நீங்கதான்  முதலாளியம்மா!



விதம் விதமான இன்ஸ்கர்ட்!

புஷ்பாவதி தீனதயாளன்

‘உங்களுக்குப் பொருத்தமான சேலையைத் தேர்ந்தெடுக்கிறது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் அந்தச் சேலைக்கு மேட்ச்சிங்கான உள்பாவாடையைத் தேர்ந்தெடுக்கிறது. பாவாடைன்னதும் பலரும் புடவைக்கு மேட்ச்சான கலர்ல இருந்தா போதும்னு நினைக்கிறாங்க. அப்படியில்லை. ஒவ்வொருத்தரோட உடல்வாகுக்கு ஏத்த மாதிரியும், உடுத்தற சேலையோட மெட்டீரியலுக்கு ஏத்த மாதிரியும் விதம் விதமான பாவாடைகள் இருக்கு. அது தெரிஞ்சு சரியா செலக்ட் பண்ற போது புடவையில நீங்க இன்னும் அழகா தெரிவீங்க...’’  புதுத் தகவல் சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார் புஷ்பாவதி தீனதயாளன். தையல் கலைஞரான இவர், பெண்களுக்கான இன்ஸ்கர்ட் தைப்பதில் நிபுணி!

‘‘30 வருஷங்களா டெய்லரிங் துறையில இருக்கேன். குழந்தைங்கள்லேருந்து பெரியவங்க வரை எல்லாருக்குமான டிரெஸ் தைக்கத் தெரியும். ஒரு முறை ஒரு கடையில டிசைனர் உள்பாவாடைகளைப் பார்த்தேன். விலையைக் கேட்டதும் மயக்கமே வந்திருச்சு. சேலை வாங்கற காசைவிட அதிகமா சொன்னாங்க. அதுக்கப்புறம் அந்த மாதிரி பாவாடைகளை நாமளே ஏன் தைக்கக்கூடாதுனு  முயற்சி  பண்ண  ஆரம்பிச்சேன். கடைகள்ல விற்கற ரெடிமேட் பாவாடைகள் எல்லாருக்கும் கச்சிதமா பொருந்தும்னு சொல்ல முடியாது. ஜாக்கெட்டோ, உள்ளாடைகளோ கச்சிதமான அளவா இருக்கணும்னு பார்த்துப் பார்த்துப் போடறோம். பாவாடைகள் அப்படிக் கிடைக்கிறதில்லை. ஒருத்தரோட உடல்வாகு ஒல்லியா இருக்கும். இன்னொருத்தர் குண்டா இருப்பாங்க. கடைகள்ல கிடைக்கிற நாலஞ்சு அளவுகள்ல அவங்களுக்கானதைத் தேர்ந்தெடுத்துக்கிறதுதான் வழி.

ஆனா, நாமளே டிசைன்  பண்ணித்தைக்கிறப்ப  குண்டானவங்களை ஒல்லியா காட்டவும் ஒல்லியானவங்களை குண்டா காட்டவும் தச்சுக்கலாம். சிலருக்கு வயிற்றுப் பகுதி மட்டும் பெரிசா இருக்கும். அதை மறைக்கிற மாதிரி பாவாடையும் தைக்கலாம். இன்னிக்கு காலேஜ் பொண்ணுங்க கண்ணாடி மாதிரி மெல்லிசான மெட்டீரியல்ல புடவை கட்டறாங்க. அந்தப் புடவைகளுக்கு சாதாரண பாவாடைகளை கட்டினா அசிங்கமா தெரியும். புடவையோட அழகு மாறாதபடி, அதே கலர்ல சாட்டின் மெட்டீரியல்ல பாவாடை தச்சுப் போட்டாங்கன்னா ரொம்பப் பிரமாதமா இருக்கும். இது தவிர ஃபிஷ்கட்டுனு ஒரு மாடல் இருக்கு. அதுவும் இளம் பெண்களுக்கானது...’’ என்கிற புஷ்பாவதி, இப்படி 5 மாடல் பாவாடைகளைத் தைக்கிறார். தையல் மெஷின் உள்பட தேவையான பொருட்களுக்கும் சேர்த்து 5 ஆயிரம் முதலீடு போதும் என்கிற இவர், வெறும் அரை மணி நேரத்தில் ஒரு பாவாடையைத் தைத்து முடிக்க நம்பிக்கை தருகிறார்.

