காற்றில் நடனமாடும் பூக்கள்மறக்க முடியாத முகங்களும் குரல்களும்

அன்றாடம் நூற்றுக்கணக்கான முகங்களை வெறும் முகங்களாக மட்டும் நாம் கடந்து செல்கிறோம். எதிர்படுவோர்க்கு நமது முகமும் அப்படித்தான் என்றபோதிலும், எங்கோ எப்போதோ எதிர்பாராத விதமாக நாம் பார்க்க நேர்ந்த சில முகங்களையும் கேட்க நேர்ந்த சில குரல்களையும் நமது மனக்குதிர் விதை நெல்லாக பக்குவப்படுத்தியும் பத்திரப்படுத்தியும் வைத்துக்கொள்கிறது. வாழ்வின் எல்லாக் காலங்களிலும் இந்த முகங்களும் குரல்களும் நம்கூடவே தங்கிவிடுவதை வாழ்வின் மகத்தான வியக்கத்தக்க அற்புதங்களில் ஒன்றாகவே கருதுகிறேன் நான்.

வீடு மாற்றும் சூழ்நிலையால் மாற்றப்படும் வீட்டுக்கு அண்மையிலுள்ள பள்ளியில் என் மகனின் சேர்க்கை குறித்து விசாரித்து வருவதற்காக, நானும் தம்பி ஒருவரும் மோட்டார் பைக்கில் சென்றிருந்தோம். விசாரித்து திரும்பும் வழியில் வண்டியில் பெட்ரோல் இல்லாமல் நின்று போய்விட்டது. அங்கிருந்த மதகில் அமர்ந்திருந்த நடுவயது மதிக்கத்தக்க இருவர், ‘பெட்ரோல் போட வேண்டுமெனில் 3 கிலோமீட்டர் அப்பாலுள்ள திருமுடிவாக்கத்துக்குத்தான் போகவேண்டும்’ எனக் கூறினார்கள். பின்னர் எங்களது சிரமத்தையும் தயக்கத்தையும் பார்த்துவிட்டு, அவர்களாகவே முன்வந்து, ‘அவர்களது வண்டியில் ஒரு லிட்டர் பெட்ரோல் இருக்கும்... அதில் அரை லிட்டர் தருவதாக’ கூறியதும் கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போலிருந்தது எனக்கு.

ஒரு தண்ணீர் பாட்டில் எடுத்து வந்து அதில் அரை லிட்டர் அளவு பெட்ரோல் பிடித்து என் வண்டியில் ஊற்றியபோது ‘ரொம்ப நன்றி... உங்கள் உதவியை மறக்கவே மாட்டேன். காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிதல்லவா’ என்றேன். ‘முப்பது வருஷத்துக்கு முன்னால ஆறாவதுல படிச்ச திருக்குறள எல்லாம் ஞாபகப்படுத்துறீங்களே... நீங்க டீச்சரா?’ என்றதற்கு தலையாட்டியபடி, ‘இந்தாங்க... உங்க வண்டிக்கு பெட்ரோல் போட்டுக்கங்க’ என நான் கொடுத்த நூறு ரூபாயை வாங்க மறுத்து, ‘வேண்டாம் மேடம்... டாக்டர், இன்ஜினியர், வக்கீல், கலெக்டர், ஏன் அரசியல்வாதி உள்பட எல்லோரையும் உருவாக்குற டீச்சர் நீங்க... உங்ககிட்ட பணம் வாங்கினால் எங்களுக்கு தூக்கம் இல்லாமல் போய்விடும்’ என பிடிவாதமாக மறுத்து விட்டனர்.

என்னோடு வந்த தம்பியிடம், ‘தானே முன்வந்து உதவும் எவ்வளவு நல்ல மனம் இவர்களுக்கு’ என்றேன். அவரோ, ‘இதெல்லாம் அவர்களுக்கு ெபரிதல்ல. எனக்கும் இது ஒன்றும் பெரிதாகத் தோன்ற வில்லை’ என்றார். ஆனால், என் மனதில் இது நெகிழ்வை ஏற்படுத்திய நிகழ்வாகவே இருக்கிறது. உதவி என்று வரும்போது தெரிந்தவர்கள் கூட மெதுவாக நழுவிக் கொள்வார்கள். என்னால் திரும்ப அவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. நான் அவர்களின் பிள்ளைகளுக்கு சொல்லித் தரும் ஆசிரியர் அல்ல...

