராமி விருதுகள் வரை அனைத்திலும் தங்கத்தை வைத்தே கவுரவிக்கிறோம்.

▶தங்கப் பயன்பாடுகளில் நகைத் தயாரிப் புகளுக்கே முதலிடம். ஆண்டுதோறும் எடுக்கப்படுகிற தங்கத்தில் சுமார் 78 சதவிகிதம் ஆபரணத்தயாரிப்பிலேயே பயன்
படுத்தப்படுகிறது.

▶கி.மு.1894ல் ஒரு சமஸ்கிருதப் புத்தகத்தில் தங்கத்தைக் கல்லில் இழைத்து, நீருடன் கலந்து, பேஸ்ட்டாக செய்து மருத்துவத்துக்குப் பயன்படுத்திய குறிப்பு உள்ளது. பண்டைய காலத்தில் இந்தியாவிலும் எகிப்திலும் தங்கத்தை மருத்துவத் தயாரிப்புக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தங்கம் மருத்துவ சிகிச்சைகளுக்காக சீனாவில் பயன்படுத்தப்பட்ட தகவல் இருக்கிறது. தங்கத்தையும் முத்தையும் சாப்பிடுகிறவர்கள் அழிவே இல்லாதவர்கள் என எழுதப்பட்ட தகவல்கள் மேற்கத்திய வம்ச நூல் குறிப்புகளில் காணப்படுகின்றன.

▶கி.மு 281 - 341ல் கிழக்கு வம்சத்தில் ஜி ஹாங்க் என்பவர் தங்கம் நமது உடலில் ஒரு சத்தையும் திடத்தையும் கொடுக்கிறது என்று நம்பி, அதற்கேற்ப மருத்துவத்தில் தங்கத்தைப் பயன்படுத்தி நிறைய உத்திகளைப் புகுத்தியுள்ளார்.தங்கத்தை மெல்லிய தகடுகளாக, அதாவது, ஃபாயில்களாக்கி அதை டீயில் கலந்து குடிப்பது ஜப்பானியர்களின் வழக்கம். அதே போல உணவின் மீது மெல்லிய தங்க ஃபாயிலை போர்த்தி வைத்து அதை எடுத்து உண்பார்கள்.

▶சீனர்கள் எப்படித் தெரியுமா? சாதம் வடிக்கும் போதும் உணவுகளை வேக வைக்கும் போதும் ஒரு தங்க நாணயத்தைச் சேர்த்துச்  சமைப்பார்களாம். 24 கேரட்   தூய தங்கத்தை அப்படி உணவுடன் சேர்க்கும் போது, அது உடலுக்குள் சேர்ந்து நன்மை செய்யும் என்பது அவர்களது நம்பிக்கை.

▶இந்தியர்கள் இவர்களுக்கெல்லாம் மேல் எப்படி யோசித்தார்கள் தெரியுமா? வெள்ளித்தட்டின் நடுவில் ஒரு தங்கக் காசைப் பற்ற வைத்து, அந்தத் தட்டில் உண வருந்தும் பழக்கம் அன்று முதல் இன்று வரை நம் மக்களிடம் இருந்து வருகிறது.

▶19வது நூற்றாண்டில் ‘கொலாய்டல் கோல்டு' எனப்பட்ட ஒரு கலவை, குடிப்பழக்கத்தை மறக்கப் பயன்படுத்தப்பட்டது. 1930ல் டாக்டர் எட்வர்ட் என்பவர், எந்த சிகிச்சையிலும் குணமாகாமல் கைவிடப்பட்ட புற்றுநோயாளிகளின் வலியைக் குறைக்க இந்த கொலாய்டல் கோல்டை பயன்படுத்தினார். அறுவை சிகிச்சைகளிலும் தங்கத்தின் பயன் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. 1930களில் அறுவை சிகிச்சை நிபுணர்கள், மூட்டு வீக்கத்துக்கும் வலிக்கும் அந்தப் பகுதி சருமத்தின் அடியில் தங்கத் தகட்டைப் பொருத்தி, அதன் மூலம் வலியையும் வீக்கத்தையும் குறைத்த வரலாறும் இருக்கிறது. இன்றும் தங்கம், ஆர்த்ரைட்டிஸ் எனப்படுகிற மூட்டு வலிக்கு சோடியம் ஆரோதியாமலேட் (Sodium aurothiomalate) அல்லது ஆரோ தியோகுளுக்கோஸ் (Aurothioglucose) என்கிற தங்க உப்புகளை ஊசி மூலம் மூட்டுகளில் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிப்பது நடைபெறுகிறது.

