விக்கிபீடியா வித்தகிகள்!



விரல் நுனியில் உலகம் இருக்கிறது என்பது வெறுமனான கூற்றல்ல. எதிர்காலத்தைத் தவிர்த்து நிகழ், இறந்த காலங்களின் அத்தனை சாட்சியங்களும் இணையத்தில் குவிந்து கிடக்கின்றன. எத்துறையாயினும் அதுகுறித்த தகவல்களுக்கு இணையப் பயனாளர்கள் முதலில் நுழைவது விக்கிபீடியாவுக்குள்தான். உலக அளவில் பல்வேறு மொழிகளில் இயங்கி வரும் விக்கிபீடியா, தமிழ் தளத்தில் எண்ணற்ற கட்டுரைகளை தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. சரி... இத்தகவல்களையெல்லாம் திரட்டி எழுதுபவர்கள் யார்? அவர்களை ‘விக்கிபீடியர்கள்’ என்று குறிப்பிடுகின்றனர்.

தன்னார்வமுள்ள யார் வேண்டுமானாலும் விக்கிபீடியர் ஆக முடியும்! தமிழ் விக்கிபீடியா வலைத்தளத்தில் தீவிரமாகப் பங்களித்து வரும் சில பெண் விக்கிபீடியர்களைப் பேட்டி கண்டோம்...சந்திரவதனா செல்வகுமாரன் புலம்பெயர் இலங்கைத் தமிழர், ஜெர்மனி.

‘‘இலங்கையில் பருத்தித்துறை அருகே அத்தியடியில்தான் பிறந்தேன். எனது அப்பா, அம்மா இருவருமே தீவிரமாக வாசிக்கக் கூடியவர்கள் என்பதால் வாசிப்புப் பழக்கம் எனக்கு சிறுவயதிலிருந்தே வந்ததுதான். பொறியியல், மருத்துவம் என்று பல கனவுகள் இருந்தாலும் காதலித்து திருமணம் புரிந்த பிறகு குடும்பப் பொறுப்புகள் நிறைந்து விட்டதால் அது கனவாகவே போய்விட்டது. இணைய அறிமுகம் கிடைத்த பிறது ‘மனஓசை’ என்றொரு வலைப்பூவை ஆரம்பித்து எழுதத் தோன்றியதையெல்லாம் எழுதிக் கொண்டிருந்தேன். ‘கொக்கான்’ என்ற விளையாட்டைப் பற்றி மனஓசை வலைப்பூவில் நான் எழுதிய பதிவைப் பார்த்த சகோதரர் மயூரன் என்பவர்தான் அதை விக்கிபீடியாவில் எழுதும்படி சொன்னார்.

2006ம் ஆண்டு அந்தக் கட்டுரையை விக்கிபீடியாவில் தரவேற்றினேன். விக்கி சென்றடைகிற பரவலான பரப்பு என்னை மேலும் எழுதத்தூண்டியது. எழுத்தாளர்கள், கலைஞர்கள், விடுதலைப் போராளிகள், நூல்கள், பாடல்கள் என்று பலதரப்பட்ட துறைகளில் தகவல்களைத் தேடி எடுப்பது எனக்கு சுவாரஸ்யமான பணியாக இருக்கிறது. ஆர்வத்தோடும் தீவிரத்தோடும் நிறைய நேரத்தை செலவழித்து தகவல்களைத் திரட்டுவேன். ஜெர்மன் மொழி மற்றும் ஜெர்மானியர் பற்றிய தகவல் தேவைப்படும் நிலையில் இங்குள்ள நூலகங்களுக்குச் சென்று தகவல்களை திரட்டுவேன். பொதுவான தகவல்களானால் இன்றைக்கு இணையத்திலேயே பல தகவல்கள் பரவிக் கிடக்கின்றன, அதிலிருந்து பெற்றுக் கொள்வேன்.

விக்கிபீடியாவைப் பொறுத்தவரை எந்த ஒரு தகவலையும் அனுமானத்தில் சொல்லி விட முடியாது. எல்லாவற்றுக்கும் சான்று வேண்டும் என்பதால் நூல்களும் இணையமும் மட்டுமே எங்களுக்கான ஆதாரம். வலைப்பூ மற்றும் பத்திரிகைகளில் நான் எழுதிய கட்டுரைகளில் சிலவற்றைத் தொகுத்து ‘மன ஓசை’ என்கிற நூலை 2007ம் ஆண்டு வெளியிட்டேன். அந்நூல் திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதும் ஜெர்மனியில் நடைபெற்ற போட்டிகளில் சில பரிசுகளையும் வென்றிருக்கிறது. அதற்கு மேற்கொண்டு நான் எழுதிய கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து அடுத்த நூலை தொகுக்கவிருக்கிறேன். இந்தியாவில் தயாராகிக் கொண்டிருக்கும் சாகித்ய அகாடமி தொகுப்பு நூலில் எனது “கல்லட்டியல்” என்கிற சிறுகதையும் இடம்பெறுகிறது. ஜெர்மானியர்கள் தமிழ் மொழியைக் கற்றிருக்கிறார்கள், அது குறித்து பதிவும் செய்திருக்கிறார்கள்.