அவர்கள் ஊர் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் கூட இல்லை என்பது அறிந்தும் பயன் கருதாமல் உதவிய அவர்களை எப்படி மறக்க முடியும்? புயல், வெள்ளம், பூகம்பம் போன்றபேரிடர் காலங்களில் சிதைந்து நொறுங்கிக்கிடக்கும் வீடுகளில் இருந்து கொள்ளளவுக்கு பதுக்குபவர்கள், உணவுப்பொருளை பதுக்குபவர்கள், வெளிநாட்டு வங்கிகளில் ஏழேழு தலைமுறைக்குகறுப்புப் பணத்தை பதுக்குபவர்களுக்கு இடையில் மொத்தத்தில் பதுக்கல் மயமான இந்த கலியுகத்தில் தாங்கள் பற்றாக்குறையில் இருந்தாலும் மற்றவரின் சிரமம் அறிந்து தானே முன்வந்து உதவும் இவர்களைப் போன்றோரின் ஈர மனதால்தான், இன்றளவும் உயிர்ப்புடன் சுழன்றுகொண்டிருக்கிறது பூமி.

முன்னிரவு மற்றும் விடியற்காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் பெண்களின் கழுத்துச் சங்கிலியை அறுத்துச் செல்வது... கையிலிருக்கும் சிறிய பணப்பையை
பிடுங்கிச் செல்வது... அலைபேசியை தட்டிவிட்டு கீழே விழுந்தாலும் எடுத்துக்கொண்டு ஓடிவிடுவது... இப்படி நூதன திருட்டுகள் நடந்து கொண்டிருப்பதை செய்தித்தாளில் படிப்பதோடு செவிவழிச் செய்தியாகவும் நிறையக் கேட்க முடிகிறது.சென்ற மார்கழி மாதம் அதிகாலையில் வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் கழுத்துச் சங்கிலியை அறுத்துச் சென்ற திருடன் ஒருவன் அடுத்த நாளும் அங்கே வந்து, ‘கவரிங் செயினைப் போட்டுகிட்டு எங்கள ஏமாத்துறீங்களாடி’ என சங்கிலியை தூக்கி எறிந்ததோடு, அப்பெண்ணின் கன்னத்திலும் அறைந்துவிட்டு தப்பி விட்டதாகவும், இந்நிகழ்வு அத்தெருவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் ஒருவர் கூறிய செய்தி எனக்கு விந்தையாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இதைக் கேட்டுக்கொண்டிருந்த என் மகன், ‘நீங்களும் தனியா வாக்கிங் போறீங்க.... உங்க பர்ஸ திருடிட்டுப் போயி...

ஒண்ணும் இல்லாம திரும்பி வந்து உங்களையும் ஒருநாள் அந்தத் திருடன் அடிச்சிடப்போறான். பாத்து  போய்ட்டு வாங்க’ எனச் சிரித்தான். 40 வயதுக்கு மேல் நாள்தோறும் நடைப்பயிற்சி அவசியம் என்றாலும் சில நாட்களில் நடக்க முடியாத சூழ்நிலை, பல நாட்கள் ‘சரி... நாளைக்குப் போகலாம்’ என்ற சோம்பேறித்தனம்... இவற்றைக் கடந்து பெரும்பாலான நாட்கள் திருவான்மியூர் - பாலவாக்கம் கடற் கரையில் அலையோசையோடு கடற்காற்று முகத்தில் மோத கை வீசி நடக்கும் அரிய தருணங்களில் ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்’ என்ற பாரதி பாடல் எங்கோ ஒலிப்பது போலிருக்கும்.

சில மாதங்களுக்கு முன் இரவு 8 மணிக்கு மேல் நடைப்பயிற்சி முடிந்து வீட்டுக்கு நான் திரும்பிக் கொண்டிருந்தபோது... ஓர் இளைஞன் மறைந்து மறைந்து என்னைத் தொடர்ந்து வருவதை நான் கவனித்தேன். நகைகள் எதுவும் அணியவில்லை என்பதால் கையில் இருக்கும் பர்ஸை பிடுங்கிக்கொண்டு ஓடிவிடும் எண்ணத்தில் அவன் இருக்கலாம் என யூகித்த நானோ... மெதுவாக நடந்து பின்னால் வந்துகொண்டிருந்த நாலைந்து பேருடன் சேர்ந்து நடந்தேன். அதன்பிறகு, எனக்கு முன்னே வேகமாக நடந்து சென்ற அவன் ஏதோ மனக்குழப்பத்திலோ, வேறு சிந்தனையாலோ திரும்புவதற்காக பின்னோக்கி அவனை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு லாரியை கவனிக்காமல் அடிபட்டுவிடும் நெருக்கத்தில் போனதை பார்த்த நான் ‘தம்பி...  லாரி... பின்னால வருது பாருங்க... விலகுங்க’ எனக் கத்தியதும், சுதாரித்து, ஒதுங்கி உயிர் தப்பினான். ஒருவேளை அடிபட்டு இறந்துவிட வேண்டும் என்பது கூட அவன் திட்டமாக இருக்குமோ என்றும் தோன்றியது எனக்கு.