‘’கடைகள்ல 120 ரூபாய்லேருந்துதான் சாதாரண பாவாடையே ஆரம்பம். அதையே நாம 100, 110 ரூபாய்க்குத் தரலாம். ஃபிஷ்கட், சாட்டின் பாவாடைகளை எல்லாம் 250 ரூபாய்ல தொடங்கி 750 ரூபாய் வரை கூட விற்கலாம். 50 சதவிகிதம் லாபம் நிச்சயம். டிசைனர் புடவைகள் விற்கற கடைகள், பொட்டிக் மாதிரியான இடங்களோட பேசி வச்சுக்கிட்டு ஆர்டர் எடுத்துத் தச்சுக் கொடுக்கலாம். வருஷம் முழுக்க உங்களை பிஸியா வச்சிருக்கிற பிசினஸ் இது’’ என்கிறவரிடம் ஒரே நாள் பயிற்சியில் 5 மாடல் பாவாடைகளைத் தைக்கக் கற்றுக் கொள்ள தேவையான துணி யுடன் கட்டணம் 1,500 ரூபாய்.

வருஷம் முழுக்க உங்களை பிஸியா வச்சிருக்கிற பிசினஸ் இது!

எக்சலன்ட் எம்பிராய்டரி பெயின்ட்டிங்!

ஷோபனா

என்னதான் டிரெண்டு மாறினாலும் காலத்தால் அழியாதது எம்பிராய்டரிங். உள்ளூர் தையல் கலைஞர் முதல் சர்வதேச காஸ்ட்யூம் டிசைனர் வரை எம்பிராய்டரிங் வேலைப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இதற்கு ஆதாரம்.
எம்பிராய்டரி என்பது பார்வைக்கு எத்தனை அழகானதோ அதே அளவுக்கு காஸ்ட்லியானதும்கூட. தவிர, அதை முறையாகக் கற்றவர்களுக்கு மட்டுமே கை வருகிற கலையும்கூட!

சென்னையைச் சேர்ந்த கைவினைக் கலை ஆசிரியர் ஷோபனாவிடம் இதற்கு மாற்று வழி இருக்கிறது. எம்பிராய்டரி தெரியாதவர்களுக்கும் சுலபமாகக் கைவரக்கூடிய எம்பிராய்டரி பெயின்ட்டிங் இதற்கு சரியான தீர்வு என்கிறார் அவர்.‘‘பி.ஏ. கார்ப்பரேட் முடிச்சிருக்கேன். ஆபீஸ் வேலை பார்த்திட்டிருந்தேன். அடிப்படையில கிரியேட்டிவான ஆளான எனக்கு அந்த வேலை பிடிக்கலை. சின்ன வயசுல கத்துக்கிட்ட கைவினைக் கலைகளை மறுபடி தூசி தட்டிப் பழக ஆரம்பிச்சேன். டெய்லரிங்கும் தெரியும். டெக்னிகல் டீச்சர்ஸ் கோர்ஸ் முடிச்சேன். இப்ப ஒரு ஸ்கூல்ல ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ் டீச்சரா வேலை பார்த்திட்டிருக்கேன். எம்பிராய்டரி கத்துக் கொடுக்கிறப்ப அது எல்லாருக்கும் அத்தனை சுலபமா வர்றதில்லைங்கிறதைப் பார்த்தேன். அதுக்கு ரொம்பப் பொறுமையும் நுணுக்கமும் தேவை. அப்பதான் நான் படிச்ச லிக்யுட் எம்பிராய்டரி முறையை வச்சு எம்பிராய்டரி பெயின்ட்டிங்கை சொல்லித் தர ஆரம்பிச்சேன்.
 
எம்பிராய்டரி  பெயின்ட்டிங்  பண்ண முறைப்படி தையலோ, ஓவியமோ தெரியணும்னு அவசியமே இல்லை. சேலையோ, சல்வாரோ, ஜாக்கெட்டோ... எதுல வேணாலும் அளவுகள் எடுத்து நமக்கு வேண்டிய டிசைனை வரைஞ்சுக்கிட்டு, அதுக்கு மேல கலர்ஸ் வச்சு எம்பிராய்டரி டிசைன்ஸை கொண்டு வரலாம். இது எம்பிராய்டரியே இல்லை, பெயின்ட் பண்ணினதுதான்னு நீங்க சத்தியம் பண்ணிச் சொன்னாலும் மத்தவங்க நம்ப மாட்டாங்க. அந்தளவுக்கு அச்சு அசல் எம்பிராய்டரி மாதிரியே இருக்கும்.

ஃபேப்ரிக் கலர்ஸ், கிளிட்டர்ஸ், துணி, எம்பிராய்டரி ஃபிரேம்னு வெறும் 300 ரூபாய் முதலீடு போட்டா போதும். ஒரு ஜாக்கெட்டுக்கு எம்பிராய்டரி பெயின்ட்டிங் பண்ணிக் கொடுக்க 250 ரூபாய் வாங்கலாம். டிசைனையும் அளவையும் பொறுத்து சில ஆயிரங்கள் வரை வாங்க முடியும். இந்த பெயின்ட்டிங் துவைச்சாகூட போகாது. சில்வர், கோல்டு, ரேடியம்னு எல்லா கலர்களையும் இதுல கொண்டு வர முடியும்கிறது இன்னொரு சிறப்பம்சம். கடைகள்ல பத்தாயிரம், இருபதாயிரம்னு கொடுத்து வாங்கற ஆடம்பரமான டிசைனர் சேலைகளையும் சல்வாரையும் சில ஆயிரம் ரூபாய் செலவுலயே எம்பி ராய்டரி பெயின்ட்டிங் பண்ணி உபயோகிக்கலாம்’’ என்கிறார் ஷோபனா.இவரிடம் இந்தப் பயிற்சியை ஒரே நாளில் செய்யத் தேவையான கலர்களுடன் சேர்த்துக் கற்றுக் கொள்ளக் கட்டணம் 500 ரூபாய்.