இது பற்றியான நூல்கள் ஜெர்மனியில் கோலன் நகர நூலகத்தில் இருக்கின்றன. அங்கு சென்று தகவல்களைத் திரட்டி ஜெர்மானியர்களுக்கும் தமிழுக்குமான உறவு குறித்து விரிவான கட்டுரை எழுத வேண்டும் என்பதுவே என் நெடுநாள் ஆசை’’ என்கிறார். நந்தினி கந்தசாமிமென்பொருள் பணியாளர், ஆத்தூர்.

‘‘எனக்கு வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டதற்கு தமிழாசிரியர்களாக இருந்த எனது அம்மாவும் தாத்தாவும்தான் காரணம். பள்ளிக் காலத்தில் பெரும்பாலும் கதைப் புத்தகங்கள் வாசித்தேன். மாவீரன் நெப்போலியன் பற்றி தாத்தா சொன்ன வரலாற்றைக் கேட்ட பிறகு வரலாறு மீது ஆர்வம் வந்தது. தொடர்ந்து வரலாற்று நூல்களை வாசித்து வந்தேன். இளங்கலை இயற்பியல் படித்து முடித்த சமயம்தான் விக்கிபீடியா எனக்கு அறிமுகமானது. 2013ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2014ம் ஆண்டு மே மாதம் வரையிலும் நடக்கும் தொடர் கட்டுரைப் போட்டியின் அறிவிப்பைப் பார்த்தேன். கலைக்களஞ்சிய நடைமுறைகளுக்குட்பட்டு மாதந்தோறும் அதிக கட்டுரைகள் எழுதுவோருக்கு எண்ணிக்கை அடிப்படையில் மூன்று பரிசுகளும் 7,500 பைட் அளவில் பெரிய கட்டுரை எழுதுபவர்களுக்கு சிறப்புப் பரிசு எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜூன் மாதம் ரோமாபுரி குறித்த கட்டுரையை எழுதினேன்.

அதன் பிற்பாடு ஆகஸ்ட் மாதம் எப்படியாயினும் பரிசை வென்றுவிட வேண்டும் என்கிற குறிக்கோளோடு 30 கட்டுரைகளை எழுதி முதல் பரிசு பெற்றேன். அப்பரிசு கொடுத்த உந்துதலில் தொடர்ந்து பங்காற்றி வந்தேன். அத்தொடர் போட்டியில் இரண்டு முதல் பரிசும் இரண்டு இரண்டாம் பரிசும் பெற்றேன். வரலாறு, இயற்பியல் குறித்த கட்டுரைகளை அதிகம் எழுதி வருகிறேன். சுற்றுலா மற்றும் பயணம் செய்யும்போது கண்ணில் படுவனவற்றையெல்லாம் என் கேமராவில் படம் பிடித்து விடுவேன். குடகு மலை சென்ற போது காபித் தோட்டம், மூணாறு சென்றிருந்த போது தேயிலைத் தோட்டத்தைப் படம் பிடித்தேன்.

புகைப்படங்களைத் தரவேற்று வதற்காக இருக்கும் விக்கி பொதுவகத்தில் எனது புகைப்படங்களைத் தரவேற்றி வருகிறேன்.மனிதர்களுக்கு போலியோ போன்று
நாய்களுக்கும் பிறந்த 45வது நாளில் தடுப்பூசி போட வேண்டும். இல்லையெனில் ‘கெனெய்ன் டிஸ்டம்பர்’ எனும் நோய் ஏற்பட்டு கால்கள் செயலிழந்து விடும். நாங்கள் வளர்த்த நாய் ஒன்று கெனெய்ன் டிஸ்டம்பர் நோயால் இறந்து போனது. நோயால் பாதிக்கப்பட்டிருந்த நாளிலிருந்து இறக்கும் நாள் வரை பல புகைப்படங்கள் எடுத்து வைத்திருக்கிறேன். கெனெய்ன் டிஸ்டம்பர் குறித்து விரிவாக ஒரு கட்டுரை எழுதும்போது நாய் வளர்ப்போருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்படும். தொழில்நுட்பம் குறித்தான கட்டுரைகள் தமிழில் மிகவும் குறைவாக இருக்கிறது. ஆங்கிலச் சொற்களுக்கான கலைச் சொற்களைக் கொண்டு கட்டுரை எழுதும் முயற்சியில் இப்போது இறங்கியிருக்கிறேன்’’ என்று சொல்லும் நந்தினிக்கு 2013ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் விக்கிபீடியா பத்தாவது ஆண்டு விழாவின்போது சிறந்த பங்களிப்பாளருக்கான பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டிருக்கிறது.