ஓரிடத்தில் என்னுடன் வந்தவர்கள் வேறு சாலையில் திரும்பியதும் இவன் மீண்டும் என் பின்னால் வந்து ‘ரொம்ப தேங்க்ஸ் மேடம். எதையோ நெனச்சிகிட்டு வந்ததால கவனிக்கல... ஊருக்குப் போகணும் பணம் இல்ல... அதனாலதான்...’ என்றதும் அவனைப் புரிந்துகொண்டு என் பர்ஸில் இருந்து எடுத்து அவனிடம் நீட்டிய ரூபாய் நோட்டை தயக்கத்துடன் வாங்க மறுத்துவிட்டு, வேகமாக திரும்பி பின்னோக்கி நடந்தான். அது திருந்திய நடையாகத் தோன்றியது எனக்கு. மறுநாள் நான்செய்தித்தாளில் பார்த்த ‘கடலில் மூழ்கி இறந்து ஒதுங்கிய இளைஞனின் பிணம்’ அவனாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது. மிகுந்த மனத்தடுமாற்றத்துடன் இருந்த அந்த இளைஞன் என்ன ஆனான் என்ற வினாவும் அவனது வேகமான நடையும் இன்று வரையிலும் என்னைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

சுமார் பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கலாம்... ஏதோ ஒரு காரணத்துக்காக என் வகுப்பு மாணவி ஒருத்தியை குச்சியால் அடித்துவிட்டேன். அவளுக்கு ரொம்ப வலித்திருக்க வேண்டும். வெகு நேரம் அழுத அவளை அழைத்து, கண்களை துடைத்துவிட்டு, எங்கே பள்ளிக்கூடம் வராமல் தங்கிவிடுவாளோ எனப் பயந்து, ‘இனிமே உனக்கு அடியே கிடையாது’ என சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன். அடுத்த நாள் அவள் தன் தந்தையுடன் வருவதைப் பார்த்த நான் தலைமை ஆசிரியரிடம் கூறி, நம்மோடு தகராறு செய்ய வருகிறார்கள் என நினைத்தபடி நின்றிருந்த என்னிடம் வந்த அவளின் தந்தை, ‘வணக்கம் டீச்சர்’ என்றவாறு, நான் அடித்ததில் தடித்திருந்த தன் மகளின் கையை என்னிடம் காட்டி, ‘பாருங்கடீச்சர்...

தயவு செஞ்சி உங்க புள்ளயக்கூட இப்படி அடிச்சிடாதீங்க’ என்றவாறு எந்தப் பதிலையும் எதிர்பாராதவராக வேகமாகப் போய்விட்டார். என் முகத்தில் யாரோ உமிழ்ந்துவிட்டு போனதைப் போன்ற அவமானத்தை உணர்ந்தேன் நான். அந்த மாணவி அவளின் தந்தை இருவரும் என் நினைவுத் திரையில்அரசல்புரசலாக மங்கி வருகிறார்கள் என்றாலும் ‘தயவுசெஞ்சி உங்க புள்ளயக்கூட இப்படி அடிச்சிடாதீங்க’ என்ற அவரின் குரல்... என் மனச்செவியில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

நாவறண்ட நேரத்தில் குடிக்கத் தண்ணீர் கொடுத்தவர்கள், பசிக்கு சோறு போட்டுத் தந்தவர்கள், முதன் முதலில் கோவலன்- கண்ணகி கதையைக் கூறிய ஆரம்பப்பள்ளி ஆசிரியர், பள்ளியின் இடைவெளிப்பொழுதில் வாங்கித் தின்பதற்கு காசு இல்லாத குழந்தைகளுக்கும் சேமியா ஐஸ் கடனாகக் கொடுத்து ‘மறக்காம நாளைக்கு கொண்டு வந்து குடுத்துடணும்’ என பிள்ளைகளை நம்பி கடன் தந்த ஐஸ் வண்டிக்காரர்... இப்படி எத்தனை எத்தனையோ. நாம் திரும்பவும் பார்க்க முடியாது. ஆனால், என்றைக்கும் மறக்க முடியாத மனிதர்கள், நம் மனதோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவருடைய மனதிலும் வெவ்வேறு நிகழ்வுகளாக...

உதவி என்று வரும்போது தெரிந்தவர்கள்கூட மெதுவாக நழுவிக் கொள்வார்கள். என்னால் அவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என்பது அறிந்தும் பயன் கருதாமல் உதவிய அவர்களை எப்படி மறக்க முடியும்?

நாவறண்ட நேரத்தில் குடிக்கத் தண்ணீர் கொடுத்தவர்கள், பசிக்கு சோறு போட்டுத் தந்தவர்கள், முதன் முதலில் கோவலன் - கண்ணகி கதையைக் கூறிய ஆரம்பப் பள்ளி ஆசிரியர்,  பள்ளியின் இடைவெளிப்பொழுதில் வாங்கித் தின்பதற்கு காசு இல்லாத குழந்தைகளுக்கும் சேமியா ஐஸ் கடனாகக்  கொடுத்து ‘மறக்காம நாளைக்கு கொண்டு வந்து குடுத்துடணும்’ என பிள்ளைகளை நம்பி கடன் தந்த ஐஸ் வண்டிக்காரர்...

(மீண்டும் பேசலாம்!)