இது எம்பிராய்டரியே இல்லை, பெயின்ட் பண்ணினதுதான்னு நீங்க சத்தியம் பண்ணிச் சொன்னாலும் மத்தவங்க நம்ப மாட்டாங்க...

கிளாசிக் கிளாஸ் ஃபியூஷன் ஒர்க்!


கனிமொழி

இசை முதல் அறுசுவை உணவு வரை எல்லாவற்றிலும் ஃபியூஷன் கலாசாரம் வந்து விட்டது. வீட்டு அலங்காரம் மட்டும் விதிவிலக்கா என்ன? எத்தனை காலத்துக்குத்தான் மரச்சட்டங்களையும் மாடர்ன் ஓவியங்களையுமே மாட்டி வைத்து சுவர்களை அழகுப்படுத்துவது? ஒரு மாறுதலுக்கு கண்ணாடியில் செய்கிற ஃபியூஷன் ஒர்க்கால் உங்கள் இல்லங்களையும் அலுவலகங்களையும் அழகுப்படுத்துங்கள் என்கிறார் சென்னை, வடபழனியைச் சேர்ந்த கனிமொழி!

‘‘கண்ணாடியில செய்யற கிளாஸ் பெயின்ட்டிங்தான் சமீப காலம் வரைக்கும் பிரபலமா இருந்தது. ஆனா, இப்போ முகம் பார்க்கிற கண்ணாடியில, ப்ளெயின் கண்ணாடித் துண்டுகளை டிசைன் செய்து ஒட்டிச் செய்யற ஃபியூஷன் வேலைப்பாட்டுக்கு வரவேற்பு அதிகமாக ஆரம்பிச்சிருக்கு. வீட்டோட வரவேற்பறையில கண்ணாடி மாட்டி வைக்கிறது அழகுக்கு மட்டுமில்லாம, வாஸ்துப்படி  நல்லதுங்கிற நம்பிக்கையும் பலருக்கு உண்டு. வெறும் கண்ணாடியை மாட்டி வைக்கிறதுக்குப் பதில் இப்படி ஃபியூஷன் ஒர்க்கை மாட்டி வைக்கிறபோது வீட்டோட அழகு அதிகரிக்கிறதைப் பார்க்கலாம். அந்தக் கண்ணாடியில படற வெளிச்சமானது வீட்டுக்குள்ள பிரதிபலிக்கிறது இன்னும் அழகா இருக்கும். இதையே முகம் பார்க்கிற கண்ணாடியாகவும் உபயோகிக்கலாம். முகம் பார்க்கும் கண்ணாடி, ப்ளெயின் கண்ணாடி, கிளிட்டர் கலர்ஸ் போன்ற எல்லாத்துக்கும் சேர்த்து 1,500 ரூபாய் முதலீடு போதுமானது’’ என்கிறார் கனிமொழி.‘‘ஒரு நாளைக்கு 2 ஃபியூஷன் ஒர்க் பண்ணிடலாம்.

1,250 ரூபாய் செலவு பண்ணினா, அதை 1,500 ரூபாய்க்கு விற்கலாம். டூரிஸ்ட் அதிகம் வரக்கூடிய சுற்றுலா ஏரியா, ஆர்ட் கேலரிகள்ல 100 சதவிகித லாபத்துக்குக் கொடுக்கலாம். கல்யாணம், கிரஹப்ரவேசம், அலுவலகத் திறப்பு விழானு எந்த நல்ல நிகழ்ச்சிக்கும் அன்பளிப்பா கொடுக்க ஏற்றது. எத்தனை வருஷங்கள் ஆனாலும் அப்படியே இருக்கும். எல்லாத்தையும் மீறி நம்ம கைப்பட உருவாக்கின அன்பளிப்பைக் கொடுத்த ஆத்ம திருப்தியும் கிடைக்கும்’’ என்கிறவரிடம், 2 நாள் பயிற்சியில் இந்த கிளாஸ் ஃபியூஷன் ஒர்க்கை கற்றுக் கொள்ளலாம். தேவையான பொருட்களுடன் சேர்த்துக் கட்டணம் 2,500 ரூபாய்.

கண்ணாடியில படற வெளிச்சமானது வீட்டுக்குள்ள பிரதிபலிக்கிறது இன்னும் அழகா இருக்கும்.

- ஆர்.வைதேகி

படங்கள்: ஆர்.கோபால்