பூங்கோதை ஓய்வுபெற்ற ஆசிரியர், கோவை.

‘‘கோவையில் உள்ள அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி 2009ம் ஆண்டு ஓய்வுபெற்றேன்.  33 ஆண்டுகாலம் பரபரப்பாக பணியாற்றி விட்டு வெறுமனே இருப்பது வெறுப்பைத் தந்தது. எனது இரண்டாவது மகன் பாலா விக்கிபீடியாவில் தொடர்ந்து எழுதி வந்தார். அவர்தான் எனக்கு விக்கிபீடியாவை அறிமுகப்படுத்தி வைத்து எழுதும்படி சொன்னது. இணையப் பயன்பாடை சில நாட்களிலேயே கற்றுக் கொண்டேன். 2010ம் ஆண்டு விக்கிபீடியாவுக்கு வந்த புதிதில் எழுத்துப் பிழை, வாக்கிய அமைப்புகளை சரி செய்வது போன்ற தொகுக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தேன். ‘பரவளையம்’,  ‘நீள்வட்டம்’, ‘நிகழ்தகவு’, ‘தேற்றங்கள்’ என தொடர்ச்சியாக கணிதம் சார்ந்த கட்டுரைகளை எழுத ஆரம்பித்தேன்.

புள்ளியியல் குறித்தும் எழுதி வந்தேன். விக்கிபீடியாவின் கிளைத் தளமான விக்ஷனரி என்னும் அகராதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை பேசி பதிவேற்றியுள்ளேன். கோயில்கள் மற்றும் வெளியூர்களுக்குச் செல்லும்போது ஆவணப்படுத்த வேண்டியவற்றை புகைப்படம் எடுத்து விக்கி பொதுவகத்தில் தரவேற்றி வருகிறேன்.

பெண்ணியம் குறித்து நிறைய எழுத வேண்டும் என்கிற ஆவலும் தேடுதலும் இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரைக்கும் 500க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகுப்புப் பணிகளையும் மேற்கொண்டிருக்கிறேன். நமது அடுத்த தலைமுறைக்கு நம்மால் இயன்ற கைம்மாறாகவே இப்பணியினைப் பார்க்கிறேன்’’ என்று பூரித்துச் சொல்லும் பூங்கோதை 2012ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற விக்கிமேனியா மாநாட்டுக்கு தமிழ் விக்கிபீடியா சார்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பார்வதி இடைநிலை ஆசிரியர், சேலம்.

‘‘சேலம் அருகே கந்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6-8ம் வகுப்புகளுக்கு தமிழ் பாடம் பயிற்றுவிக்கிறேன். 2011ம் ஆண்டு மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக வை.மு.கோதைநாயகி அம்மாள் பற்றி இணையத்தில் தேடினேன். அப்போது விக்கிபீடியா தளத்தில் அவரைப் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவான அளவிலேயே இருந்தது. கட்டுரையில் கூடுதல் தகவல்களை சேர்க்க முடியும் என்பதை அறிந்து என்னிடம் இருந்த தகவல்களையும் இணைத்தேன். அதன் பிறகு பிழைத்திருத்தம், வாக்கிய ஒழுங்கமைப்பு செய்து வந்தேன். ஒரு குறிப்பிட்ட துறைக்குள் மட்டுமில்லாமல் எல்லாத் துறை சார்ந்தும் எழுத வேண்டும் என்பது என் விருப்பம். 108 வைணவத் திருத்தலங்கள், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழர் இசை குறித்து 600க்கும் மேற்பட்ட கட்டுரைகளை மூலநூல்களை அடிப்படையாக வைத்து எழுதியிருக்கிறேன். சேலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விக்கிபீடியாவில் பங்காற்றுவது குறித்தான பயிற்சிகளையும் வழங்கியிருக்கிறேன்.

விக்கி பொதுவகத்தில் தமிழர் வாழ்வியல் குறித்து நான் எடுத்த 700க்கும் மேற்பட்ட புகைப்படங்களை தரவேற்றியிருக்கிறேன். நான் பங்காற்றுவதோடு மட்டுமின்றி எனது மகள் அபிராமி நாராயணனுக்கும் இதில் பங்காற்றுவதன் அவசியம் குறித்து விளக்கினேன். ராமாயணக் கதாபாத்திரங்கள் மற்றும் சில திரைப்படக்கட்டுரைகளை அவர் எழுதியிருக்கிறார். ஆங்கில விக்கிக்கு இணையாக தமிழ் விக்கிபீடியாவை கொண்டு வரவேண்டும் என்கிற முனைப்பு எங்கள் எல்லோரிடமும் இருக்கிறது’’ என்று நம்பிக்கையை பிரகாசிக்கும் பார்வதி விக்கிபீடியா நிர்வாகிகளுள் ஒருவர். ஹாங்காங்கில் நடைபெற்ற விக்கிமேனியா மாநாட்டிலும் கலந்து கொண்டுள்ளார்.