இந்தப் பழக்கம் கி.பி. 700ல் இருந்தே தொடர்கிறது. அது போல அல்ட்ரா சவுண்ட், எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேனால் கண்டுபிடிக்க முடியாத 5 மி.மீ.க்கு கீழ் உள்ள கட்டிகளை கோல்ட் நானோ பார்ட்டிகிள்ஸ் கண்டுபிடித்து விடுமாம். எக்ஸ் ஸ்கேட்டர் இமேஜிங் மூலமாக இது அறியப்படுகிறது. இன்னர் இயர் இம்பிளான்ட்ஸ், ஸ்டன்ட்ஸ், ஒயர்ஸ் ஆஃப் பேஸ் மேக்கர்ஸ் எல்லாம் செய்வதற்கு தங்கம் முக்கிய மூலப் பொருளாக இருக்கிறது. 4,500 வருடங்களுக்கு முன்பாகவே எகிப்திய மக்கள் 13 டன் தங்கத்தை பல்லுக்கான கிரவுன், பிரிட்ஜஸ், பிரேசஸ், இன்லேஸ், பள்ளங்களை அடைக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

▶கண் இமைகளை மூட முடியாத ஒரு நிலை உண்டு. அதற்குப் பெயர் Lagophthalmos. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்ணின் மேல் இமைகளுக்கு அடியில் சிறிய அளவுக்குத் தங்கத்தை இம்பிளான்ட் செய்து சிகிச்சை அளிப்பது இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இமைகள் மூடாமலேயே இருப்பது ஆபத்து. எனவே, தங்கத்தை கண் இமைப் பகுதியில் இம்பிளான்ட் செய்து இப்பிரச்னையை சரி செய்கிறார்கள். தங்கத்தின் கனம் காரணமாக இமைகள் மூடிக் கொள்ளுமாம்.

▶எலெக்ட்ரானிக் தயாரிப்புத் துறையிலும் தங்கத்தின் உபயோகம் குறிப்பிடத்தக்கது. செல்போன், கால்குலேட்டர், பர்சனல் டிஜிட்டல் அசிஸ்ட்டென்ட் என அதிநவீன எலெக்ட்ரானிக் சாதனங்களிலும் தொலைக்காட்சிப் பெட்டித் தயாரிப்பிலும் கூட மிகச் சிறிய அளவு தங்கம் பயன்படுத்தப்படுகிறது.

▶கம்ப்யூட்டர் தயாரிப்பிலும் தங்கத்துக்கு இடமுண்டு. கம்ப்யூட்டரின் மதர்போர்டில் உள்ள  மைக்ரோபிராசரையும் மெமரி சிப்பையும் இணைக்கப் பயன்படும் எட்ஜ்
கனெக்டர்,  கேபிள்களை இணைக்கப் பயன்படும் பிளக் அண்ட் சாக்கெட் கனெக்டர் என எல்லாவற்றிலும் தங்கம் உண்டு.

▶விண்வெளி இயக்கத்திலும் தங்கத்தின் பயன்பாடு மிக முக்கியமானதாகவே இருக்கிறது. விண்வெளிப் பயணத்தில் தங்கம் தவிர்க்க முடியாத ஒரு உலோகமாகக் கருதப்படுகிறது. யு.எஸ்.கொலம்பியா விண் கலத்தில் 40.8 கிலோ கிராமுக்கும் மேலான தங்கம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தங்கம் இல்லாவிட்டால் மனிதரால் நிலவில் கால் பதித்திருக்க முடியாது என்கிறது அறிவியல். 0.15 மி.மீ. கனமுள்ள தங்கத் தகடுகளை சூரியனின் வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் கதிர்வீச்சுக் கவசமாக நாஸா பயன்படுத்துகிறது.

தங்கத்தையே சாப்பிடுகிறார்கள்!

தங்கத் தட்டில் சாப்பிடுகிறவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். தங்கத்தையே சாப்பிடுவது பற்றித் தெரியுமா?ஆசிய நாடுகள் சிலவற்றில் தங்கத்தை காபி, டீ, ஜெல்லி உள்ளிட்ட சில உணவுப் பொருட்களில் கலந்து உபயோகிக்கும் பழக்கம் உண்டு. மது பானங்களில் தங்கத்தைக் கலந்து பருகும் பழக்கம் ஐரோப்பியர்களிடம் இருந்திருக்கிறது. என்னது? தங்கத்தை சாப்பிடறதாவது என்கிறீர்களா?தங்கத்தை உண்பதால் எந்த வித ஒவ்வாமையும் ஏற்படுவதில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிக விலை உயர்ந்த உணவுப் பொருட்களை தங்கத்தால் அலங்கரிப்பது அனுமதிக்கப்படுகிறது. அதை பவுடராகவோ, பொடித்த இலைகளாகவோ, துகள்களாகவோ பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் மட்டுமே 12 டன் தங்கம், இப்படி உணவு அலங்காரத்துக்குப் பயன்படுத்தப் படுகிறது.சீனர்களுக்கு தங்கள் பாரம்பரிய கறி உணவுகளில் தங்கத் தூள் தூவிப் பரிமாறும் வழக்கமும் ஜப்பானியர்களுக்கு புத்தாண்டு அன்று தங்கம் கலந்த மதுவைப் பரிமாறிக் கொள்ளும் வழக்கமும் உண்டு.பிரான்ஸ் மற்றும் ஸ்விட்சர்லாந்தில்  தங்கத்தால் சாக்லெட்டை அலங்கரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பிரபல சாக்லெட் தயாரிப்பாளர்கள் பலர் உள்ளனர்!

தங்கம் இல்லாவிட்டால் மனிதரால் நிலவில் கால் பதித்திருக்க முடியாது!

ஆண்டுதோறும் எடுக்கப்படுகிற தங்கத்தில் சுமார் 78 சதவிகிதம் ஆபரணத் தயாரிப்பிலேயே பயன்படுத்தப்படுகிறது.


(தங்கத் தகவல்கள் தருவோம்!)

எழுத்து வடிவம்: எம்.ராஜலட்சுமி