செங்கைச்செல்வி குடும்ப நிர்வாகி, சென்னை.

‘‘என் கணவர் செங்கை பொதுவன் தமிழ் பேராசிரியர், தமிழ்மொழி தொடர்பாக விக்கிபீடியாவில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ‘தமிழக நாட்டுப்புற விளையாட்டு’, ‘திருக்குறள் பாவுரை’, ‘கடவுள் நினைவுகள்’, ‘அண்ணாமலை ரெட்டியார் காவடி சிந்து உரை’ என்று சில நூல்களும் எழுதியிருக்கிறார். எட்டாம் வகுப்பு வரையே படித்திருந்த என்னை திருமணம் செய்து கொண்ட பிறகு எம்.ஏ., எம்.எட்., பி.லிட் போன்ற பட்டப் படிப்புகளை படிக்க வைத்தார். 2014ம் ஆண்டு எனக்குத் தட்டச்சு கற்றுக் கொடுத்து விக்கிபீடியாவை அறிமுகப்படுத்தியதும் அவர்தான். விக்கிமூலத்தில் 12-17ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த 36 கவிஞர்கள் எழுதிய 1,291கவிதைகளை தரவேற்றினேன். தொடர்ந்து சங்கநூல்கள், காப்பியங்களை தட்டச்சு செய்து விக்கிமூலத்தில் பதிந்து வருகிறேன். பைசாச மொழியில் குணத்தியர் எழுதிய பிரகக்கதை ராமாயணத்தைப் போலவே ஆறு காண்டங்களைக் கொண்டுள்ளது.

கொங்கு வேளிர் என்பவர்தான் அதை தமிழில் பெருங்கதை என்று மொழிபெயர்த்தார். உஞ்சைக் காண்டம், இலாவன காண்டம், மகத காண்டம், வத்தக காண்டம், நரவான காண்டம், துறவு காண்டம் என ஆறு காண்டங்களையும் தற்போது தரவேற்றிக் கொண்டிருக்கிறேன். எங்களது 5 மகள்களுக்கும், ஒரு மகனுக்கும் மணமுடித்து வைத்து விட்டோம். குடும்பப் பொறுப்புகளை முடித்துக் கொண்ட பிற்பாடு சமூகப் பொறுப்புணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறார்.

விக்கிபீடியாவில் பங்கேற்பது எப்படி? விளக்குகிறார் விக்கிமீடியா இந்தியாவின் திட்ட இயக்குநர் ரவிசங்கர்...

 ‘‘உலகில் அதிகம் பார்க்கப்படும் ஐந்து வலைத்தளங்களில் விக்கிபீடியாவும் ஒன்று. எவ்வித லாபநோக்கங்களுமற்று சமூக நலனை மட்டுமே அடிப்படையாக வைத்து 2001ம் ஆண்டு விக்கிபீடியா தொடங்கப்பட்டது. உலக அளவில் உள்ள விக்கிபீடியர்களில் பெண்கள் பத்து சதவிகிதம் பேரே இருக்கின்றனர். பெண்கள் தொடர்பான கட்டுரைகளும் அரிதாகவே இருக்கின்றன. இந்நிலை மாற வேண்டுமென்றால் தன்னார்வமுள்ள பெண்கள் தங்களது பங்களிப்பை செலுத்த வேண்டும். பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற அடிப்படைத் தகவல்களைக் கொண்டு பயனர் கணக்கு தொடங்கலாம். தளத்தினுள்ளேயே கட்டுரை எழுதுபவர்களுக்கு வழிகாட்டும் குறிப்புகள் இருக்கின்றன.

அதைப் படித்து விட்டு எழுதும்போது விக்கிபீடியா நடைமுறைகளுக்கு ஏற்றாற்போல் எழுத முடியும். ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் கட்டுரையில் பிழைத்திருத்தம், வாக்கிய ஒழுங்கு மற்றும் கூடுதல் தகவல்களை சேர்க்க விரும்புபவர்களுக்கு பயனர் கணக்கு இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. விக்கிபீடியாவுக்கு நீங்கள் செலுத்துகிற பங்களிப்பு இந்த தலைமுறைக்கும் இனி வரப்போகும் சந்ததி யினருக்கும் பேருதவியாக இருக்கும்’’.

- கி.ச.திலீபன்